என் மலர்
நீங்கள் தேடியது "Kallikudi Woman Suicide"
- தற்கொலை செய்த நாகலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
- பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது31). இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (8), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (3) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.
கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களை பார்த்து செல்வார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதன்பேரில் அவரது கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக அந்த பணியில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சில் வந்த நாகலட்சுமி, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல பயணிகள் கண் முன் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகலெட்சுமி, கலெக்டருக்கு எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது.
அதில் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் தன்னை நியமித்ததாகவும், ஆனால் அந்த வேலையை தனக்கு கொடுக்க மாட்டேன் என்று துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து ஆகியோர் கூறியதாகவும், மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
தன்னை திட்டியது தொடர்பாக கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஏன் புகார் கொடுத்தாய்? என வீரக்குமார் உள்ளிட்டோர் திட்டியதாகவும், அதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட மனவேதனையால் தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தனது மனைவி தற்கொலை குறித்து கள்ளிக்குடி போலீசில் கணேசன் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மையிட்டான்பட்டியில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக எனது மனைவி நாகலட்சுமி கடந்த 1½ ஆண்டாக பணிபுரிகிறார். அந்த வேலைக்கு சம்பள தொகையை குறைத்து பஞ்சாயத்து கிளார்க் முத்து, துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகியோர் பிரச்சினை செய்து வந்துள்ளனர். மேலும் எனது மனைவியை வேலைக்கு வர வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் எனது மனைவி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட 3பேரையும் அழைத்து நாகலட்சுமிக்கு வேலை கொடுக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
அதனை தொடர்ந்து எனது மனைவியை, அவர்கள் தொடர்ந்து மிரட்டினர். அது தொடர்பாக உயர்அதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேற்று பஸ்சில் சென்ற போது பஸ்சில் இருந்து குதித்து விட்டார். இதில் அவர் படுகாயமடைந்து இறந்து விட்டார்.
இவ்வாறு கணேசன் தனது புகாரில் தெரிவித்து உள்ளார். அவரது புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதன் காரணமாக ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகலட்சுமி தற்கொலை சம்பவத்தில் கவுன்சிலர்கள் மற்றும் கிளார்க் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக கூடுதல் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து கூடுதல் கலெக்டர் சரவணன் விசாரணையை தொடங்கினார். அவர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரராஜன் ஆகியோருடன் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று பஞ்சாயத்து தலைவர் காளிராஜன், கிளார்க் முத்து உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
கூடுதல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்கொலை செய்த நாகலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு உள்ளனர்.
நாகலட்சுமியின் 5 பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அவரது குழந்தைகளின் கல்வி செலவை முழுவதுமாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நாகலெட்சுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மையிட்டான்ட்டி பஞ்சாயத்து துணை தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், கள்ளிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சமி லதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
பணி தொடர்பாக நாகலட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக நாகலட்சுமியின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 5 பெண் குழந்தைகளையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.






