என் மலர்
காஞ்சிபுரம்
படப்பை:
படப்பை அடுத்த வரனாவசி பகுதியை சேர்ந்தவர் பிரேமா(67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். பின்னர் திடீரென வீட்டில் புகுந்து பிரேமாவை தாக்கிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றார்.
இது குறித்து பிரேமா ஒரகடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்நிலையில் ஒரகடம் மேம்பாலம் கீழே சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நேற்று நின்று கொண்டு இருந்தார்.
விசாரணை நடத்தியதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆன்டனி தேவா அரவிந்த் (22) என்று தெரியவந்தது. ஒரகடம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதை ஒப்புக் கொண்டார். எனவே அவரை கைது செய்து 7 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
படப்பை:
வாலாஜாபாத் அடுத்த தென்னேரி அகரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருந்தேவி (வயது 39).
கணவன்-மனைவி இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
ஓரகடம் அடுத்த தெரசாபுரம் அருகே செல்லும்போது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பெருந்தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த செந்தில்வேலை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள சின்னையனன்சத்திரத்தை அடுத்த சூரமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பொற்செல்வி (20). இவர் காஞ்சிபுரம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் படித்து வந்தார். மணிகண்டனும், பொற்செல்வியும் காதலித்து வந்தனர்.
காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் வீட்டை வீட்டுக்கு வெளியேறி காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூர் வேளாங்கன்னி நகர் பகுதியில் வீடு வாடைகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பொற்செல்விக்கும் மணிகண்டனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே பொற்செல்வி மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொற்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பொற்செல்வியின் தந்தை மணி தன் மகளை வரதட்சணை கேட்டு மணிகண்டன் கொடுமைபடுத்தி வந்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசில் புகார் செய்து உள்ளார்.
திருமணம் ஆகி 2 வருடம் ஆவதால் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.
ஆலந்தூர்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தூத்துக்குடி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு பா.ம.க. ஆதரவு தந்திருக்கிறது.
ஈழத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம்.
சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மம் என்ற காரணத்தினாலே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்து வாக்களித்து உள்ளோம். நாங்கள் வாக்களித்தது ஈழத் தமிழருக்கு எதிராக அல்ல.
மந்திரி பதவிக்காக நாங்கள் வாக்களிக்கவில்லை. அன்புமணி ராமதாசுக்கு மந்திரி பதவி தந்தாலும் நாங்கள் வேண்டாம் என்று தான் சொல்வோம். ஏற்கனவே மந்திரி பதவி வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
படப்பை:
படப்பை அடுத்த மணிமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரகாஷ் (16).
இவர் படப்பையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியியை சேர்ந்த செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் பிரகாசை அழைத்து கொண்டு புஷ்ப கிரி சாலையில் படப்பை நோக்கி சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பிரகாஷ் பரிதாபமாக பலியானார்.
செல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்தார். நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (20). சிதம்பரத்தில் உள்ளஒரு வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று தனது பெற்றோர் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்கு சொந்த ஊர் காஞ்சீபுரம் வந்தார். இரவு 7 மணிக்கு தனது நண்பர் சந்தோஷை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார். நசரப்பேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற கனரக லாரியை முந்த முயன்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகன், சமோதஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி நிற்காமல் அதிவேகமாக சென்று விட்டது.
தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர்களின் உடல்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பெரிய பெரிய வெங்காய மண்டி வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்தது தான் விலை உயர்வுக்கு காரணம். வட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாமதமாக வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்கிறது. வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கையும் சேர்க்க வேண்டும். இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக தமிழர்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது உள்ள பிரதமர், ஜனாதிபதி எல்லோரும் போர்க்குற்றவாளிகள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் இலங்கையையும் சேர்க்கவேண்டும். ஏற்கனவே அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருடைய வீட்டில் இந்திரசேனா (40) என்பவர் தங்கி மாடுகளை கவனிக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்தவேலூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் வழியே சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் குமாரும், இந்திர சேனாவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பலியான இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் இருந்து லாரியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் போலீசார் செவிலிமேடு ஜங்சன் என்ற இடத்திற்கு சென்றனர்.
லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வடகல்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜ், செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
ஆதம்பாக்கம் நியூகாலனி ஏரிக்கரை தெருவில் கழிவுநீர் குழாய் சரிபார்க்கும் பணி 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் அகற்றும் மோட்டார் பழுதடைந்ததால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் சாக்கடை நீர் புகுந்துள்ளது. குடிநீரிலும் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், மக்கள் நலசங்க தலைவர் லோகேஷ் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரி சுபாஷினியை சந்தித்தனர். அப்போது, கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முகேசன். இவரது மகன் மணிமாறன் (15).
இவர் வடக்கு பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மணிமாறன் வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பு ஆசிரியர் அவரிடம் ரெகார்ட் நோட்டு கேட்டு உள்ளார். வீட்டில் மறந்து வைத்து விட்டேன் என கூறி உள்ளார்.
உடனே ஆசிரியர் வீட்டுக்கு சென்று நோட்டு எடுத்து வா என்று திட்டி அனுப்பிவைத்தார்.
வீட்டில் இருந்த ரெக்கார்டு நோட்டில் பாடம் எழுதவில்லை. எனவே தன்னை ஆசிரியர் மேலும் கண்டித்து விடுவார் என்ற பயத்தில் மணிமாறன் வீட்டின் மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே பள்ளியில் சமையல் வேலை செய்யும் மணிமாறனின் பாட்டி ராஜம்மாள் நீண்ட நேரமாகியும் மணிமாறன் வராததால் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது மணிமாறன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொது மக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மாணவன் தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கிறார்.
மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பம், திருப்போரூர் - நெல்லிக்குப்பம் சாலையில் விமல்சந்த் என்பவருக்கு சொந்தமான அடகு கடை உள்ளது.
நேற்று இரவு 8.30 மணி அளவில் விமல்சந்த் வழக்கம் போல் கடையை மூடுவதற்கு தயாரானார்.
அப்போது முகமூடி அணிந்த 3 வாலிபர்கள் ஒருவர் பின் ஒருவராக கடைக்குக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென கைத்துப்பாக்கியால் கடை உரிமையாளர் விமல்சந்த்தை மிரட்டி நகைகளை கொடுக்கும்படி கேட்டான்.
உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட விமல்சந்த் தனது காலுக்கு கீழே இருந்த அபாய அலாரத்தை ஒலிக்க செய்தார். அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் தலைதெறிக்க கடையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் அலாரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் அடகு கடை முன்பு திரண்டனர். அப்போது தான் அடகு கடைகாரரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் மிரட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து காயார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அடகு கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் நுழைவதும் பின்னர் அடகு கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதும் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே கடையில் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அலாரம் வயரை துண்டித்து பணம்-நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது கடை உரிமையாளருக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமிரா சென்சார் மூலம் குறுஞ்செய்தி வர அவர் உடனடியாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
இதனால் அப்போதே கடையில் இருந்த நகை- பணம் தப்பியது. இதே போல மற்றொரு முறை கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்த போதும் அலாரம் ஒலித்ததால் நகை-பணம் தப்பியது.
தற்போது அதே கடையில் 3-வது முறையாக கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. உரிமையாளர் சரியான நேரத்தில் அலாரத்தை ஒலிக்க செய்ததால் கடையில் இருந்த நகை-பணம் தப்பியது.






