என் மலர்
மதுரை
- மதுரை மத்திய சிறையில் போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மத்திய சிறையில் பணி புரியும் போலீசார் மற்றும் வழி காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மோர் மற்றும் வெட்டிவேர், நன்னாரி கலந்த குளிர்பானம் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், மோர் ஆகியவை இன்று காலை முதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை காவலர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தை வாசல் முன்பு கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.
மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் இளங்கோ வன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக் குமாரிடம் வழங்கினார்.
- திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி உள்ளிட்ட 16 வகையான பழங்களை மண் குவளையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர் முத்துராமன், லதா அதியமான், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மதன்குமார், பாண்டியன், தனசேகரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, காசிபாண்டி, வினோத், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.20.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- விருதுநகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
மதுரை
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், விருது நகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
கோவிலாங்குளம், தொட்டி யங்குளம், வட பாலை, தென்பாலை, திருச்சுழி, அரசகுளம், மேல கள்ளன்குளம், திம்மாபுரம், காஞ்சநாயக்கன்பட்டி, தம்பி பட்டி, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், தச்சநேந்தல், ரெட்டியாபட்டி, வி.கரிசல்குளம், தெற்கு காரியாபட்டி, வடக்கு காரியா பட்டி, கீழராஜ குலராமன், அசிலாபுரம் ஆகிய பகுதிகளில் 24 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.19 லட்சத்து 57 ஆயிரத்து 804 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.
மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக ரூ.20 லட்சத்து 98 ஆயிரத்து 804 அபராதம் பெறப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால், மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
- பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் மதுரையில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது கம்மல்களை அடகு வைத்திருந்தார். சம்பவத்தன்று மதுரைக்கு சென்று அந்த கம்மல்களை திருப்பி மணிபர்சில் வைத்துக் கொண்டு டவுன் பஸ்சில் திருமங்கலம் திரும்பி வந்தார். பஸ் நிலையத்தில் இறங்கி தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது அதில் இருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அந்த மணிபர்சில் ரூ.4 ஆயிரமும் இருந்தது. யாரோ மர்ம நபர் பஸ்சில் அவரது மணிபர்சை திருடி உள்ளார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம் என்.ஜி.ஓ. பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரமூர்த்தி (வயது 22). இவர் புதிதாக வாங்கி இருந்த மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் ேதடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் நடத்தக்கூடிய சுப நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டத்தினரை காட்டிலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வித்தியாசமாக நடத்தவே விரும்புவார்கள்.
- கிரேனை பயன்படுத்தி மிகப்பெரிய மாலை கட்டுவதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
மதுரை:
தூங்கா நகரம், கோவில் நகரம் என்று பெயர் பெற்றது மதுரை. இங்கு பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் வருவார்கள்.
நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருப்பதால் நகரின் பிரதான இடங்களில் கடைகள் முழு நேரமும் செயல்படும். அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக பூக்கள் விற்கக்கூடிய கடைகளும் விடிய விடிய திறந்திருக்கும்.
மதுரையில் புது ஜெயில் ரோடு, பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான வியாபாரிகள் பல தலைமுறைகளாக பூக்களை கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த இடங்களில் எப்போது சென்றாலும், அனைத்து வகை மாலைகளும் கிடைக்கும். வீட்டில் நடத்தக்கூடிய சுப நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டத்தினரை காட்டிலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வித்தியாசமாக நடத்தவே விரும்புவார்கள்.
அவற்றில் சில ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும். அந்த வரிசையில் மதுரை ஜெயில் ரோட்டில் உள்ள ஒருவரின் பூக்கடையில் பல அடி உயர பிரமாண்ட பூ மாலைகள் கட்டப்படுகின்றன. தற்போது அங்கு அரை டன் பூக்களை பயன்படுத்தி 12 அடி உயர பிரமாண்ட மாலை கட்டப்பட்டுள்ளது.
கிரேன் உதவியுடன் இந்த பிரமாண்ட மாலை கட்டப்பட்டது. கிரேனை பயன்படுத்தி மிகப்பெரிய மாலை கட்டுவதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். கிரேனை பயன்படுத்தி பிரமாண்ட மாலை கட்டுவது குறித்து அந்த கடையின் உரிமையாளர் முத்தையா கூறியதாவது:-
மதுரையில் பிரமாண்ட மாலை கட்டுவதில் நாங்கள் ஸ்பெஷலாக இருக்கிறோம். இதுவரை 3 மாலைகள் கட்டிக்கொடுத்துள்ளோம். முதல் மற்றும் 2-வது மாலை 10 அடி உயரத்தில் கட்டினோம். பல டன் பூக்களை பயன்படுத்தி கட்டுவதால் அந்த மாலையை சாதாரணமாக தூக்க முடியாது. இதனால் கிரேனை பயன்படுத்தியே பிரமாண்ட மாலைகளை கட்டுகிறோம்.
