என் மலர்
மதுரை
- மீனாட்சி-சொக்கநாதர்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி - சொக்கநாதர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அபிஷேகம்
பால், தயிர் சந்தனம், சீயக்காய், திராட்சை, தேன், நெய், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடை பெற்றது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் சங்கர் பட்டர் செய்தார். அப்போது மாணிக்க வாசகரின் திரு வெண்பாவை பாடல்களை பக்தர்கள் பாடினர்.
ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி யை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவ ருக்கும் திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப் பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கன்னி விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தார்.
- வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலைதடுமாறி காவலாளி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவ கத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவி னர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.
மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது வீரணன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் தவறி தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலயே பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி செய்தனர்.
- விருதுநகர் தம்பதியை கடத்தி சித்ரவதை செய்தது தெரியவந்தது.
மதுரை
விருதுநகர் மாவட்டம் நல்லமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 38). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செட்டிகுளத்தை சேர்ந்த சிலர் அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது ஜேசுராஜா அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் உள்ளதாகவும், எளிதாக அரசு வேலை பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செட்டிகுளத்தைச் சேர்ந்த பிச்சைமணி (50), அருண், பச்சைகோப்பன்பட்டியை சேர்ந்த அஜித்குமார், பசுமலையை சேர்ந்த பால்சாமி, அவரது மகன்கள் தீபன், முத்துக்குமார் ஆகியோர் அரசு வேலைக்காக ஜேசுராஜாவுக்கு ரூ. 17 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கித்தரவில்லை.
இதனால் அவர்கள் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். இதில் ஜேசுராஜா ரூ. 5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
பணத்தை பறிகொடுத்த அவர்கள் ஜேசுராஜாவை கடத்த திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று நல்லமங்கலத்தில் ஜேசுராஜா தனது 2-வது மனைவி சங்கரேஸ்வரியுடன் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் கணவன்-மனைவியை மிரட்டி காரில் கடத்தியது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டிகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியை அடைத்து வைத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக பணம் கேட்டு ஜேசுராஜா-சங்கரேஸ்வரியை அந்த கும்பல் சித்ரவதை செய்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜேசுராஜா பலமுறை முயன்றும் முடியவில்லை.
சம்பவத்தன்று கடத்தல் கும்பல் வெளியே சென்றி ருந்த நேரத்தில் ஜேசுராஜா தன்னிடம் இருந்த போன் மூலம் முதல் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செக்கானூரணி போலீ சார் வீட்டின் கதவை உடைத்து ஜேசுராஜா-சங்கரேஸ்வரியை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மேற்கண்ட 6 பேரையும் தேடி வருகின்றனர்.
- மேலூரில் முத்திரையிடாத 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தொழிலாளர்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை
மேலூர், திருச்சி மெயின்ரோடு, செக்கடி, தினசரி மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு முத்திரையில்லாத தராசுகள் பயன்படுத்தப்படுவதாக தொழிலாளர்துறைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படி உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முத்திரையிடாத 18 எலக்ட்ரானிக் தராசு, 24 மேசைத்தராசு, 2 விட்ட தராசு, 35 இரும்பு எடைக்கற்கள், 15 உழக்குகள், ஒரு ஊற்றல் அளவை என மொத்தம் 95 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக பட்சத்தைவிட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்கள் விற்ற 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழி செல்வி கூறுகையில், முத்திரையிடாத, தரமற்ற எடை அளவுகளை பயன்ப டுத்துதல், எடைகுறைவு, சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது உள்பட நுகர்வோர் நலன் பாதிக்கும் வகையில் செயல்படும் வியாபாரிகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இது போல தவறு செய்தால், வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் தராசு முத்திரையிடும் பணிகள் labour.tn.gov.in இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வியாபாரிகள் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தராசு முத்திரையிடுவதற்கான நாள் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் சிரமமின்றி முத்திரையிட்டு பயன்பெறலாம் என்றார்.
- போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன.
மதுரை:
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டும் வகையில் தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்து மக்களாலும் வரவேற்கப்படும் சிறந்த விளையாட்டாகும்.
அதில் முக்கியமாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் கழித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை (15-ந்தேதி) தினத்தில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் ஆன்லைன் மூலம் இதற்கான பதிவுகள் தொடங்கப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, தடுப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யான்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந்தேதி அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து, அதன்படி உரியவர்களுக்கு எவ்வித பாகுபாடின்றி டோக்கன்கள் வழங்கப்படும்.
போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் கார் பரிசளிக்கப்படுகிறது.
இது தவிர காளைகளை அடக்குபவர்களுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிறந்த காளைகளுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். சிறந்த வீரர் மற்றும் காளைகளுக்கு அவர் பரிசு வழங்குகிறார்.
அலங்காநல்லூரை போல பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கிராம கமிட்டிகளுடன் இணைந்து அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை.
- டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மதுரை:
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மது விற்பனைக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது.
எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், வாங்கவும் லைசென்சு பெறுவது அவசியம் என வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, டாஸ்மாக் விற்பனை நேரத்தை முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது 10 மணி நேரமாக குறைத்துள்ளோம். மது விற்பனையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை பலகட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பய உணர்வை ஏற்படுத்துவதற்காக சட்டரீதியான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் மது அருந்தும் விஷயத்தில் மிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. குறிப்பாக 21 வயதுக்கு உள்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பது வருந்தத்தக்கது.
எனவே மது விற்பதையும், வாங்குவதையும் கட்டுப்படுத்தி, மது-போதை பழக்கத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மது விற்பனை மூலம் மாநில அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகள் பெருகி வருகின்றன. இதனால் தனிநபர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கிறது.
பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், பெண்கள் என அனைவரும் மதுக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு, உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே மது வாங்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி மதுபாட்டில்களின் லேபில்களில் உரிய விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். அதேபோல "மது அருந்துவது தீங்கு விளைவிக்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்" என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் பெரிதாக அதில் பிரசுரிக்க வேண்டும்.
டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை. இதனால் மது அருந்துதல் பெருமளவில் குறையவில்லை. மாணவர்களும், 21 வயதுக்குட்பட்ட நபர்கள் கூட மது அருந்துவதால், மாநிலத்தின் சமூக -பொருளாதார சூழல் கணிசமாக பாதித்து, அதன் விளைவாக, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், சமூக கட்டமைப்பை உடைக்க வழிவகுக்கிறது என நாங்கள் கருதுகிறோம். இளம் தலைமுறையினர் மது அருந்துவது அவர்களுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் நீண்ட காலத்துக்கு மிகதீங்கானது.
எனவே மதுவினால் ஏற்படும் துஷ்பிரயோகங்களை அடையாளம் கண்டு உடனடியாக அழிப்பது முக்கியம். மது ஒழிப்பை சமூக- பொருளாதார, பொது சுகாதார பிரச்சினையாக கருத வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளும் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதை இந்த கோர்ட்டு மறந்து விடவில்லை. இருந்தபோதும் பொதுநலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கிறோம். அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், வாங்குவதற்கும் உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது, மதுபாட்டில்களில் உரிய விதிமுறைகள் இடம் பெறச் செய்வது, புகார்களை தமிழில் பதிவு செய்வதற்கு மது பாட்டில் லேபிள்களை தமிழில் அச்சிடுதல், விலைப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் அனைத்து வாடிக்கையாளர்களும் அறியும் வகையில் இடம் பெறச்செய்வது.
டாஸ்மாக் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வது, 21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்வது.
மேற்கண்டவற்றுடன் பொது நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
- மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
- சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்ப ட்டன. அப்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனை த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக் டர் அனீஷ்சேகர் வெளி யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள், 226 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,35,238 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆக உள்ளது. இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள். 226 பேர் 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் இன்று வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 38,509 பேர், புதிதாக சேர்க்கப்பட் டுள்ளனர். அடுத்தபடியாக 23,954 பேர் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள் ஆகியவற்றின்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 3,28,270 பேர் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ள னர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனைபேரில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
- மதுரை டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் காசிமாயன் (வயது 53). இவர் பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுக சந்தியில் உள்ள டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காசிமாயன் சம்பவத்தன்று இரவு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மதுபானம் வாங்கினார்கள்.
இதற்கான பணத்தை அவர்கள் தரவில்லை. எனவே காசி மாயன் தட்டி கேட்டார். அப்போது அந்த கும்பல் மாமூல் கேட்டு மிரட்டியது. இதற்கு அவர் தர மறுத்து விட்டார். எனவே ஆத்திரம் அடைந்த 2 பேர் கும்பல், காசிமாயனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.
