என் மலர்
காஞ்சிபுரம்
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 64). இவர் அதே பகுதியில் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அல்போன்சை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாலூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பொன்னியம்மன் கோவிலை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது 5 வயது மகன் குமரகுரு.
குருபிரசாத்துக்கு மது பழக்கம் உள்ளது. இவர் மகன் குமரகுருவுடன் ஓரகடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மகன் குமரகுருவை கடையின் வெளியே விட்டு விட்டு குருபிரசாத் மது குடிக்க சென்றார்.
இந்த நிலையில் மகனுடன் வெளியே சென்ற கணவர் குருபிரசாத் வீடு திரும்பாததால் மனைவி முருகம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கணவரை தேடியபோது மதுக்கடை பாரில் குடிபோதையில் கணவர் குருபிரசாத் மயங்கி கிடப்பது தெரிந்தது. மகன் குமரகுருவை காணவில்லை. அவன் மாயமாகி இருந்தான்.
இது குறித்து முருகம்மாள் ஓரகடம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கன்னா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார்.
மதுக்கடை அருகே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வேஷ்டி, சட்டை அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் சிறுவன் குமரகுருவுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்த படி அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் குமரகுருவை கடத்தி செல்வது தெரிந்தது.
அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
போரூர்:
அசோக் நகர் 48-வது தெருவில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் இருதயராஜ் (வயது61). இவரது மனைவி புஷ்பமேரி(58) இருவரும் பூங்காவில் உள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பொதுமக்கள் பூங்காவிற்கு நடைபயிற்சி செல்ல வந்தனர். அப்போது அங்குள்ள அறையில் இருதயராஜ் அவரது மனைவி புஷ்பமேரி ஆகியோர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அசோக்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ் பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இருதயராஜும் அவரது மனைவி புஷ்பமேரியும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக இருதயராஜின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த இருவரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் கூடலூர் ஆகும். அங்குள்ள அவர்களது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்த பின்னரே குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது தெரியவரும்.
மாநகராட்சி பூங்காவில் காவலாளியும், அவரது மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திலீபன், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைதா இருவரும் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறி வைத்து அவர்களிடம் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக முத்தலாக் சட்ட மசோதா பாராளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேல்-சபையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பெண்களின் உரிமையை பாதுகாக்க முன்வராமல் எதிர்ப்பது முறையல்ல
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் கூறி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கிரண்பேடி முன்னுரிமை வழங்குகிறார்.
புதுச்சேரி அரசில் தலையிடாமல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது புதுச்சேரி அரசின் கையாலாகாததனம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை கொண்டு வருவது நியாயமானது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க இந்த தடை அவசியம். அதை எதிர்க்க கூடாது.
பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற, இறக்கத்தை வைத்து அரசியல் நடத்த பா.ஜனதா விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரி பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘பா.ஜனதாவில் மு.க.அழகிரி சேருவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை’’ என்று கூறினார். #ponradhakrishnan #MKAzhagiri #bjp
முத்தலாக் சட்டத்தின் மூலம் சிறைத்தண்டனை விதிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே வருகிறது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை திமுக நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம். இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு
பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பா.ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.
பாராளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்.
இதுவரைக்கும் இருந்த பிரதமர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் அவைக்கு வந்து பதில் அளித்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற கூட்டம் தொடர் நடக்கும்போதே வெளிநாட்டுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு இருந்த நிலையில் இப்போது இல்லை. வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதாவின் நிலை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்து தான் தேர்தல் முடிவு இருக்கும்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் தான் சந்திக்க வேண்டும் என்ற நிலையில் எல்லா கட்சிகளும் உள்ளன. பா.ஜ.க.வும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.
அதே நேரத்தில் எந்த கட்சியோடும் ஒட்டிபோக வேண்டும் என்ற ஏக்கத்தில் பா.ஜனதா இல்லை. சம உணர்வோடு யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி.
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? அல்லது மற்ற கட்சியின் தலைமையை ஏற்குமா? என்று இப்போது கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
3 பெண்களுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடரின் போது அரசு தானாக முன்வந்து எப்படி இழப்பீடு தருகிறதோ அதேபோல் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தானாக முன்வந்து இழப்பீடு கொடுப்பதுடன் வாழ் நாள் முழுவதும் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும்.
மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பணம் செலவாகிறது என்ற குற்றச்சாட்டு சரியானது அல்ல. இந்த பயணத்தால் வெளிநாட்டின் முதலீடுகள், திட்டங்கள் எவ்வாறு வந்திருக்கிறது என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan
திருப்போரூர், டிச. 28-
கேளம்பாக்கம் அருகே உள்ள நாவலூரை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில் 29 மாடிகள் கொண்ட ராணுவ குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், அவரது மனைவி ஷீலாதேவி (வயது 20) ஆகியோர் அங்கு தங்கி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் வெவ்வேறு தளங்களில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். சுமார் 4 மணி அளவில் 19-வது மாடியில் இருந்த ஷீலாதேவி திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
19-வது மாடியில் இருந்து ஷீலாதேவி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா? என்று பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த காவலாளி, பணியில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலந்தூர்:
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது28). இவர் வடபழனியில் தங்கி மணலியில் உள்ள ரசாயன கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேளச்சேரியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹெல்மெட்டுடன் தலைநசுங்கி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சங்கரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதிகைச் சேர்ந்தவர் சண்முகம் (54). சமையல் தொழில் செய்து வருகிறார்.
இவரது தம்பி சீனிவாசன் (49). இவர் சமையல், எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சண்முகம், சீனிவாசன் இருவரும் அவர்கள் தாயார் வீட்டில் முன்பாகத்திலும், பின் பாகத்திலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனிவாசன் முன்பாக சொத்தை தனது தாயாரிடம் கேட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த சீனிவாசன் தனது தாயார் மற்றும் அண்ணன் சண்முகத்திடம் சொத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதை தட்டி கேட்ட அண்ணன் சண்முகம் கழுத்தை தன்னிடம் இருந்த பிளேடால் சீனிவாசன் அறுத்துள்ளார். அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தப்பி ஓடிய சீனிவாசனை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார். சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (பெயர் மாற்றம்). இவர் தனது உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் (பெயர் மாற்றம்) என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சங்கீதாவின் குடும்பத்தினர் அவரை வேறொருவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சங்கீதா காதலனை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.
நேற்று இருவரும் வயல் வெளியில் எலி மருந்து குடித்தனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் கண்ட கிராமத்தினர் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






