என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் நீர்நிலை அருகே உள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ்- வீடுகளை காலி செய்ய மறுத்து 1000 பேர் போராட்டம்
சோழிங்கநல்லூர்:
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீடுகளையும் காலி செய்ய மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பெத்தேல் நகருக்கு வந்தனர். அவர்கள் வீடுகளை காலி செய்யக்கோரி அங்கு குடியிருப்பவர்களுக்கு படிவம்-6 நோட்டீஸ் கொடுக்க முயன்றனர்.
இதனை வாங்க மறுத்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்துறையினர் வெளியே செல்லவேண்டும் என்று கோஷமிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தகவல் அறிந்த கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை காலிசெய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.






