என் மலர்
கன்னியாகுமரி
- பொதுமக்கள் அதிர்ச்சி
- இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட விவசாயி ஒருவரின் மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் மாணவிடம் இருந்த செல்போனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் வந்து கொண்டிருந்துள்ளது. அந்த குறுந் தகவலில் நீ அழகாக இருக்கிறாய் என்றும், உன்னை நான் காதலிக்கிறேன் என்றும் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது பங்கிற்கு பதிலை அனுப்பி உள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் பல மணி நேரம் தங்களது தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, காதலையும் வளர்த்து கொண்டனர். மேலும் அந்த வாலிபர் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் என்றும் தனது நண்பர்களிடமும் நீ நட்பாக பேசு எனவும், கூறி அவரது நம்பரை சக நண்பர்களுக்கும் போன் நம்பரை பகிர்ந்து உள்ளார். சக நண்பர்களும் இவரிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளனர்.
இதில் மிரண்டு போன மாணவி தனது ஆண் நண்பரிடம் தகவலை கூறியுள்ளார். இதற்கு அந்த ஆண் நண்பர் கவலைப்படாதே உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, வீட்டை விட்டு வந்து விடு என கூறியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
மாலையில் வீடு வந்து சேராத மாணவியின் தந்தை, உறவினர்கள் வீடுகள் மற்றும் தெரிந்தவர்கள் வீடு ஆகியவற்றில் தேடிப் பார்த்துள்ளார். மாணவி எங்கு சென்றார் என எந்த துப்பும் துலங்கவில்லை. அவரது போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேறு வழி இல்லாமல் மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்று அந்த வாலிபரின் வீட்டை சோதனை செய்தபோது வாலிபர் சர்வ சாதாரணமாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் வீட்டில் இருப்பதாகவும் கூறினர்.
அதேபோன்று அந்த வாலிபரின் பெற்றோரும் உறுதியாக தங்களது மகன் வீட்டில் தான் இருக்கிறான் என தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் விசாரணையில் இறங்கியபோது தான் தெரிந்தது. அது ஒரு தனி நபர் அல்ல அது ஒரு கும்பல், அந்த கும்பல் இளம்பெண்களை மற்றும் மாணவிகளை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.
இதையடுத்து அந்த கும்பலை கைது செய்ய மாணவி இருக்கும் இடமான சென்னை நோக்கி போலீஸ் படை விரைந்தது. இதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மாணவியை அங்கு விட்டு விட்டு தலைமறைவானது. மாணவியை மீட்ட போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அந்த வாலிபர் நண்பர்களின் போன் நம்பர்களை கொடுத்து வாலிபர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாபெரும் மோசடி கும்பல் எனவும் தெரியவந்துள்ளது. மாணவியை பெற்றோருடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார், அந்த கும்பல்களை சேர்ந்தவர்கனின் முழு விவரங்களையும் சேகரித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து காதலித்து ஏமாற்றும் கும்பலால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2-வது நாளாக இன்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம்
- நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு வீடாக சென்று வழங்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள். முதல் நாளில் குமரி மாவட்டத்தில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாகவும் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் நாளையும், நாளை மறுநாளும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2-ம் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த கட்டமாக விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிக்கை
- 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மணல் மற்றும் கனிம கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், விலை வாசிகளை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி வார்டு பகுதிகளிலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் என மொத்தம் 235 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கிளை பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது
- பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது.
பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதேபோல் ஒரு வார கால பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அவர் தம் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்புடைய நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது மார்த்தாண்டம் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சி அடுத்த மாதம் 15 -ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை
- தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது.
கன்னியாகுமரி:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்திருந்தது. காய்கறி விலைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது. குமரி மாவட்டத்திலும் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்தது. மார்க்கெட் டுக்கு உள்ளூர் பகுதியில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் குறைவான அளவில் இருந்தது.
இதேபோல் ஓசூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூர் பகுதியிலிருந்தும் காய்கறிகள் குறைவாக வந்ததால் காய்கறிகளின் விலை ஏறுமூகமாக இருந்தது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, மிளகாய், பூண்டு விலை அதிகமாக உயர்ந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ ரூ.135-ல் இருந்து ரூ. 120 ஆக குறைந்துள்ளது. மிளகாய் ரூ.120-ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது.
இதேபோல் கேரட், பீன்ஸ், புடலங்காய், கத்தரிக்காய், வழு தலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- தக்காளி ரூ.120, இஞ்சி ரூ.280, மிளகாய் ரூ.100, பூண்டு ரூ.180, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, புடலங்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.35, வெண்க்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.50, சேனைக் கிழங்கு ரூ.70, தடியங்காய் ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.25, பல்லாரி ரூ.25-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் என்பதால் காய்கறிகள் குறைவான அளவில் விற்பனை ஆகி வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றார்.
- 25-ந்தேதி நடக்கிறது.
- விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதனால் 27-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றம் செய்யப்பட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
- அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆடி மாதம் தற்போது பிறந்ததையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.
நாளை (22-ந்தேதி) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுவதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வையார் அம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு கொழுக் கட்டை, கூழ் கஞ்சி படைத்து வழிபாடு செய்ய வும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் அம்மனுக்கு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழிபடவும் தயாராகி வருகிறார்கள்.
கொட்டாரம் கீழத்தெரு வில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி இந்த கோவிலில் நாளை காலை 8.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு கஞ்சி தானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் அர்ச்சனையும் நடக்கிறது. 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடக்கிறது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப் பட்டு மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணி விக்கப்பட்டு அலங்காரத்து டன் சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
முன்னதாக விநாயக ருக்கு முதல் பூஜை நடக் கிறது. அதன்பிறகு முத் தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் இந்த கோவிலில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, பலவேச காரசுவாமி, முண்டன்சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்வார்கள். பின்னர் பக்தர்களுக்கு அந்த வளை யல் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பார்வதி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு அம்மன் பிறந்த நட்சத்திர மான பூரம் நட்சத்திரமான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.
