search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம்: போலீஸ் குவிப்பு-பதட்டம்
    X

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம்: போலீஸ் குவிப்பு-பதட்டம்

    • குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேல பெருவிளை பகுதியில் தனியார் இடத்தில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில மாதங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சி காய்க்கும் போராட்டத்திலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட் டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க அதற்கான பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது.

    இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். செல்போன் டவர் அமைப்பதற்கு கொண்டு வந்த பொருட்களை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

    தொடர்ந்து அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் அருள் சபிதா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிப்பள்ளம் போலீசாரும், அதிரடி படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    டவர் அமைக்கும் பணியை கைவிட்டால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×