என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private factory employees arrested"

    காஞ்சீபுரம் படப்பை அருகே தனியார் கம்பெனியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் பகுதியில் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் ராயல் என்பீல்ட் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முன்வரவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும். நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்திலும் பின்னர் தொழிற்சாலைக்கு வெளியில் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்பு கடந்த 3-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த சமரச பேச்சுவார்த்தையில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

    இணை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர்கள் நேற்று காலை வேலைக்கு திரும்பினர். வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் எழுதப்பட்ட படிவத்தில் கையெழுத்து போட்டால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று நிர்வாகம் கூறியது.

    இதனை ஏற்கமறுத்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோர்ட்டு உத்தரவின் பேரில் தொழிற்சாலையின் உள்ளே போராட்டத்தில் ஈடுபடகூடாது என எச்சரித்தனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியில் வந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலில் நின்று கோஷமிட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்தனர். மீண்டும் கோஷமிட்டதால் 200 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை வேனில் அழைத்து சென்று வல்லக்கோட்டை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    ×