என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காவேரிப்பட்டணத்தில் முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவருடன் வந்த கூட்டாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்தவர் சகிலா (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு, தனது தோழியான ஜெரினா (55) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், முகவரி கேட்பது போல் அவர்களிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து கொண்டு தப்ப முயன்றனர். அப்போது சகிலா மற்றும் ஜெரினா கூச்சலிட அங்கிருந்த பொதுமக்கள், தப்ப முயற்சி செய்த வாலிபர்களை பிடிக்க முயற்சித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவனை மட்டும் கீழே தள்ளி பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட வாலிபரை காவேரிப்பட்டணம் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அந்த வாலிபர் கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளதால், காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும், சகிலா கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.

    இதில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு பிடிபட்ட வாலிபர், கிருஷ்ணகிரி தர்கா பகுதியை சேர்ந்த சதாம்உசேன் மகன் முகமதுஉசேன் (19) என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பிச்சென்றவர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்த சதீஸ்குமார் (30) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து முகமதுஉசேனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 2 பவுன் தங்க நகையை மீட்டதுடன், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் சொன்னானூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பெண்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், பயிற்சி துணை சூப்பிரண்டு ஹரி சங்கரி, கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் முறையிட்டனர். அவர்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குன்னத்தூர் செல்வார்கள். தற்போது அந்த சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால் குன்னத்தூர் சென்று வர இயலாத சூழல் ஏற்படும். எனவே அரசு மதுக்கடையை இங்கு திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்கள்.

    இதையடுத்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அதிகாரிகளுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கடைக்காரர்கள் மனு கொடுத்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமையில், சூளகிரியில் தினசரி சந்தையில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூளகிரியில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வளாகத்தில் 42 கடைகள் மற்றும் காலி இடத்தில் திறந்தவெளி கடைகள் அமைத்து அரசு நிர்ணயம் செய்த சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது சுங்கவரி வசூலிக்க ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர், அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்கிறார்.

    அதன்படி சந்தை கடைள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகளிடம் ரூ.1 லட்சம் முன்பணம் மற்றும் தினமும் ரூ.200 சுங்கம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார். இதனால் வியாபாரிகள், கடைக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சந்தையின் குத்தகையை ரத்து செய்து, சாதாரண வியாபாரிகள் பயனடையும் வகையில் ஏலம் விட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக்ரசீத், மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்புசேகர் மற்றும் நிர்வாகிகள் சந்திரன், ராமச்சந்திரன், முருகேசன், மாதையன், சுஜவுல்லா, தனஞ்செயன், சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
    வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அச்சப்பன். இவருடைய மனைவி சீதம்மா என்கிற ஓசிவம்மா (வயது 70). இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நலம் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த இவர் கடந்த 16-ந் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும், வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். உடல் நலக்குறைவால் மனம் உடைந்த மூதாட்டி சீதம்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    சூளகிரி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி அருகே உள்ள சின்ன கொத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று நடந்த பிரச்சினையில், ராஜ்குமாரை, வெங்கடேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜ்குமார், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெங்கடேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். பணம் கொடுக்க அவரின் மற்றும் குடும்பத்தினர் மறுத்ததால் மனம் உடைந்த குமார் பூச்சிமருந்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்,மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு  செல்லப்பட்டார். அங்குஅவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூரில் கிருஷ்ணகிரி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்த துரை (வயது 46) என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதே போல மத்தூர்-ஊத்தங்கரை சாலையில் லாட்டரி சீட்டு விற்றதாக கீழ்வீதி பகுதியை சேர்ந்த சபரீசன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள், ரூ.600-ம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் மத்தூர் போலீசார் சோனரஹள்ளி ஏரிபகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மத்தூர் கவுண்டனூர் கூட்டு ரோடு பூங்காவனம் (55), போயர்கொட்டாய் மாது (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
    போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள சுண்டகாப்பட்டியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 58), கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் அவர் வெப்பாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு விநாயகமூர்த்தி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விநாயகமூர்த்தி இறந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் கீதா (வயது 18). இவர் தீராத வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு கொண்டிருந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரியகரடியூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் வைஷியா (வயது 12). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி மாணவியின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். 

    இதனால் துக்கம் தாங்காமல் இருந்த மாணவி வைஷியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    கிருஷ்ணகிரி:

    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்த பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி (24) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி ஸ்ரீமதியின் நடத்தையில், அருள் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    அதேபோல் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், தனது கணவரிடம் கோபித்து கொண்டு, ஸ்ரீமதி தனது தாய் வீடான ராயக்கோட்டை பாஞ்சாலி நகருக்கு சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி அருள் மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த அருள், தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதை தடுக்க வந்த ஸ்ரீமதியின் தங்கை உஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    அதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக அருளுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தார். மேலும், மனைவியின் தங்கையான உஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தும், இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா எங்கும் கூறவில்லை என கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர். அவரை பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது.

    நான் தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை.

    சசிகலா ஊர்வலமாக செல்வதை நாடே தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இதை பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவால் துரோகி என்று அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வருகிறார்.

    இவர்கள் தவறு செய்தவர்கள் என்று மக்கள் முழுமையாக ஏற்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆகவே எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்கள், மக்கள் மத்தியில் செல்ல முடியாது.

    எங்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது. மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் எங்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம்.

    எங்களுடைய கொள்கை வேறு, பா.ஜனதாவின் கொள்கை வேறு. அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அவர்களுடன் இணக்கமாக செல்லக்கூடிய காரணத்தால் தான் ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற முடிந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் அவ்வாறு பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×