என் மலர்tooltip icon

    ஈரோடு

    நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. மழை ஓய்ந்து படிப்படியாக அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 3100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4273 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. கோபியில் 3 மி.மீ., தாளவாடி-1, சத்தியமங்கலம்-4, கவுந்தப்பாடி- 8.6, மொடக்குறிச்சி-4, சென்னிமலை-7, கொடிவேரி அணை-4, வரட்டுப்பள்ளம் அணை-1.2, மி.மீட்டர் மழை பெய்தது.
    ஈரோடு அருகே குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அகத்தியர் வீதியில் வசித்தவர் பேச்சியம்மாள் என்ற நந்தினி (வயது 22). கணவர் பெயர் விஜயன்.

    இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்தோட்டில் வசித்து வந்த இவர்கள் பிரிந்து விட்டனர்.

    பேச்சியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் ஈரோடு அக்த்தியர் வீதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 2 பேரம் பள்ளி முடிந்து திரும்பினர். அப்போது வீட்டின் உள்பக்க கதவு தாழ் போடப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்த போத உள்ளே மின் விசிறியில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிணமாக தொங்கினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு நாள் சுற்றுப் பயணமாக நாளை ஈரோடு வருகிறார். கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    ஈரோடு:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு நாள் சுற்றுப் பயணமாக நாளை (புதன்கிழமை) ஈரோடு வருகிறார்.

    சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நாளை காலை 6.30 மணிக்கு ஈரோடு வரும் கவர்னர் காளிங்கராயன் இல்ல விருந்தினர் மாளிகை செல்கிறார். முன்னதாக அவரை கலெக்டர் பிரபாகர், எஸ்.பி. சக்தி கணேசன் வரவேற்கிறார்கள்.

    பிறகு அங்கிருந்து காலை 9 மணிக்கு கார் மூலம் கோபி புறப்பட்டு செல்கிறார்.

    கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    பிறகு அங்கிருந்து மீண்டும் ஈரோடு வரும் கவர்னர் பன்வாரிலால் மீண்டும் காளிங்கராயன் இல்ல விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    அங்கு கவர்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் வாங்குகிறார்.

    மாலை 4.30 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையம் வருகிறார். அங்கு துப்புரவு பணியில் கவர்னர் ஈடுபடுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோட்டிலிருந்து கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு செல்கிறார்.

    வழக்கம் போல் கவர்னர் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் பொது இடத்தில் துப்புரவு பணியை செய்யும் நிகழ்ச்சிக்கும் தி.மு.க. உள்பட எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தி வந்தனர்.

    ஆனால் நாளை ஈரோட்டில் கவர்னருக்கு எதிராக தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் தி.மு.க. பொதுக்குழு நடப்பதையொட்டி ஈரோடு மாவட்ட தி.மு.க. பிரமுகர்கள் அணி தலைவர்கள் அனைவரும் சென்னைக்கு சென்று விட்டனர்.

    இதனால் தி.மு.க. தரப்பிலும் எந்த போராட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரை ஈரோட்டில் உள்ள மேட்டூர் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரை ஈரோட்டில் உள்ள மேட்டூர் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் குமார் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி வாழ்த்தி பேசி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மறைந்தது நம்மை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு கழகத்தைக் கட்டிக் காத்து வழிநடத்த 1½ கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த முடிவு மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றிட செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்க தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஒருமனதாக முன்மொழிகிறது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டி மாநகராட்சி ஆணையாளருக்கு கடந்த 10-ம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு சிலை நிறுவுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள மேட்டூர் ரோடு அல்லது சக்தி ரோட்டிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சக மாணவர் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியதன் விளைவாக கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்டனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மலையடிவாரத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வந்த நடுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் குமார் (30). திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இதேபோல் ஏற்பட்ட தகராறில் 2-வது தடவையாக மாணவர் தினேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் மாணவர் தினேஷ் 2 தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்பாலை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதை கண்டித்தும் பிரின்ஸ்பாலை கைதுசெய்ய கோரியும் கல்லூரி முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும் கல்லூரிக்கு போக பஸ்சில் இருந்து இறங்கி 2 கி.மீட்டர் தூரம் நடத்துதான் போக வேண்டும் ஆகவே பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 27-

    கேரளாவில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரசியல் கட்சியினர் தன்னார்வ தொண்டு அமைப்புகள் என பாகுபாடின்றி கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர் காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேரளா மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னிமலை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட பொருளாளர் ரவி மாவட்ட பொதுச் செயலாளர் சீதாபதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் லோகேஸ் வரன், மனித உரிமைகள் துறையின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் ஜனனிசதிஷ், ஆரிப்அலி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். * * * நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்பட பலர் அருகில் உள்ளனர்.

    நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கதிரம்பட்டி மூலக்கரை கிராமம் வாரக்காடு தோட்டம் பகுதியில் பெரும் பள்ளம் ஓடை குறுக்கே ரூ.25 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கும் அளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய தடுப்பணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி சின்னச்சாமி, செயலாளர் எஸ்.கணேசன், பொருளாளர் ஞானவேல், நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், துணைத் தலைவர்கள் யூ.ஆர்.சி.தேவராஜ், சி.டி.குமார், அறங்காவலர்கள் பி.வி.மகேஷ், எஸ்.கே.எம்.சிவக்குமார், ஆர்.ஆர்சத்தியமூர்த்தி, காமதேனு மாட்டுத்தீவன நிறுவன தலைவர் ஆர்.ஜி.சுந்தரம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், காசிபாளையம் கோவிந்தராஜ், சூரம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தடுப்பு அணையின் மேல் பகுதியில் ஏற்கனவே ரூ.10 லட்சம் செலவில் இரண்டு தடுப்பணைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் இதன் கீழ் பகுதியில் 5 தடுப்பணைகள் தூர் வாரப்பட்டுள்ளன.

    விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

    தற்போது எனக்கு கிருஷ்ணகிரியில் பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். நான் வருகிற வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்க உள்ளேன். ஒளிரும் ஈரோடு அமைப்பு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதற்கு நானும் ஒரு படிக்கல்லாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன்.

    அந்தக் குறிப்பை அடுத்ததாக பதவியேற்க உள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளேன். நாளை மறுநாள் (புதன் கிழமை) புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கதிரவனுடன் எனக்கு 15 ஆண்டுகளாக சிறந்த நட்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து எனது ஆலோசனை வழங்க முடியும்.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
    ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கேரளாவுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கேரளா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 966 மதிப்பீட்டிலான உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு லாரியில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் அனுப்பி வைத்தார்.

    ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்- பணியாளர் அலுவலர் மீனா அருள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்- முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர்- மேலாண்மை இயக்குனர் கந்தராஜா மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது

    இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீதும் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீதும் என வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் போக்குவரத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் கடும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன ஈரோடு மாநகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    மகன் திருமண நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டிருந்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. திடீரென மரணம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்தவர் மனோகரன் (வயது 57). பல்லடத்தில் சட்டம்- ஒழுங்கு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து பிறகு அங்கிருந்து ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.

    இவரது சொந்த ஊர் கோவை அருகே உள்ள சூலூர் கலந்தர் ஆகும். மனைவி பெயர் சுதா. இவரது மகனுக்கு கடந்த 25-ந்தேதி திருமணம் நடந்தது. விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தார். இன்று (திங்கட்கிழமை) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அதற்கான வேலைகளில் டி.எஸ்.பி. மனோகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

    இன்று காலை 11.30 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பேரிடியாக விழுந்தது. திருமண வரவேற்பு வீடு துக்க வீடாக மாறியது.

    மாரடைப்பில் இறந்த டி.எஸ்.பி. மனோகரன் உடலுக்கு போலீசாரும் உறவினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற ரமேஷ் (வயது 50).

    இவரது மனைவி பெயர் லலிதா (45). மகன் ஸ்ரீநாத் (20). இவர் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.

    நாராயணசாமி பெயரில் ரூ.2 கோடிக்கு சொத்து உள்ளது. மேலும் மாத வாடகை பணமும் ரூ.30 ஆயிரம் வருகிறது.

    நாராயணசாமியின் மனைவி மற்றும் மகனும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா “உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி கொடுங்கள்” என்று கட்டாயப்படுத்தினாராம்.

    ஆனால் இதற்கு நாராயணசாமி மறுத்து உள்ளார். “உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம்” என்று கூறினாராம்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதமும் தகராறும் ஏற்பட்டது. இந்த நிலையில் நாராயணசாமியை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். சொத்தை எழுதி கேட்டு உள்ளனர்.

    அப்போதும் நாராயணசாமி மறுக்கவே மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.

    நேற்று இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினர் கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சென்னிமலைக்கு விரைந்தார்.

    வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பிறகு இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் போலீசார் கைது செய்தனர்.

    பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பவானிசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #BhavanisagarDam
    ஈரோடு:

    கடந்த 5 ஆண்டுக்கு பிறகு பவானிசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது.

    தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

    தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அதாவது 3100 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும், குடிநீருக்காக பவானி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இன்று அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து வாய்க்கால்களில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாயிகள், விவசாயப் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தினமும் அணைக்கு கணிசமான அளவில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தும் உள்ளனர். #BhavanisagarDam
    ×