என் மலர்tooltip icon

    மதுரை

    • வியாபாரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது55). டெக்ஸ்டைல் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டிராவல்ஸ் நடத்தி வரும் உறவினர் ஒருவருக்கு கொடுப்பதற்காக ரூ.50 லட்சத்துடன் தனது மனைவி யூசுப் சுலைகாவை அழைத்து கொண்டு காரில் சென்றார்.

    காரை மதுரையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (36) என்பவர் ஓட்டி சென்றார். அவர்களது கார் கொட்டாம்பட்டி பக்க முள்ள திருச்சுனை விலக்கு அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் சீரூடை அணிந்த 2 பேர் அந்த பகுதி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    ஷேக் தாவூத் சென்ற காரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி கைப்பையில் இருந்த ரூ.50லட்சத்தை பார்த்தனர். அவர்கள் அந்த பணத்திற்கான ஆவணத்தை ஷேக் தாவூத்திடம் கேட்டனர்.

    அதற்கு அவர் இல்லை என்று தெரிவித்ததால், சோதனை செய்த நபர்கள் ரூ.50லட்சம் பணத்தை வாங்கி வைத்து கொண்டு, கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆவணத்தை காண்பித்து பணத்தை வாங்கி செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் தாவூத், அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார். அய்யாபட்டி விலக்கு பாலம் அருகே சென்ற மோட்டார் சைக்கிள், திடீரென எதிர் திசைக்கு சென்று மாயமானது. இதனால் அந்த நபர்கள் போலீஸ் வேடத்தில் தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதை ஷேக் தாவூத் அறிந்தார்.

    அதுபற்றி அவர் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வியாபாரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் படம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    வழிப்பறி சம்பவம் குறித்து வியாபாரி ஷேக் தாவூத், அவரது மனைவி யூசுப் சுலைகா , காரின் டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

    இதனால் வழிப்பறி சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரும், மேலும் சிலரும் சேர்ந்து திட்டமிட்டு ஜவுளி வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் கார் டிரைவர் அபுபக்கா் சித்திக் (27), அவரது சகோதரரான மதுரை கே.புதூர் சதாம் உசேன்(30), அசன் முகமது (30), மதுரை ஆத்திக்குளம் மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்தசாரதி(42), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் கோகுல பாண்டியன் (39) ஆகியோர் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து ரூ.49 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜன் கோகுல பாண்டியன் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெருமாள்பட்டி மந்தையில் உறவினர் ஆனந்தகுமார் என்பவரும், அதே ஊரை சேர்ந்த ஜீவாவும் சண்டை போட்டனர்.
    • ஜீவா மறுத்ததோடு, மணிகண்டனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் மணி கண்டன் (வயது26). இவர் பள்ளப் பட்டியில் உள்ள பெல்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பெருமாள்பட்டி மந்தையில் உறவினர் ஆனந்தகுமார் என்பவரும், அதே ஊரை சேர்ந்த ஜீவாவும் சண்டை போட்டனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் சண்டையை விலக்கிவிட்டு சமரசமாக செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு ஜீவா மறுத்ததோடு, மணிகண்டனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மறுநாள் மணிகண்டன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா, அவரது பெற்றோர் ராமமூர்த்தி-லலிதா, மனைவி சரண்யா, சகோதரர்கள் ராஜசேகர், சிவா, முத்து மனைவி சூரியகலா, உறவினர் சரத் ஆகிய 8 பேர் முன்விரோதத்தில் மணிகண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த கும்பல் அங்கிருந்த கட்டை, கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் படுகாய மடைமந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மணிகண்டன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இதில் தொடர்புடைய ஜீவா உள்பட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
    • வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திப்பதற்காக வந்தார். ரோந்து வந்த அப்போதைய நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அங்கு நின்றிருந்த அர்ஷத்தை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வாலிபரிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பணம் பறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒருவர் முக்கிய சாட்சியாக உள்ளார்.

    அவரை ஜாமீனில் வந்த வசந்தி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு வசந்தி மீதான மிரட்டல் புகாரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதில் வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பணம் பறிப்பு வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி இந்திய அரசமைப்புச் சட்டம்-311 பிரிவின்படி காவல்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் (நிரந்தர நீக்கம்) செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி பிறப்பித்து உள்ளார்.

    பணம் பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்கொலை செய்த நாகலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
    • பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது31). இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (8), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (3) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.

    கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களை பார்த்து செல்வார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    அதன்பேரில் அவரது கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக அந்த பணியில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சில் வந்த நாகலட்சுமி, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல பயணிகள் கண் முன் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகலெட்சுமி, கலெக்டருக்கு எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது.

    அதில் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் தன்னை நியமித்ததாகவும், ஆனால் அந்த வேலையை தனக்கு கொடுக்க மாட்டேன் என்று துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து ஆகியோர் கூறியதாகவும், மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

    தன்னை திட்டியது தொடர்பாக கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஏன் புகார் கொடுத்தாய்? என வீரக்குமார் உள்ளிட்டோர் திட்டியதாகவும், அதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட மனவேதனையால் தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தனது மனைவி தற்கொலை குறித்து கள்ளிக்குடி போலீசில் கணேசன் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மையிட்டான்பட்டியில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக எனது மனைவி நாகலட்சுமி கடந்த 1½ ஆண்டாக பணிபுரிகிறார். அந்த வேலைக்கு சம்பள தொகையை குறைத்து பஞ்சாயத்து கிளார்க் முத்து, துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகியோர் பிரச்சினை செய்து வந்துள்ளனர். மேலும் எனது மனைவியை வேலைக்கு வர வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் எனது மனைவி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட 3பேரையும் அழைத்து நாகலட்சுமிக்கு வேலை கொடுக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

    அதனை தொடர்ந்து எனது மனைவியை, அவர்கள் தொடர்ந்து மிரட்டினர். அது தொடர்பாக உயர்அதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேற்று பஸ்சில் சென்ற போது பஸ்சில் இருந்து குதித்து விட்டார். இதில் அவர் படுகாயமடைந்து இறந்து விட்டார்.

