என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மனுக்கு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

    பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சிவவாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச அய்யர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோவில் செயல் அலுவலர் நதியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர் மற்றும் கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருகிற 12-ந்தேதி தங்கப் பல்லக்கும், 14-ந் தேதி தேரோட்டமும், 16-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரியும் 19-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம், டேல்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று பத்து மாத ஆட்சியில் சுய ரூபத்தை மக்கள் அறிந்து மிகவும் வருத்தப்படுகின்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது, அதை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. நிர்வாக திறமை இல்லை. வரலாற்று சாதனையாக, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா சொன்ன அனைத்து சாதனைகளையும் நிறைவேற்றிக் காட்டி னார்கள்.

    பொங்கல் தொகுப்பு முழுவதும் தரமான பொருட்கள் வழங்காததால், விசாரணை கமி‌ஷனில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது தி.மு.க. அரசு. ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தரப்போறாரு என வீதிவீதியாக, கடைகடையாக, பேனர் வைத்தார்கள். விடியவும் இல்லை அவர் நல்லாட்சி தரவும் இல்லை.

    இன்றைக்கு அவர் டிவியில் வந்து கொண்டிருக்கிறார். ஏன் என்றால் மக்களை நேரடியாக சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது தி.மு.க. அரசுக்கு.

    தி.மு.க ஆட்சியில் எல்லாமே வெளிவே‌ஷம், நேரடியாக ஸ்டாலின் தெருவுக்கு வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அவருக்கு மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற பத்தே மாதங்களில் ஒரு அரசு கெட்ட பெயர் வாங்கி இருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் எஸ். எஸ்.ஆர். சத்யா, நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த இருகுன்ற பள்ளி அருகே பாலாற்றில் 1955-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.

    இதன் பின்னர் 1986-ம் ஆண்டு அதன் அருகிலேயே மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் வந்து செல்கின்றன.

    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் அதிகளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பழைய பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    மேலும் பாலத்தில் உள்ள 12 இணைப்பு பகுதிகளும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வாகனங்கள்

    அதன்படி நேற்று முதல் சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது.

    சென்னை-திருச்சி, திருச்சி- சென்னை என இரு மார்க்கமாக வரும் வாகனங்களும் ஒரே பாலத்தில் சென்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை ஒரே பாலத்தில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துரை, சாலவாக்கம் வழியாக காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்து திம்மாவரம் பாலம் வழியாக சுமார் 15 கி.மீ. சுற்றி சென்னை நோக்கி திருப்பி விடப்பட்டது.

    காலையில் இரு சக்கர வாகனங்களை நேரடியாக பாலத்தில் அனுமதிக்காததால் அவர்களும் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பாலம் சீரமைப்பு பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து புதிய பாலம் வழியாக இரு மார்க்கத்திலும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. சென்னை நோக்கி வரும் வாகனங்கள் 15 கி.மீ. சுற்றியும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும் சென்று வருகின்றன.

    வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் செங்கல்பட்டு பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அதிக அளவிலான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் போக்குவரத்து நெரிசலில் பஸ், லாரி, கார்கள் சிக்கி தவித்தன.

    சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் சென்னை நோக்கி வந்த வாகன ஓட்டி கள், பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

    பழைய பாலத்தில் சீரமைப்பு பணி 20 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அருகே உள்ள புதிய பாலத்திலும் சீரமைப்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அப்போது பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

    இதன் காரணமாக வருகிற 40 நாட்களும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் என்று தெரிகிறது. இதனால் வரும் நாட்கள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

    இதையும் படியுங்கள்... நீட் விவகாரம்- சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கியது

    மனைவிக்கு வாக்களிக்கும்படி கத்தியை காட்டி மிரட்டி ஓட்டுகேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவராக இருந்தவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்தில் விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது. அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதையடுத்து பூபாலன் தனது மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட களம் இறக்கினார்.

