என் மலர்
காஞ்சிபுரம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், அண்ணா நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர செயலாளர் சன் பிரான்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், இளைஞரணி அமைப்பாளர் துணை செயலாளர்கள் யுவராஜ், டாக்டர் சோபன்குமார், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், ஞானசேகரன், பூபாலன், வி.எஸ்.ராமகிருஷ்ணன் எம்.எஸ்.சுகுமார், தசரதன், நகர அவைத்தலைவர் சந்துரு, துணைசெயலாளர் ஜெகன்னாதன் கருணா நிதி, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்.கே.பி.சீனிவாசன், சாட்சி சண்முக சுந்தரம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் எழிலரசன் எம்.எல்.ஏ. திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அண்ணா நினைவில்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், ஏகாம்பரம், அருள், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நினைவில்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நிர்வாகிகள் ஏகாம்பரம், குமார், வனஜா மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை பகுதியில் இன்று காலை வேளாண்மைத் துறை உதவி அலுவலர் தேவசேனாபதி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணனிடம் ஒப்படைத்தனர்.
சோழிங்கநல்லூர்:
சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முருமா. கணவன்-மனைவி இருவரும் பாரிமுனை செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் பெரும்பாக்கம் பஸ் பணிமனைக்கு வந்தனர்.
அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அந்த பஸ் காலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் காலை 5.30 மணி ஆகியும் வண்டியை டிரைவர் எடுக்கவில்லை.
இதனை செந்திலும் அவரது மனைவி முருமாவும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம்அடைந்த டிரைவர் அவர்களை அவதூறாக பேசி 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். இதில் முருமா மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளும் அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் டிரைவரை கண்டித்து பஸ்நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அங்கிருந்த பஸ் ஊழியர்களை தாக்கத் தொடங்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பயணிகள் மீது தாக்குதல் நடத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் பதற்றமான 88 வாக்குச் சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.
இவை தவிர மீதமுள்ள 296 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3,64,086 பேர் வாக்களிக்க உள்ளனர்.1536 பேர் வாக்குப்பதிவு அலு வலர்களாக செயல்பட உள்ளனர்.
மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 8 பேர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் உள்ளூர் தேர்தல் பார்வையாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.
புகார்கள் மற்றும் குறைகளை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்க சுகாதாரத் துறையின் மாவட்ட துணை இயக்குநர் சித்ர சேனா செயல்படுவார்.
வீடுவீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் உள்ளரங்கத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். அந்த இடத்தின் விபரங்களை கொரோனா கட்டுப்பாட்டு அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் அரசுப் பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் கூட்டம் மார்ச் மாதம் 2-ந் தேதியும், மேயர் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் தேர்வு வரும் மார்ச் மாதம் 4-ந் தேதியும் நடத்தப்படும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுவரை 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அஸ்வித் (வயது 11). இவர் களியாம்பூண்டியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அஸ்வித் ராவத்தநல்லூரிலிருந்து சைக்கிளில் காரணி மண்டபம் என்னும் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் வந்த கார் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக திருப்பியபோது அஸ்வித் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அஸ்வித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பதற்றமான 88 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.
மாவட்டத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் என 7 பறக்கும்படை செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் ஆகியனவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெறும்.
குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை அருகே சிறுகளத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் தயார் நிலையில் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.044-2723 7423 மற்றும் 044-2723 7690 செயல்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை மேற்குறிப்பிட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க.வில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுராந்தகம் நகராட்சி, உத்திரமேரூர், இடையன்குழி, வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் அடங்கி உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.முக., தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் தி.மு.க. மாவட்ட செயலாளரான க.சுந்தரை சந்தித்து ஏற்கனவே பட்டியல் கொடுத்து இருந்தனர்.
இதில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்ய உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 வார்டுகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் எந்தெந்த கட்சிக்கு எத்தனை வார்டு என்பது முடிவாகும். அதற்கு முன்பாக எதுவும் கூற இயலாது’ என்று தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா மற்றும் அதைச் சார்ந்த ஒமைக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் 81 சதவீதம் என்ற குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 1,97,789 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.
எனவே பயனாளிகளை நேரிடையாக தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 395 மாபெரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியும், குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 நகராட்சிகளும், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய 3 பேரூராட்சிகளும் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 57 வார்டுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 42 ஆயிரம் பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 32 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர்.
தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2-வது பிரதான சாலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்படுவதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணையில், ரேஷன் கடை ஊழியர் கோமதி உதவியுடன் 2 டன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கோமதி, ராஜேந்திர பாண்டியன், பொன்சங்கர நாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சஞ்சீவியை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கப் பிரிவு விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பன்னாட்டு சரக்ககப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனா். இதையடுத்து சென்னைக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் சரக்கு பெட்டகங்களை கண்காணித்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பார்சலில் எந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணில் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் புத்தம் புதிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகள் இருப்பதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.






