என் மலர்
மதுரை
- மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் பொறியியல் கட்-ஆப் மார்க் பெற்று சாதனைபடைத்தனர்.
- அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், முதல்வர்கள் கலா, கோமுலதா ஆகியோர் பாராட்டினர்.
மதுரை
பிளஸ்-2 பொதுத் தேர்வில் மதுரை சி.இ.ஓ.ஏ. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்த பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாநில அளவில் கருத்து நிலவிய நிலை யிலும், மாணவி சிவரஞ்சனி, மாணவர் சஞ்சய் ஆகியோர் என்ஜினீயரிங் கட்-ஆப் 200/200 மதிப்பெண்களும், மாணவி பிரவினா வேளாண் கட்-ஆப் 200/200 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் இந்த பள்ளி மாணவி கஜலட்சுமி, 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 2-வதாக 593 மதிப்பெண்ணை சிவரஞ்சனியும், ஹரி விக்னேசும், 3-வதாக 590 மதிப்பெண்களை சிவராம், பிரீத்தி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தலைவர் ராஜா கிளைமாக்ஸ் பாராட்டினார். அவர் கூறுகையில், சி.இ.ஓ.ஏ. பள்ளியில் 105 சென்டம் பெற்று மாணவர்கள் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியடைய செய்கிறது.
கணிதத்தில் 12 மாண வர்களும், இயற்பியலில் 7 மாணவர்களும், கெமிஸ்ட்ரி பாடத்தில் 27 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணினி பாடத்தில் 15 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 3 மாணவர்களும், அக்கவுண்டன்சி பாடத்தில் 14 மாணவர்களும், காமர்ஸ் பாடத்தில் 9 மாணவர்களும் சென்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்றார்.
சாதனை மாணவர்களை பள்ளி இணைத் தலைவர் சாமி, துணைத் தலைவர்கள் விக்டர் தனராஜ், சவுந்தரபாண்டி, ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், முதல்வர்கள் கலா, கோமுலதா ஆகியோர் பாராட்டினர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.
மதுரை
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சமூக விரோதிகள் வழிப்பறி, நகை பறிப்பு, பணம் பறித்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் தைரியமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பயமின்றி சித்திரை திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.
இந்தநிலையில் திருவிழா வின்போது வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்கத்தான் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் சின்னான் (வயது53). இவர் சம்பவத் தன்று கள்ளழகரை தரிசிப்பதற்காக வெளியே சென்றார். ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பறித்துச் சென்றது.
இது தொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது பி.பி.குளம், முல்லை நகர், செல்வம் மகன் சுபாஷ் (வயது 21), ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ராமராஜ் மகன் சுந்தரேஸ் வரன் ( 22), மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெரு, முருகன் மகன் சந்தோஷ் (19) மற்றும் முல்லை நகர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சித்திரை திருவிழாவுக்கு வந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்ததாக சோலையழகு புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில், இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் ஆகிய 10 கோவில்களிலும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் ேகாவில் மற்றும் உப கோவில்களில் காணிக்கை என்னும் பணி, இணையதள யூ-டியுப் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
- நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.
மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.
மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.
மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.
மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.
இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
- பரவையில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் நடந்தது.
- சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65-வது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- மாநில கபடி போட்டி வடிவேல்கரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேதாஜி கிரிக்கெட் கிளப், பி.டி.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து 5-ம் ஆண்டு மாநில கபடி போட்டியை நடத்தியது. பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டி யன் தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்திய பிரியா முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் 106 அணிகள் பங்கேற்று மின் ஒளியில் இரவிலும் பகலிலும் விளையாடினர். இறுதியில் 5 அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்த போட்டியில் முதல் இடம் பெற்ற வடிவேல்கரை அணிக்கு கே.டி.ரஞ்சித் நினைவு சுழல் கோப்பையும் மற்றும் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் சார்பாக ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் வழங்கப் பட்டது. 2-ம் இடம் பிடித்த தொண்டூர் அணிக்கு மாயக் கண்ணன் சகோதரர்கள் சார்பாக ஆர்.எஸ்.மீனாட்சி தர்மராஜ் நினைவு சுழல் கோப்பை, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாசாமி நினைவாக வைரமணி சகோதரர்கள் சார்பாக ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடம்பிடித்த மேலக்குயில்குடி அணிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராஜா சகோதரர்கள் சார்பாக சோனை நினைவு சுழல் கோப்பையும், சுந்தர ஜெயமணி சார்பாக ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதுபோல் 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
போட்டியின் நடுவர்களாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகத்தை சேர்ந்த மூர்த்தி தலைமையில் சுரேஷ்,பாண்டி செல்வம், பாலமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் பணி செய்தனர். இதன் ஏற்பாடுகளை நேதாஜி கிரிக்கெட் கிளப் மற்றும் பி.டி.பி விளையாட்டு கிளப்பினர் செய்திருந்தனர்.
- வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
- தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேட்டுப் பெருமாள் நகரில் உள்ளது. இங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வை 132 மாணவிகள் எழுதினர்.இதில் 132 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதமடித்து சாதனை படைத்தனர்.
