என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அச்சரப்பாக்கம் அருகே கணவன்-மனைவி உள்பட 5 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சரபாக்கம் அருகே உள்ள கடமலை புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜவரதன் (வயது 70). இவர்களது மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா, பேரன் கவின். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 8.30 மணி அளவில் கஜவரதன் உட்பட 5 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் உருட்டுக்கட்டை வைத்து இருந்தனர். அதனை வைத்து வீட்டில் இருந்த அனைவரையும் விரட்டினர்.

    மேலும் கஜவரதனையும், அவரது மகன் ஜெகநாதனையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பின்னர் மர்ம கும்பல் கஜவரதன், லட்சுமிபாய், ஜெகநாதன், ஹேமலதா, சிறுவன் கவின் ஆகிய 5 பேரையும் கட்டிப்போட்டனர். இதைத்தொடர்ந்து ஹேமலதா, லட்சுமிபாய் ஆகியோர் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று பீரோவில் நகை, பணம் உள்ளதா என்று தேடினர்.

    2 பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்த தப்பி சென்று விட்டனர்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் கஜவரதன் தனது கையில் இருந்த கட்டை அவிழ்த்தார். பின்னர் மற்றவர்களின் கட்டையும் அவிழ்த்து மீட்டார்.

    இது குறித்து கஜவரதன் அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மொத்தம் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளை கும்பல் வீட்டுக்குள் புகுந்ததும் அனைவரையும் மிரட்டி விட்டு டி.வியின் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பயந்து போன அனைவரும் கூச்சலிடவில்லை.

    கஜவரதனின் வீடு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இவரது வீட்டின் அருகே மற்ற வீடுகள் எதுவும் இல்லை. வீட்டின் அருகே உள்ள காலி இடத்தின் வழியாக கொள்ளையர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் சர்வசாதாரணமாக வந்து தங்களது திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    மேலும் கொள்ளையர்கள் அனைவரும் முகத்தை தெரியாத அளவிற்கு குல்லா அணிந்து இருந்தனர். அவர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை முடித்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே ஜவுளி கடையில் பைகளை கட்டப் பயன் படுத்தும் பிளாஸ்டிக் டேக்கை கொண்டுவந்து இருக்கிறார்கள்.

    ஹேமலதாவையும், அவரது மகன் கவினையும் அந்த பிளாஸ்டிக் டேக்கால் கட்டி உள்ளனர். கொள்ளை யர்கள் அனைவரும் அதிக அளவில் அவர்களுக்குள் பேச வில்லை. இதனை வைத்து சிக்கிக்கொள்வோம் என்று தெரிந்து காரியத்தை முடித்து உள்ளனர்.

    கொள்ளை நடந்த வீட்டின் அருகே மேலும் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இத்தனை பேர் மொத்தமாக கொள்ளையில் ஈடுபடுவது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. எனவே இதில் ஈடுபட்டது வட மாநில கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    கொள்ளை திட்டம் முடிந்ததும் அருகே நிறுத்தி இருந்த வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அச்சரப்பாக்கம், கடமலைபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் ஏதேனும் வந்துள்ளதா? என்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் கஜவரதன் வீட்டிற்கு யாராவது வந்து சென்றார்களா? என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். கஜவரதனின் வீடு தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கை வரிசையை காட்டி உள்ளது.

    கொள்ளை கும்பல் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவம் அச்சரப் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. பெருமாள் கோவில்களில் அதிகாலையில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் வழக்கமாக திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசிப்பது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நாளை தரிசனத்துக்கு தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழவில் நாளை (13-ந்தேதி) பொதுமக்களின் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் ஆகம விதிகளின்படியும் பழக்க வழக் கத்தின் படியும் சன்னதிக் குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.

    எனவே பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நேரலையை நாளை காலை 6 மணி முதல் https//youtube/nBsmNhigTji என்ற இணையதள முகவரியில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் வீர ராகவர் கோவிலில் நாளை சொர்க்வாசல் திறக்கப்படும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், காலை 6.30 மணிக்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.

    இங்கு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவு சாப்பிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து  பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக் குறியானது.

    இந்தநிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழில் சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    போகி திருநாளில் பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு காஞ்சிபுரம் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது வருமாறு:-

    அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.

    இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், 'பழையன கழிதலும். புதியன புகுதலுமென' நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கபபட்டு ஆகாயம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு (15) ன்படி இது தண்டனைக்குரியதாகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி (வயது 85). இவரது மகள் லட்சுமி. இவர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது தாய்க்கு தேவையான உணவை நாள்தோறும் வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது தாய்க்கு உணவு வழங்க வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது தாய் வெளியூர் ஏதாவது சென்று இருக்கலாம் என்று நினைத்து உள்ளார்.

    இந்த நிலையில் ராணி வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி ராணி கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.
    பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    சோழிங்கநல்லூர்:

    ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீடுகளையும் காலி செய்ய மறுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பெத்தேல் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடுகளை காலி செய்யக்கோரி அங்கு குடியிருப்பவர்களுக்கு படிவம்-6 நோட்டீஸ் கொடுக்க முயன்றனர்.

    இதனை வாங்க மறுத்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்துறையினர் வெளியே செல்லவேண்டும் என்று கோ‌ஷமிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    தகவல் அறிந்த கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை காலிசெய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    நந்தம்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுடர்விழி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த கண்ணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கினார். இதை பார்த்த அவரது மனைவி சுடர்விழி தூக்குப்போட்டு கொண்டார். மகன் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்ட வீட்டில் இருந்த உறவினர்கள் வந்து பார்த்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுடர்விழி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்-லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் இன்று முதல் நடைமுறைபடுத்தி உள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க வெளிநாட்டவருக்கு ரூ.600, உள்நாட்டவருக்கு ரூ.40 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையின்போது தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நுழைவு சீட்டுகள் ஆன்-லைனில் மட்டுமே வழங்கப்பட்டது.

    இதனால் ஆன்டிராய்டு போன் இல்லாதவர்களும், கிராமத்து சுற்றுலா பயணிகளும் டிக்கெட் எடுப்பதில் சிரமப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆன்-லைன் டிக்கெட் நிறுத்தப்பட்டு கவுன்டரில் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கப்பட்டது.

    தற்போது ஒமைக்ரான், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் தொல்லியல்துறை இன்று முதல் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்-லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் நடைமுறைபடுத்தி உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருமலையில் உள்ள மதுபான கிடங்கில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. லாரி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை அருகே சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற வாலிபர் லாரியின் அடியில் சிக்கினார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க தொடர்ந்து போராடினர். முடியாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து லாரி அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மார்த்தாண்டத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் உடைந்து மது ஆறாக ஓடியது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு நாளை (10-ந் தேதி) முதல் செலுத்தப்பட இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 5898 பேர் உள்ளனர்.

    2-ம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்டு) செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 நாட்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். எனவே நாளை நடைபெறும் முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி பரிந்துரைக்கப்பட பயனாளிகசெலுத்தி கொண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொடர்பான பொதுமக்களின் புகார்களை கண்காணிக்கும் எண் 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண் 044-27237784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண் 044-27237785, வாட்ஸ் ஆப் எண் 9345440662 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

    இதனால் இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. அதன் பின்னால் சென்னை நோக்கி வந்த நிஜாமுதீன் விரைவு ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

    பழுதாகி நின்ற விழுப்புரம் பயணிகள் ரெயில் சக்கரத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×