தற்போது கட்டப்படும் இந்த மாலை உசிலம்பட்டியில் நடக்கும் கட்சி கூட்டத்திற்காக கட்டுகிறோம். செவ்வந்தி, கேந்தி, ரோஜா என பல்வேறு வகையான 500 கிலோ எடையுள்ள பூக்களை பயன்படுத்தி இந்த மாலையை கட்டியுள்ளோம். இந்த மாலையின் விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.
மாலையை கட்டுவதில் இருந்து ஆர்டர் செய்தவர்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஒரு பூ கூட உதிராத வகையில் பூக்களை இறுக்கமாக கட்டுகிறோம். பிரமாண்ட மாலையை சரக்கு வாகனம் மூலமாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்வோம்.
பின்பு அந்த மாலையை அணிவிக்க வேண்டியவருக்கு, கிரேன் மூலமாகவே தூக்கி அணிவிப்போம். இந்த மாலையை பார்ப்பதற்கே திருவிழா போல் மக்கள் கூட்டம் கூடிவிடும். அடுத்த மாதம் முக்கிய பிரமுகரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக வெட்டி வேர்கள் மட்டுமே பயன்படுத்தி 15 அடி உயர மாலையை கட்ட உள்ளோம். அந்த மாலையின் விலை ரூ.3 லட்சம் ஆகும்.
மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் மதுரைக்காரர்களை வெல்ல யாரும் இல்லை. அதற்கு தகுந்தாற்போல் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட மாலை கேட்டாலும் கட்டிக் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாட்டுதாவணியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊடகங்கள் வாயிலாக பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகள், பிரதமர் மோடி தென் தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் யூடிப் மூலம் செய்திகள் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய பணி புரிய வேண்டும் என்றார்.
இதில் தென் தமிழகம் வளர்ச்சி பெற மதுரை நத்தம் சாலையில் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், மதுரை 9-வது வார்டு உத்தங்குடியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மதுரை அருகே நடந்த விபத்தில் 2வாலிபர்கள் பலியானார்கள்.
- வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை
மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரையை சேர்ந்தவர் அழகு (வயது 48). நேற்று காலை இவர் அதே பகுதியை சேர்ந்த மொக்கை என்பவருடன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங் கு ன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் திருமங்கலம் ரிங்ரோடு-நிலையூர் ரோட்டில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அழகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின்பேரில் சேலம் அன்னதானப் பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.
கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பிரிவில் வந்தபோது நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது சம்பந்த மாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மதுரை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை அண்ணா மெயின்ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற மன்னர் கார்த்தி (வயது28). இவர் நேதாஜி தெருவில் உள்ள மண்டபம் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 6பேர் கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூம்பிசதீஷ், குட்டமணி, ஆந்தை மணி, ராகுல், குண்டுவிஜய் ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திகேயன் நேதாஜி பற்றி அவமரியாதையாக பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
திருப்பரங்குன்றம் பாம்பன் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது42). இவர் நேற்று மதியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றார். பின்தொடர்ந்து சென்ற 2பேர் சிவலிங்கத்தை கல்வீசி தாக்கி செல்போனை பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநகர் வேழவர் தெருவை சேர்ந்த சுதாகரன் மகன் கவிக்காரன் (24), கீழத்தெரு மாரிமுத்து மகன் செந்தூர்பாண்டி (22) ஆகியோரை கைது செய்தனர்.
- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார்.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கோரிப்பாளையம்-கான்சாபுரம் மெயின்ரோடு ரம்ஜான் மினி மகாலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் லாரன்ஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ. பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, வடக்கு மண்டல தலைவர் சரவணா புவனே சுவரி, முகேஷ்.
கவுன்சிலர் உமா ரவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, பொருளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனி பேஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், தி.மு.க. வட்டச்செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் இனிய அரசன் ஆகியோர் பேசினர்.
மாவட்டக்குழு உறுப்பினர் சாகுல் அமீது நன்றி கூறினார்.
- மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 9 பேர் சிக்கினர்.
- தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
மதுரை
தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அவர்கள் பரசுராம்பட்டி சிலோன் காலனி கனக சுந்தரம் மகன் ஜீவரஞ்சன் (வயது21), புதூர் வீரகாளி கோவில்தெரு சுரேஷ் மகன் வினோத் கமார்(20), செல்லூர் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மாட்டுத்தாவணி கருப்பையா மகன் விஜயசாரதி (21), நரிமேடு ஜீவா குறுக்குத்தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21), நரிமேடு, ஜீவா தெரு, செந்தில் குமார் மகன் மனோஜ் (19), அவரது சகோதரர் வேல் பிரபாகரன் (22), சுயராஜ்யபுரம் ராஜா மகன் நிரஞ்சன் (19) என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- 3-ந்தேதி சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.
மதுரை
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடக்கும் 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாசி வீதிகளில் நடக்கும் தேரோட்டத்தை காண மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிவார்கள்.
தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கருதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பு தேரடி வீதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.