மதுரையில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை 2 பேர் கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனைபேரில், திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றிய போலீசார், அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் காசிமாயனை தாக்கிய கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு திலகர் திடல், அபிமன்னன் தெருவுக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் அபிமன்னன் தெருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா (வயது 23), வெங்கடேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரை மாமூல் கேட்டு மிரட்டி தாக்கியதாக மேற்கண்ட 2 பேரையும், திலகர்திடல் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராம ஜல்லிக்கட்டு கமிட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அவனியாபுரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அவனியாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு முன்பு அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாக்குடி கிராம ஜல்லிக்கட்டு, அய்வேத்தனந்தல் ஜல்லிக்கட்டு, உடைக்காலம் கண்மாய் ஜல்லிக்கட்டு, தாவரஏந்தல் கிராம ஜல்லிக்கட்டு,தெங்கால் கண்மாய் கிராம ஜல்லிக்கட்டு என 5-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன.
பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவனியாபுரத்தில் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் திருப்ப ரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை நடத்தி யவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக குற்றம் சாட்டி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி தொடங்கப்பட்டு இதில் அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் நீதிமன்றம் வரை அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியும், தெங்கால் விவசாய கமிட்டியும் சென்றது. நீதிமன்றம், 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் இணைந்து செயல்படுங்கள் என அறிவுறுத்தியது.
இதை ஏற்க மறுத்த 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் மேல்முறையீடு வரை சென்றது. பின்னர் மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேசியும் சமாதானமாகாத நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது.
பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என்று 2 கமிட்டினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டு அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என 2 ஜல்லிக்கட்டு கமிட்டினரும், அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டனர். இதற்கு அவர் 2 கமிட்டினரும் ஒன்றாக இணைந்து வந்தால் நான் ஆதரவு தருகிறேன் என்றும், இல்லையென்றால் எனது ஆதரவு இல்லை என்றும் தெரிவித்து விட்டார். இதனால் இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று (5-ந் தேதி) அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். இதில் கமிட்டி தலைவர் முருகன் தலைமையில் நாட்டாமை கண்ணன், வழக்கறிஞர் அன்பரசன், தீத்தி பிச்சை, சிவமணி,முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இன்குலப், ம.தி.மு.க. கவுன்சிலர் அய்யனார், ஜெயசந்திரன், காங்கிரஸ் கஜேந்திரன், குமரையா, கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தனபாலன், அ.தி.மு.க. சார்பில் கார்த்திகேயன், பா.ஜ.க. சார்பில் சடாசரம், பாலன், மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவகுமார் உள்பட 300 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
- மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ5.45 லட்சம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
- சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 364 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களு டைய சொந்த இடத்தில் வைத்து மாடுகளை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருமங்கலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம் பஞ்சாயத்து வையம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மறவன்குளம் மற்றும் வையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டிற்கு 15 முதல் 20 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படுவதாகவும், மேலும் 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் இல்லாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் போது, 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு வேலை வழங்கவில்லை எனவும், ஆண்டிற்கு 15 நாள் அல்லது 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் கூறினர்.
மேலும் வாரத்திற்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும் ரூ.280 ஊதியத்திற்கு பதிலாக ரூ.200 மட்டுமே வழங்குவதாகவும் , மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும் ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
- ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி குருசந்திரசேகர் உள்ளார். இவர் ஊராட்சித் தலைவராக பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வருகிறார்.
லட்சுமியும், அவரது கணவர் குரு சந்திரசேகரும் திண்டியூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் இல்லத் திருமண நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை குடும்பங்களுக்கு திருமண சீர்வரிசையாக தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, தலகாணி உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.
மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக வேஷ்டி,சேலை, இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் அரசு நிர்ணயித்த தொகையில் தரமான வகையில் சாலை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். இதற்கு தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிட கட்ட அரசு அனுமதி வழங்கி அதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீடு செய்து வழங்கியது.
இருந்த போதிலும் இந்த கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணத்தில் ரூ.13 லட்சம் செலவு செய்து ஆக மொத்தம் 31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டிடத்தை நாளை 6-ந் தேதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி திறந்து வைக்கிறார்.
இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.






