என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த கடலூரை சேர்ந்த பயணி ராஜேஷ் (வயது 34) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் தங்கத்தில் செய்யப்பட்ட 3 சாவிகள் இருந்தன. மேலும் அவர் அணிந்து இருந்த பெல்ட் கொக்கியும் (பக்கிள்) தங்கத்தால் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுகுமார் (35) என்பவர் தனது கைப்பைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 2 பேரிடமும் யாருக்காக தங்கத்தை கடத்தி வருகிறீர்கள்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணி புரிபவர் கெஜலட்சுமி.
இவர் இன்று காலை 6.30 மணியளவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் ஒரு பெண் அங்கே வந்தார்.
ஆனால் கெஜலட்சுமியுடன் சிறது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “ இந்த குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளுங்கள் கழிவறைக்கு போய்விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி குழந்தையை அவரிடம் கொடுத்தார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த நர்சு கெஜலட்சுமி குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்குள்ள குழந்தைகள் வார்டு சிறப்பு சிகிச்சை பிரிவில் குழந்தையை சேர்த்தார்.
இது குறித்து, காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கொடுத்து விட்டு மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 55). கூலித் தொழிலாளி.
நேற்று மாலை அவர் வேலைக்கு சென்று விட்டு குடிபேரம்பாக்கம் பாலம் அருகே நடந்து வந்தார்.
அங்கு கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்தது.
இதனை கவனிக்காத தேவேந்திரன் பள்ளத்துக்குள் தவறி விழுந்தார். மழைநீரில் மூழ்கிய அவர் தத்தளித்தார். அந்த நேரத்தில் அவ்வழியே யாரும் வராததால் தெரிய வில்லை. சிறிது நேரத்தில் மழைநீரில் மூழ்கி தேவேந்திரன் பலியானார்.
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணிக்காக தோண்டப்படும் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Death
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசினார்.
இதனை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 18-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம், எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர்.
அதில், அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் இன்று காலை காஞ்சீபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக (294-3ன்) படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
தாம்பரம் அருகே பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழிப்பறி கும்பல் பறித்துச் சென்றதாக நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியையும் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.60 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் முகமது அன்சாரி ராஜா(வயது28). இவர் நேற்று முன்தினம் மாலை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கை மற்றும் வயிற்றில் கத்தியால் கிழித்த காயங்களுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது காரில் வந்த கும்பல் தன்னை குத்திவிட்டு ரூ.20 லட்சத்தை பறித்துச்சென்றதாக தாம்பரம் போலீசில் தெரிவித்தார்.

பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன், சேலையூர் உதவி கமிஷனர் வினோத் சந்தாராம், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், பிரவீன் மற்றும் போலீசார்் முகமது அன்சாரி ராஜாவை தீவிரமாக விசாரித்தபோது, அவரே கை மற்றும் வயிற்றில் பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துவந்த முகமது அன்சாரி ராஜா, ஆர்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் சென்னை வந்துவிட்டு திரும்பும்போது, சென்னையில் வசிக்கும் திருச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கொடுக்கும் பணத்தை ஊரில் இருக்கும் அவர்களது குடும்பத்திடம் கொண்டுசென்று ஒப்படைப்பது வழக்கம்.
தனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் இப்படி பணம் கொண்டுசெல்லும்போது நாடகமாடி தனக்கு தேவையான பணத்தை அபேஸ் செய்துவிடலாம் என அவர் திட்டமிட்டார். அதன்படி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மனைவியுடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார். திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் மனைவியை தங்கவைத்தார்.
மன்னார்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் உறவினர் நபீஸ் என்பவர் மூலம் ரூ.60 லட்சத்தை கொடுத்து, வீட்டில் கொடுக்கும்படி கூறினார். திருவல்லிக்கேணியில் நபீஸ் இந்த பணத்தை முகமது அன்சாரி ராஜாவிடம் நேற்று முன் தினம் கொடுத்து மன்னார் குடிக்கு கொண்டுசென்று கொடுக்க சொன்னார்.
பணத்தை பெற்றுக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு முகவரியில் கொடுப்பதாக முகமது அன்சாரி கூறினார். தாம்பரம் சானடோரியத்தில் மனைவியை வரவழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்து கால்டாக்சியில் ஏற்றி திருமுல்லைவாயிலுக்கு அனுப்பிவிட்டார். பின்னர் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் ஏற செல்வதுபோல சென்று பிளேடால் கை மற்றும் வயிற்று பகுதியில் கிழித்துக்கொண்டு, காரில் வந்த கும்பல் பணத்தை பறித்துச்சென்றதாக நபீசிடம் கூறிவிட்டு போலீசில் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது.