இரவு 7 மணிக்கு ஊஞ்சல் வழிபாடு நடக் கிறது. அப்போது பார்வதி அம்பாளை அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. 8 மணிக்கு பள்ளியறை வைபவம் நடக்கிறது. இந்த வைபவத்தின்போது சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.
மேலும் ஆடிப்பூரத்தை யொட்டி குமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படு வதையடுத்து தோவாளை மார்க்கெட்டுகளில் பூ விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
- குடிபோதையில் மாணவன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
- இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் மாணவர்கள் அதிவேகமாக போக்குவரத்து விதி முறையை மீறி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த னர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை யில் மாணவர்கள் பலருக்கும் லைசென்ஸ் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 14 பேர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி மொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். போலீசார் சோதனை மேற்கொண்டபோது மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக் கிளையும் பறிமுதல் செய்தனர்.
குடிபோதையில் இருந்த மாணவன் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்ததாக 3 பேர் சிக்கினார்கள். அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்து கல்லூரியில் மட்டும் நடந்த சோதனையில் 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 16 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மூலமாக ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல் ஆனது. இதேபோல் வடசேரி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 238 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இருசக்கர வாக னங்களை போலீசார் பூட்டு போட்டு பறிமுதல் செய்த வுடன் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோணம் பாலி டெக்னிக் கல்லூரி பகுதியில் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்து கல்லூரி பகுதியிலும் சோதனை நடத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எனக்கு 18 வயது முடிந்ததுபோல் போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்தனர்.
- விசாரணை நடத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
நெல்லை பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் முதலிய நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 20). இவர், நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது தாய் ராசாத்தியை தந்தை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நானும், எனது தாயும் பாளை வி.எம். சத்திரத்தில் வசித்து வந்தோம். எனது தாய் சமையல் வேலை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். நான் காயல் பட்டணத்தில் உள்ள பள்ளியில் 2020-ம் ஆண்டு பிளஸ்-1 படித்து கொண்டிருந்தேன்.
கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டதால் தாயுடன் வீட்டில் இருந்து வந்தேன். அப்போது குமரி மாவட்டம் முப்பந்தலைச் சேர்ந்த மாடசாமி-பாப்பா ஆகியோர் எனது தாய்க்கு புதுச்சேரியில் தங்கி பார்க்க வேலை வாங்கி கொடுத்தனர். என்னை பாப்பாவின் மகள் இந்துமதியுடன் அனுப்பி வைத்தார்.
இந்துமதி மற்றும் அவரது கணவர் அருள்ராஜுடன் முப்பந்தலில் உள்ள அவர்களது வீட்டில் நான் தங்கியிருந்தேன். அப்போது எனது தாய்க்கு தெரியாமல் அவர்களது உறவினரான விஜய் என்பவருக்கு வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகு விஜய் என்னை தாக்கி கட்டாயப் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் நான் கருவுற்றேன். அதன் பிறகும் என்னை அடித்து துன்புறுத்தியபடி இருந்தார். நான், மைனர் பெண்ணாக இருந்ததால் எனது கணவர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அதற்காக எனக்கு 18 வயது முடிந்ததுபோல் போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்தனர். இந்நிலையில் எனக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து 50 பவுன் நகைகள், வீடு வாங்கி வருமாறு கணவரின் குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நெல்லையில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டுச் சென்றனர்.
மைனர் பெண் என்று தெரிந்தும் என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, ஆவண முறைகேடு செய்து, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த எனது கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு மீது விசாரணை நடத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லெட்சுமி விசாரணை நடத்தி 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கர்ப்பிணி பெண்கள் ஓய்வெடுக்கும் அறையும் ஏற்பாடு
- உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.
கன்னியாகுமரி:
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களில் சிலர் கர்ப்பிணி தாய்மார்களாகவும், சிலர் கைக்குழந்தையுடனும் வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் இட வசதி இல்லை. திறந்த வெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவல நிலை இருந்து வந்தது. எனவே இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் வரை அமைக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதேபோல கர்ப்பிணிகள் தங்கி இளைப்பாறு வதற்கு வசதியாக ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என்றும் பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வாசலுக்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும், கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பெண் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
- குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேல பெருவிளை பகுதியில் தனியார் இடத்தில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில மாதங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சி காய்க்கும் போராட்டத்திலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட் டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க அதற்கான பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். செல்போன் டவர் அமைப்பதற்கு கொண்டு வந்த பொருட்களை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
தொடர்ந்து அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் அருள் சபிதா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிப்பள்ளம் போலீசாரும், அதிரடி படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
டவர் அமைக்கும் பணியை கைவிட்டால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து போராடி வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.
- பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
கோபி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். அது பற்றி அவர்கள், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கோபியின் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அந்த பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
யாரோ மர்ம நபர்கள் கோபியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. கோபி தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருப்பதால், அவரது வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போயுள்ளது என்பன உடனடியாக தெரியவில்லை.
அவரிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டு பீரோவில் ரூ.1½ ரொக்கப்பணம் மற்றும் 5½ தங்க நகைகள் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.
கொள்ளை நடந்த கோபியின் வீட்டிற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்த சிறிது தூரம் ஓடி விட்டு நின்றது.
கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி அதில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றிருந்தவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






