என் மலர்
கிருஷ்ணகிரி
உத்தனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சாமனப்பள்ளிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கனிந்தூர் பிரிவு சாலை அருகே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் முனியப்பா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
மத்திகிரியை சேர்ந்தவர் கவிதா (வயது 46). இவர் அங்குள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த ராம்பக்கர் (வயது 24), வேலன் (50) ஆகியோர் பள்ளியின் பெண்கள் கழிவறை பக்கமாக நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த தலைமை ஆசிரியை கவிதா, அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமை ஆசிரியையை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்பக்கர், வேலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கருக்கனஅள்ளியை சேர்ந்தவர் வேலன். இவரது மகன் பிரதீஷ் (வயது 5). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வந்தான். சம்பவத்தன்று கிருஷ்ணகிரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிறுவன் பிரதீஷ், ஆலப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஓசூரில் கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். இருவரும் நடிகர்கள், நீண்ட காலமாக நண்பர்கள் என்கின்றனர். அந்த நட்பு ரீதியாக அவர்கள் சந்தித்திருக்கலாம். ரஜினி தன்னால் அரசியல் கட்சி தொடங்க முடியாத சூழலில் உள்ளேன் என கூறிவிட்டார். ரஜினியை சந்தித்து பேசியதை கமல்ஹாசன் தான் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கமல்ஹாசன் கட்சி தொடங்கி எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. மேலும் எந்த மாற்றமும் ஏற்படாது. 60 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து விட்டு மக்களை காப்பாற்றுவேன் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள். நாங்கள் 60 ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இதுபோன்ற கட்சிகள் திடீரென வரும். தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், ஓசூர் மாநகர செயலாளா் எஸ்.நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி போலீசார் சந்தை மைதானத்தில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற புளியம்பட்டி முல்லை நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கிரி என்கிற கோவிந்தசாமி (வயது 45), வேடியப்பன் (35), கோபி (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கெலமங்கலம் போலீசார், வெள்ளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள புளியமரத்து அடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணப்பா (34), யு.புரம் செல்வராஜ் (50), நீலகிரி முனிராஜ் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலய்யா (வயது 40). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்ப பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால் மனமுடைந்த பாலய்யா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாலய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள வெற்றிலைதோட்டத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 59). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தோணிசாமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அந்தோணிசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் குமார் (38). கார் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து மது குடிப்பதை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
பர்கூர் தாலுகா கரடிகொல்லப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மொபட்டில் கல்லாவி-மொரப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேடியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலேநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கப்பா (வயது 33). பெயிண்டர். சம்பவத்தன்று அவர் வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
அதை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த ரங்கப்பா அந்த நபரை மடக்கி பிடித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பென்னங்கூரை சேர்ந்த முருகேசன் (24) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜெயபிரபா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடன் தீர்வு காண வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சம் உயர்த்த வேண்டும். நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அகவிலைப்படி, சரண்டர் விடுப்புகளை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மத்திய செயற்குழு உறுப்பினர் மதுசெழியன் நன்றி கூறினார்.
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகள் கீதா (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ளார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து வீட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கீதா பரிதாபமாக இறந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