போலீசார் திருமுல்லைவாயிலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அங்கு பணத்தை மறைத்துவைத்திருந்த தகவலை ஆர்த்திகா தெரிவித்தார். போலீசார் அந்த பணத்தை சோதனை செய்தபோது ரூ.53 லட்சம் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ரூ.60 லட்சத்தை முகமது அன்சாரி ராஜா ஏமாற்றிவிட்டதாக போலீசில் நபீஸ் புகார் செய்தார். கணவன், மனைவியிடம் இதுதொடர்பாக விசாரித்தபோது, மேலும் ரூ.7 லட்சத்தை திருமுல்லைவாயிலில் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரி ராஜா, அவரது மனைவி ஆர்த்திகா இருவரையும் கைது செய்தனர். ரூ.60 லட்சம் ஹவாலா பணமா? எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறைக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் உஜ்வால்கோயங்கா (வயது 20). பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆதித்யாசேகர் (20). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் வேலூருக்கு திரும்பிச்சென்று கொண்டு இருந்தனர்.
காஞ்சீபுரம் அருகே கீழம்பி ஜங்சன் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தனர். அதே வேகத்தில் இருவரும் சிலஅடி தூரத்துக்கு மோட்டார் சைக்கிளோடு சாலையில் உரசியபடி இழுத்து செல்லப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது.
மாணவர்கள் இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அவர்களை மீட்டு உஜ்வால்கோயங்காவை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், அவருடைய நண்பரான ஆதித்யாசேகரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மத்கான் என்பவரது சூட்கேசில் ஏராளமான பேனாக்கள் இருந்தன. அதனை பரிசோதனை செய்த போது ‘ரீபி’ளுக்கு பதிலாக தங்க கம்பிகள் இருந்தன.
நூதன முறையில் தங்கத்தை கம்பியாக்கி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம்.
இது தொடர்பாக அஸ்மத்கானிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக சென்னைக்கு விதவிதமாக தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
நேற்று தோகாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து இடுப்பு வலிக்காக கட்டும் பெல்ட்டில் 1½ கிலோ தங்ககட்டி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChennaiAirport #Gold
மாமல்லபுரம்:
கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூர் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்த போது 35 கிராம் எடை உள்ள சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமலேஷ், சாய் கிரண், சுகேஷ் என்பது தெரிந்தது. சிறிய கஞ்சா பொட்டலங்களை ரூ. 500-க்கு விற்க கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உல்லாசமாக செலவு செய்வதற்காக கஞ்சா கடத்தி விற்றதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் மாணவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
வந்தவாசி காதர் மீரா தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன். கோரை பாய் வியாபாரி. இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு பின்னர் வந்தவாசி திரும்புவதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தார்.
அப்போது அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த இரண்டு வாலிபர்கள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு அதை எடுத்து தருமாறு நிஜாமுதீனிடம் கூறினார்கள்.
அவர் குனிந்து பணத்தை எடுத்தபோது 2 வாலிபர்களும் நிஜாமுதீன் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம், 12 பவுன் நகை இருந்தது.
இதுகுறித்து நிஜாமுதீன் கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் பகுதியில் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் ராயல் என்பீல்ட் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முன்வரவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும். நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்திலும் பின்னர் தொழிற்சாலைக்கு வெளியில் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்பு கடந்த 3-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சமரச பேச்சுவார்த்தையில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இணை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர்கள் நேற்று காலை வேலைக்கு திரும்பினர். வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் எழுதப்பட்ட படிவத்தில் கையெழுத்து போட்டால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று நிர்வாகம் கூறியது.
இதனை ஏற்கமறுத்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோர்ட்டு உத்தரவின் பேரில் தொழிற்சாலையின் உள்ளே போராட்டத்தில் ஈடுபடகூடாது என எச்சரித்தனர்.
பின்னர் அங்கிருந்து வெளியில் வந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலில் நின்று கோஷமிட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்தனர். மீண்டும் கோஷமிட்டதால் 200 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை வேனில் அழைத்து சென்று வல்லக்கோட்டை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். #tamilnews
போரூர்:
சாலிகிராமம், ஸ்டேட் பாங்க் காலனி, 2-வது தெருவில் வசித்து வருபவர் இம்ரான் (வயது 25). இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இம்ரான் திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அதிகாலை இம்ரான் வீட்டுக்கு ஆட்டோவில் மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இம்ரானை வெளியே அழைத்து திடீரென சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என்று கூறி மர்மகும்பல் கணவர் இம்ரானை கடத்தி சென்று உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
இம்ரான், திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்த போது ஏதேனும் தகராறு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு வேறு யாருடனும் ஏற்பட்ட மோதலில் அவரை மர்ம கும்பல் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே வீட்டில் இருந்த இம்ரானை மர்ம நபர்கள் தாக்கி கடத்தி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.






