என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை சித்திரை திருவிழா- கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் நகை பறிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் நகை பறித்த திருட்டு கும்பலை சேர்ந்த வர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை காண்பதற்காக 4-ந்தேதி இரவு முதலே பக்தர்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர். லட்சக்கணக் கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அதனை பயன்படுத்தி சில இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    தேனி மாவட்டம் அல்லி நகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). அவர் மதிச்சியம் ஷா தியேட்டர் அருகே நின்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கசங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.

    மதுரை விக்கிரமங்கலம் கோவில்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (57). இவர் குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வந்திருந்தார். திருவிழா கூட்டத்தில் அவர் அணிந்தி ருந்த 3 பவுன் தங்க சங்கி லியை மர்மநபர் பறித்துச் சென்று விட்டான்.

    மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதவள்ளி (60). இவர் வைகை வடகரை பகுதியில் திருவிழா கூட்டத்தில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.

    மதுரை சின்ன சொக்கி குளம் ஜவஹர்ரோட்டை சேர்ந்த வர் மங்கம்மாள்(72). இவர் வைகையாற்றுக்கு சென்றி ருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மங்கம்மாள் அணிந்திருந்த 6பவுன் சங்கிலியை மர்ம நபர் திருடிவிட்டான்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாக்கரை வாடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (67). இவர் வைகையாற்றில் பக்தர்கள் கூட்டத்தில் நின்ற போது அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.

    ராமநாதபுரம் புத்தேந்தலை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பூபதி (32). இவர் சித்திரை திருவிழா கூட்டத்தில் பக்தர்களோடு பக்தர்களாக சாமி கும்பிட்ட போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டான்.

    இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வர்கள் மதிச்சியம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்திரை திருவிழா கூட்டத்தில் பக்தர்களிடம் நகை பறித்த திருட்டு கும்பலை சேர்ந்த வர்களை தேடி வருகின்றனர்.

    • குரங்கு தோப்பு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
    • விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டி அருகே குரங்குதோப்பு ஆர்.சி.அமலி தொடக்கப்பள்ளியில் கல்வி கலை கொடை எனும் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.இந்த விழாவுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். சித்தர் பீடம் விஜயபாஸ்கர், முருகேசன், ராமராஜன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் காந்தி வரவேற்றார். இந்தவிழாவில் பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்வியின் அவசியம் பற்றி கவிஞர் ரோஸ்லின், கல்வியும், கலையும் பற்றி ஜோயல் ஆகியோர் பேசினார்.

    இந்தவிழாவில் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் முருகேசன், மாயி, பிரியா, ராஜூ, முத்துமீனாள், பூபதி, ரமேஷ், அமலா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சேசுமரி ஸ்டெல்லா, கிரேஸ் அந்தோணியம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

    • மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலூர்

    மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2-ந்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூைஜ, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். யாக சாலையை சுற்றி வந்து திருப்புவனம் ராஜ.சொக்கலிங்கம் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது வாகனத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிள்ளையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஜோதிநகர் மற்றும்கும்பாபிஷேக திருப்பணிக்குழு நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஜோதி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வருகிற 8-ந்தேதி விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (8ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகையாற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
    • இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் ஆகும். குடைவரை கோவிலான இங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    மலைமேல் காசி விசுவ நாதர் கோவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையானது இயற்கையிலேயே லிங்க வடிவில் அமைந்துள்ளதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.

    இங்கு பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மலையை சுற்றி சுமார் 3½ கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் மலையை சுற்றி கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் இருந்தாலும் அவை அனைத்திலும் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படு கின்றது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதே போல கோவில் வாசல் மற்றும் முக்கிய பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மலைக்கு பின்பகுதியில் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் பகுதிக்கு செல்ல சுமார் 500 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது.இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆண்டிப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மீனாள் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் மேதின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். யூனியன் பற்றாளர் முத்தையா ''எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்'' உறுதி மொழி வாசித்தார்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம்மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர் கணேசன், கிராமசுகாதார செவிலியர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.

    • வருகிற 9-ந்தேதி வாடிப்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
    • இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. வாடிப்பட்டி தாலுகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77 வருவாய் கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும், பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்தும் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை, கோவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன் குருவித்துறை, கோவில் குருவித்துறை, மேலக்கால், கச்சிராயிருப்பு, மன்னாடி மங்கலத்தில் ஜமாபந்தி நடக்கிறது.

    2-ம்நாளான 10-ந்தேதி (புதன்கிழமை) சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி, தட்டான்குளம், சேலைக் குறிச்சி, பேட்டை, சோழ வந்தானிலும் 3-ம்நாளான 11-ந்தேதி (வியாழக்கிழமை) தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம், அமரடக்கி, கொண்டையம் பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வே லிப்பட்டி, பெரிய இலந்தைக்குளம், கட்டிமேய்க்கிப்பட்டி, கீழக்கரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    4-ம்நாளான 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர், பரளி யிலும், 5-ம் நாளான 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்காள் பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமக்கவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்தூர், பாலமேட்டிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    6-ம்நாளான 17-ந்தேதி (புதன்கிழமை) முடுவார்பட்டி உள்வட்டம் சுக்காம்பட்டி, கோடாங்கி பட்டி, பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, எர்ரம்பட்டியிலும், 7-ம்நாளான 18-ந்தேதி (வியாழக்கிழமை) நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரி விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டியிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம் என்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • சமயநல்லூர் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார்
    • 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
    • 9-ந்தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 3-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    பின்பு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 5.52 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இரவில் கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை(7-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

    நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.

    நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே அதே கோலத்தில் கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ந்தேதி காலை இருப்பிடம் போய் சேருகிறார்.

    • உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.
    • பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.

    விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

    • திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை மேல வெளி வீதி ெரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தபோது ெரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது.

    ×