    வேட்பு மனுக்கள் பரிசிலனை முடிந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூபாலன் 1-வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் சுயேச்சையாக போட்டியிடும் தனது மனைவி தனலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

    அங்கு ரோந்து பணியில் வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பூபாலனை கையும் களவுமாக கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி பெற்றுள்ள 54 பேரும் போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வாங்கி வைத்துள்ளனர். அவ்வாறு உரிமம் பெற்று 54 பேர் துப்பாக்கி வாங்கி வைத்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போது நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி பெற்றுள்ள 54 பேரும் போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

    தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது அவர்களுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போதுள்ள நிலவரப்படி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. 42 வார்டுகளில் நேரடியாக களத்தில் மோத உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. தி.மு.க. சார்பில் 42 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    9-வார்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 இடங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நிற்கின்றனர்.

    தற்போதுள்ள நிலவரப்படி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. 42 வார்டுகளில் நேரடியாக களத்தில் மோத உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளூர் அளவிலான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக கண்காணிக்கும் பொருட்டு, 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளூர் அளவிலான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்-9445000903, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு எஸ். மதுராந்தகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் 1, சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் செல்போன்-7305955670 , உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பாபு, மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்- 9445000168, வாலாஜாபாத் பேரூராட் சிக்கு பிரகாஷ்வேல், மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின நல அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்-7338801259),

    மாங்காடு நகராட்சிக்கு சீனிவாசராவ், திட்ட இயக்குநர், மகளிர்திட்டம், காஞ்சீபுரம் செல்போன் எண்.- 9444094280, குன்றத்தூர் நகராட்சிக்கு கோபி, உதவி இயக்குநர் (தணிக்கை), காஞ்சீபுரம் செல்போன் எண்- 7402606006) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    35-வது வார்டில் மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகாலட்சுமிக்கு 20 வயது ஆகியிருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
    2 கட்டமாக நடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு- ஹால் டிக்கெட் இன்று பதிவிறக்கம் செய்யலாம்

    கணினி வழி தேர்வுக்கான பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


    சென்னை:

    ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 ஆகிய காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி வழியாக 2 அட்டவணைகளின்படி நடைபெறுகிறது.

    வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மற்றும் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆகிய தேதிகளில் காலை, மாலை இரு வேளைகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

    19-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அன்று தேர்வு நடைபெறாது. இத்தேர்வுக்குரிய மாவட் டத்தின் நுழைவு சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளீடு செய்து இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

    தேர்வர்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு நுழைவுசீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும், புகைப்படத்தின் அசல் பிரதியையும் எடுத்து வர வேண்டும்.

    தேர்வு அன்று தேர்வர்கள் காலை 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேற்படி இந்த கணினி வழி தேர்வுக்கான பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    நுழைவு சீட்டில் மாவட்டம், நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவு சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு மையம் மாற்றம் குறித்த எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.


    பள்ளி செல்லாத குழந்தைகளில் பழங்குடியினர் குழந்தைகளை இனம் கண்டு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுவதற்காக இந்த கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் ஆர்த்தி மாணவர்களிடம் நேரடியாக உரையாடி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி அவர்களின் குறைகளை கேட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனக் கூறினார்.

    மேலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். இம்மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து வழங்கப்படும் என்றார்.

    மாணவர்களை தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் அவர்களின் அருகில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தும்படி கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அரசின் திட்டங்களை விளக்கி கூறினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கேட்டுகொண்டுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா மற்றும் அதை சார்ந்த ஒமைக்ரான் தொற்றை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8,739 பேர் உள்ளனர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 723 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.

    2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில் உள்ளவர்களை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும். 2 தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.

    நம்முடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகபெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

    எனவே இன்று நடைபெற உள்ள முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு பயன் பெறுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சி 30 வார்டுகள்.

    மாங்காடு நகராட்சி 27 வார்டுகள், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 156 வார்டுகளில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால் வேட்புமனு அளிக்கும் இடங்களில் வேட்பாளர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 550 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 436 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.

    நேற்று வரை காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
    ×