என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்ைத சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோமதியம்மாள் (வயது 73). இவர் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், கோமதியம்மாளிடம் அவரது மகனை தனக்கு தெரியும் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். அவருக்கு மத்திய அரசு திட்டத்தில் பணம் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.

    பின்னர் கோமதியம்மாளை காரில் அழைத்து சென்றார். காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அதற்கு நகை, செல்போனை தனியாக வைத்து விடுங்கள் எனவும் அந்த நபர் கூறி உள்ளார்.

    அதை நம்பி நகை, செல்போன், வங்கி புத்தகம் ஆகியவற்றை காரில் வைத்து விட்டு வெளியே போட்டோ எடுப்பதற்காக அவர் வந்தார். ஆனால் அவரை தனியே விட்டு விட்டு அந்த நபர் காரில் ஏறி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து கோமதியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
    • தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊராட்சி வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது.

    இதில் பி.டி.ஓ. கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாடின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    • மதுரையில் தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது.
    • 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூர் இளைஞரணி சார்பில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் இளைஞரணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.

    அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகாஈஸ்வரி, பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    • வாடிப்பட்டி யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வனஜா வரவேற்றார். கணக்கர் சங்கர் தீர்மான அறிக்கை வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். 15-வது நிதி குழு வளர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, போக்கு வரத்து உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராதா நன்றி கூறினார்.

    • தென்னை மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தார்ப்பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அவ்வாறு கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாது காப்பாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப் பாய் கொண்டு மூடாமல் திறந்த பகுதியாக கொண்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேகத்தடை மற்றும் குறுகலான சாலை பகுதிகளில் செல்லும்போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

    இதனால் தென்னை மட்டைகளை.ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    மதுரை:

    மதுரை-போடி இடையேயான 90.4 கிலோமீட்டர் தூர மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இந்த வழித்தடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முதலில் தொய்வாக நடந்து வந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. மதுரை-போடி இடையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.

    இந்த பணி 12 ஆண்டுகள் நடந்து வந்த நிலையில், மதுரை-தேனி இடையிலான அகல ரெயில் பாதை பணி முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து மதுரை-தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் கடந்த ஆண்டு மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இதையடுத்து தேனியில் இருந்து போடி வரையிலான அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக, அந்த வழித்தடத்தில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. 15 கிலோமீட்டர் தொலைவிலான அந்த வழித்தடத்திலும் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முற்றிலும் முடிந்தது.

    இதனால் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் தேனி-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை-போடி இடையே பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் போடி வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரெயில்கள் இயக்கப்படும் நேரமும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அறிவித்தபடி பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில், நாளை (15-ந்தேதி) முதல் போடி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் சென்னை-மதுரை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் போடி வரை நீட்டிக்கப்படும் என்றும், இந்த ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரசில் நாளை மறுநாள் மதுரைக்கு வந்து தேனி செல்கிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், மதுரை-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிவேக சோதனை ஓட்ட ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது.

    110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதியம் 11.15 மணியளவில் போடி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் மதுரைக்கு வந்தடைந்தது.

    அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால் மதுரை-போடி இடையேயான வழித்தடத்தில் ரெயில் வந்து செல்லும் நேரங்களில் தண்டவாள பகுதியில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்ட ரெயில் போடி வரை இயக்கப்படுவதால், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நாளை நிறைவேற உள்ளது.

    • கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தடைக்காலமாகும். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (இன்று) வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள். அந்தப் படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. மேலும் விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் பணியும் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல தயாராக நிற்கும் விசைப்படகுகளில் டீசல் நிரப்பி வருகிறார்கள்.

    மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களைப் பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ்கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதனால் துறைமுகம் களைகட்டி காணப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளை ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அப்போது சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவற்றை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இன்றே சின்னமுட்டம் துறைமுகம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    • மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை வண்டியூர் பத்தினியம்மன் கோவில் தெரு அனுமார்பட்டியை சேர்ந்தவர் ராணி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 2 பசுவை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பசுக்களை திருடியது வாடிப்பட்டி தாலுகா தெங்கரை சம்பத் மகன் செல்வம் (23), சோழவந்தான் நாராயணபுரம் ஆறுமுக மகன் விசுவநாத் (28) என தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றர்.

    மதுரை

    திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி காளவாசல் ரோட்டை சேர்ந்தவர் முத்துவேல்(38). திருமணமான இவருக்கு குழந்தை இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

    • அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பைபாஸ்ரோடு, அவனியாபுரம் பஸ்நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மா காலனி, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மதுரை மேற்கு செயற்பொறியாளர் மோகன்(பொறுப்பு) தெரிவித்துள்ளார். 

    • மதுரை அருகே மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலகோபுரதெரு சென்ட்ரல் சினிமா தியேட்டர் அருகில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேல் மதுரை கிராம உதவியாளர் சமையன் திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்த மூதாட்டி தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி ஜீவா(வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள தெற்கு மின் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுப்பிரமணியபுரம் ஆரப்பாளையம் தமிழ் சங்கம் ரோடு, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மஹால், அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.

    இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×