    இவ்வாறு கணேசன் தனது புகாரில் தெரிவித்து உள்ளார். அவரது புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதன் காரணமாக ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகலட்சுமி தற்கொலை சம்பவத்தில் கவுன்சிலர்கள் மற்றும் கிளார்க் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக கூடுதல் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூடுதல் கலெக்டர் சரவணன் விசாரணையை தொடங்கினார். அவர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரராஜன் ஆகியோருடன் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று பஞ்சாயத்து தலைவர் காளிராஜன், கிளார்க் முத்து உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

    கூடுதல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்கொலை செய்த நாகலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு உள்ளனர்.

    நாகலட்சுமியின் 5 பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அவரது குழந்தைகளின் கல்வி செலவை முழுவதுமாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் நாகலெட்சுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மையிட்டான்ட்டி பஞ்சாயத்து துணை தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    அவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், கள்ளிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சமி லதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.
    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட, தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று திருநகரில் நடை பெற்றது. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். கட்சி கொள்கைகளை கூறி அதிக இளைஞர்களை உறுப்பி னர்களாக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை பொது மக்களிடம் தெரி வித்து வீடுகள் தோறும் பாரா ளுமன்ற தேர்த லுக்கான பிரசாரத்தை தொடங்குங்கள்.

    விரைவில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மகளிர்கள் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்களாக சேர்வதற்கு முன் வரு வார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 1 கோடி புதிய உறுப்பி னர்களை சேர்க்க கட்சியின் தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாம் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, வட்டச் செயலாளர் சாமி வேல், மாநில நிர்வாகி கொடி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தார்.
    • தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    தேசிய தரச்சான்று திட்டமானது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டம் ஆகும். இத்திட்டமானது சுயமதிப் பீடு, மாநில அரசின் மதிப் பீடு மற்றும் மத்திய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற சுகா தார நிலையத்தில் மத்திய அரசின் குழு பேராசிரியர் அரசு மருத்துவமனை (நாசிக்) அபிஷேக் சுபாஷ் கோசாவி மற்றும் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் (சூரத்) டாக்டர் மகேந்திர பட்டேல் ஆகிய இருவரால் மதிப்பீடு அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை ஆகிய 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் (2022 முதல் 2023) பெற்றுள்ளது. மேலும் 2023-2024 ஆண்டில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இக்குழுவினர் மருத்துவ மனையில் உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பரா மரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன் வசந்த், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மாவட்ட தர மருத்துவ அலு வலர் பொன்பாத்திப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
    • அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியை சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்க ளுடைய உரிமைகளுக்காக வும், ஒடுக்கப்பட்ட வர்களுடைய சமத்துவத் திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமை களை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல மைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள்முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசா லாட்சி, உதவி ஆணை யாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது மகள் ஹசீரா (வயது19). இவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.

    இவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி வந்தார். அப்போது சதீஷ், ஹசீராவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ஹசீராவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹசீரா நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்த னர். ஆனாலும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அக்பர் தனது மகள் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை திலகர் திடல் போலீசார் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த பாசிங்காபுரம் காளியம்மன் கோவில் தெரு, பழனிவேல் மகன் பிரதீப் என்ற சுருட்டை (21), விளாங்குடி, டெம்சி காலனி மணி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை திருப்பரங்குன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் என்ற தமிழ் (வயது21). திருநகர், இலகுவனார் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற சிவபிரியன் (28). இவர்கள் 2பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்தது. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி தமிழரசன் என்ற தமிழ், சிவா என்ற சிவப்ரியன் ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். 

    • மதுரையில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது57). இவரது மனைவி அய்யம்மாள்.

    மாரிமுத்து வுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் மது குடிப்ப தற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சரவண பொய்கை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பரங் குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி முத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை ரெயிலார் நகரை சேர்ந்தவர் முரளிதரன் (54). இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் வாழ்க்கை யில் விரக்தியடைந்த முரளி தரன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை விளாங்குடி செங்கோல் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது மனைவி ஜனனி (30). இவருக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ஜனனி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் நீலகண்டன்(35). இவருக்கு வலிப்புநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதில் வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர், வைகை மைய மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை, தாயுமானவர் கோவில் சந்து பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெரியார் பஸ் நிலையம் அருகில் யாசகம் வாங்கி வருகிறார்.

    இந்தநிலையில் அந்த பெண் நேற்று இரவு கூடலழகர் கோவில் அருகில் உள்ள வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் படுத்தி ருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தனியாக படுத்திருந்த அந்த பெண்ணு க்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அந்தப் பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ் பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்ற சித்தன் (வயது 35), மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜித் நாகராஜ் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நாளை தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் புத்தாண்டு அன்று தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.

    நடப்பு ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு நாளை (14-ந் தேதி) வரவுள்ளது. இதையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி-தெய்வானைக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதே போல் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    தமிழ் புத்தாண்டு என்பதால் நாளை சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருவார்கள். இதனால் திருப்பரங் குன்றத்தில் பல இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு போலீசார் கண்காத்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×