முதல் மதிப்பெண் ராஜேஸ்வரி 536, 2-வது மதிப்பெண் வான்மதி 525, 3-வது மதிப்பெண் ஜெயஸ்ரீ 523 பெற்றனர். இந்த சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆஷா, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கல்வி வளர்ச்சி குழுவினர், பொதுமக்கள் பாராட்டினர்.
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் அரவிந்த் 551, 2-வது மதிப்பெண் செந்தில்முருகன் 510, 3-வது மதிப்பெண் கிறிஸ்டோபர் 481 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய ரங்கன்தெரிவித்தார்.
பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 61 ேபர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதல் மதிப்பெண் சாலின் 509, 2-ம் மதிப்பெண் சுபஸ்ரீ 499, 3-ம் மதிப்பெண் கவுசல்யா 464 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.
அதேபோல் புஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 80 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் தினேஷ் 580, 2-ம் மதிப்பெண் ஓவியா 572, 3-ம் மதிப்பெண் ஜெகன் 570. இதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், காமர்சில் 1 மாணவர் 100 சதவீத மதிப்பெண்னும் பெற்றனர் என்று முதல்வர் ஞான சிகாமணி தெரிவித்தார்.
தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் வினித் பாண்டி 585, 2-ம் மதிப்பெண் பிரின்ஸ்ராஜ் 584, 3-ம் மதிப்பெண் சுபாஷினி 579 பெற்றனர். இதில் அக்கவுண்டன்சியில் 5 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், வேதியலில் ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தெரிவித்தார்.
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடந்தது.
- இந்த முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கள்ளிக்குடியில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கடந்த 2ஆண்டுகளில் தி.மு.க. மக்களுக்காக எந்த திட்டங்களிலும் கவனம் செலுத்தவில்லை. தற்போது 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 2கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று கூறினீர்களே? அதை செய்யவில்லை.
திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ. வேலு பச்சை பொய் கூறியுள்ளார். திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை வித்துள்ளார். அந்த பணிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த ெரயில்வே மேம்பாலம் பணிக்காக ஜெயலலிதா 110விதியின் கீழ் திட்டத்தை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து ெரயில்வே துறையிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த பின்பு, எடப்பாடி பழனிசாமி 5.2.2021 அன்று அரசாணை எண் 24-யை வெளியிட்டு, ரூ. 17கோடியே 10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்ட செயலாளர் தான் கேட்டார் என்று முழு பூசணிக்காயை சோற்றில் அமைச்சர் மறைக்கிறார். மக்கள் இதை நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெங்கடேசன் எம்.எல்.ஏ. தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம், மேலக்கால், நெடுங்குளம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த படிப்பு களுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.
இவர்கள் கல்லூரி முடிந்து மாலை 5மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து போதுமான பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணி முதல் 7.30மணி வரை சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதி களுக்கு எந்த ஒரு பஸ்சும் இல்லாததால் தினசரி சுமார் 2மணி நேரம் பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும், ஆகை யால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிக ளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.
- செக்கானூரணியில் அரசு பஸ் மோதியதில் பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
- செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(வயது40) பூ வியாபாரி.
இவர் இன்று காலை செக்கானூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் சவுந்தர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்.
- நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஆணையாளர் டெரன்ஸ் லியோன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் முத்து வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொது மக்களின் நலன்கருதியும், நகராட்சி நிதி நிர்வாகத்தை கருதியும் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். திருமங்கலம் நகரில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி.தெரு விளக்குகளாக மாற்றுவது எனவும், இதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்வதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில் 534 எல்.இ.டி. தெரு விளக்குகள் புதிதாக அமைக்க ரூ.1 கோடியே 7லட்சத்து 70 ஆயிரம் மாநில நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைப்பதும் என்றும் முடிவு செய்யப் பட்டது.
இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இந்த கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்றுதல் உறிஞ்சு வாகனம் வாங்குவது, 15-வது நிதிக்குழு மானியத்தில் 2022-23-ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர் பிளாக்சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருமங்கலம் ெரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ெரயில்வேகேட் வரையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர்.
மதுரை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பணம் திரட்டியது, பணப்பரி மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 16 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் 4 குழுக்களாக சென்று நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 4 வீடுகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றினர்.
இதற்கிடையே அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மதுரையில் அதிகாலை நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதால் மேற்கண்ட தகவல் யாருக்கும் தெரியவில்லை.
மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். மதுரை மாவட்டத்தில் அப்பாசிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தப்படுகிறது? என்பது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுரையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் திரட்டியதாகவும், வெளி நாட்டில் இருந்து பணம் பெற்றதாகவும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர்களுக்கு குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் சமீபத்தில் மதுரைக்கு மீண்டும் வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நெல்பேட்டையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரையில் கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டன. இதில் சில தகவல் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.
நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை மாநகரில் தங்கி இருந்து அதிரடி வேட்டை நடத்தினர். இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசா ரணைக்காக மதுரைக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் மாவட்டம் முழுவதிலும் ஆட்களை திரட்டி அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிராக அந்தந்த இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த முறை அது மாதிரி நடக்கக் கூடாது என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்த னர். அதன்படி அவர்கள் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரி டம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக் குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தனர்.
எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரச்சினை எதுவும் நடக்கவில்லை. மதுரை மாநகரில் 4 வீடு களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அப்பாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






