என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கடுவஞ்சேரியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் கடுவஞ்சேரி அடுத்த தாத்தானூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை யொட்டி வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
நேற்று இரவு ராமச்சந்திரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்து ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ. 75ஆயிரம், லேப்-டாப், எல்.இ.டி. டிவி., உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்ன காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 63 வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ரவுடிகளின் கொட்டத்தை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்டு வெள்ளதுரையும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி தியாகு அரியானாவில் பதுங்கி இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தனிப்படையினரை அரியானாவுக்கு அனுப்பி வைத்தார். போலீசார் அங்கு சென்று தியாகுவை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 591 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னைக்கு அடுத்த இடத்தில் நோய் தொற்று அதிகம் பரவும் இடமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.
நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நோய் தொற்று அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா விடுதி உள்ளது. இங்கு 78 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையல் கல்பாக்கம் அணுமின் நிலைய கேண்டீனிலும் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேண்டீன் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவு வந்த பின்னரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தெரிய வரும். மேலும் அணுமின் நிலைய அனைத்துத்துறை ஊழியர்களும் வரும் 31-ந் தேதி கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப்பணி சேவைகள் நிர்வாகம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் சுமார் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் முக்கிய சந்திப்பு, சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்தும், நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தையும் வலியுறுத்தினர். அத்தியாவசிய சேவைகளுக்கும், அது சார்ந்த பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்தது. இதனால் உள்நாட்டு விமானங்களும் 270 லிருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது. தற்போது 186 விமான சேவையாக குறைந்தது.
பொங்கல் பண்டிகையினால் தொடர் விடுமுறை, கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வருகை குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் ரத்து ஆனதால் பயணிகளுக்கு விமான கட்டணம் பணமாக திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த டிக்கெட்களை பயன்படுத்தி எந்த நகரமாக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயணிகள் தரப்பில் விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமானம் ரத்தானால், விமான கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (67) துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த மாதம் 29-ந் தேதி அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் நகையை அடமானம் வைத்து ரூ1லட்சத்து 28 ஆயிரம் பணத்துடன் வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் நடராஜனிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், ஏட்டு ராஜ்மோகன், அசோக் குமார், ஞானசேகர், கேசவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மர்ம கும்பலை பிடிக்க சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வங்கி முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவன் ஆந்திரா மாநிலம் ஒஜிகுப்பத்தை சேர்ந்த சரவணராஜ் (46) என்பதும் வில்லிவாக்கம் பகுதியில் தங்கி தனியாக வங்கிக்கு வந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களை நோட்ட மிட்டு அவர்களது கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நடராஜனிடம் பணப்பையை பறித்து சென்றதையும் அவன் ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து போலீசார் சரவணராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணராஜ் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.






