என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே இன்று அதிகாலை லாரியும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
    தாளவாடி:

    மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மாண்டியாவுக்கு ஜிப்சம் ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது.

    லாரியை சாம்ராஜ் நகரை சேர்ந்த மல்லிகார்ஜூனா ஓட்டி சென்றார். அவருடன் கிளீனரான சேத்தன் என்பவரும் இருந்தார்.

    இந்த லாரி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள சீவக்காபாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே ஒரு சரக்கு வேன் வந்தது.

    அந்த வேன் சாம்ராஜ் நகரில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி ஏற்றி வந்தது. வேனை தாளவாடியை சேர்ந்த மஞ்சிநாத் என்பவர் ஓட்டி வந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டோரமாக கவிழ்ந்தது. லாரி டிரைவர் மல்லிகார்ஜூனா, கிளீனர் சேத்தன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

    சரக்கு வேன் பலத்த சேதம் அடைந்தது. வேன் டிரைவர் மஞ்சிநாத் காயம் அடைந்தார். வேனில் இருந்த தக்காளிகள் ரோட்டிலும், ரோட்டின் ஓரமாகவும் சிதறின.

    தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசாரும், அக்கம் பக்கத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர், கிளீனர், வேன் டிரைவர் ஆகியோரை மீட்டனர்.

    காயம் அடைந்திருந்த அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் பதுங்கி இருந்த இரிடியம் புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் பதுங்கி இருப்பதாக ஈரோடு தாலுகா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் முத்தம்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த வீட்டிற்குள் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து 3 பேரையும் தாலுகா போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை சேர்ந்த தவபாண்டியன் (வயது 29), திட்டக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு (28), திருவண்ணாமலையை சேர்ந்த முகமதுசெரீப் (28) என்பது தெரியவந்தது.

    இவர்களில் தவபாண்டியன் வெள்ளோட்டில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது சொந்த மாவட்டம் மதுரை என கூறப்படுகிறது. 3 பேரும் இரிடியம் புரோக்கர்கள் என்பது விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.

    இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தவபாண்டியன், திருநாவுக்கரசு, முகமது செரீப் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு ஈரோடு கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    திருநாவுக்கரசு, முகமது செரீப், தவபாண்டியன் ஆகிய 3 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.

    3 பேரும் இணைந்து தொழிலதிபர்களை சந்தித்து ‘‘எங்களிடம் இரிடியம் உள்ளது. இதை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்‘‘ என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளனர்.

    இவர்களது ஆசை வார்த்தையில் ஏராளமான தொழிலதிபர்கள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கைதான 3 பேருக்கும் பின்னால் ஒரு பெரிய நெட் ஒர்க் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.எனவே அது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார நிலைய துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை தமிழகம் முழுவதும் 2,500 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு வாரவிடுமுறையயோ பண்டிகை கால விடுமுறையோ வழங்கப்படுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் பணியாற்றிவரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது இதுகுறித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    இவர் அவர் கூறினார். #tamilnews
    மொடக்குறிச்சி அருகே எதிரே வந்த கார் மீது ஈரோடு பஸ் மோதி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோட்டில் இருந்து வெள்ள கோவிலுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர், மேட்டுபாளையத்தில் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே எல்லக் கடையில் இருந்து ஒரு கார் வந்தது. பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியது. பெரும் விபத்தை தவிர்க்க பஸ் டிரைவர் பஸ்சை ஒடித்து ஓட்டிய போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரத்தில் இறங்கி அதில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, பஸ் கவிழவில்லை.

    இதனால் பஸ் பயனிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் முன்பகுதியில் இருந்த 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொருங்கியது. பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் மிலாடி நபி விழாவையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 141 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    மிலாடி நபி விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில உள்ள டாஸ்மாக் கடைகள், பார் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

    இதன்பேரில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. டாஸ்மாக்கடை விடுமுறையை பயன்படுத்தி அதிக லாபத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இதன்பேரில் மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 141 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 19 அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #SathyamangalamAccident
    சத்தியமங்கலம்:

    திருவண்ணாமலை தேவிகாபுரத்தை சேர்ந்த 21 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சுற்றுலா வேனில் புறப்பட்டனர்.

    அவர்கள் அங்கு செல்லும் வழியில் பல கோவில்களுக்கு சென்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலுக்கும் வந்தனர்.

    அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டுவிட்டு இன்று காலை அங்கிருந்து சபரிமலைக்கு புறப்பட்டனர்.

    சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் அருகே அவர்கள் வந்த வேன் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு மழை பெய்தது.

    மழைக்கு நடுவே வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் வேன் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் வேனில் இருந்த சிவக்குமார் (வயது 37),சீனிவாசன் (38), ஆர்த்தி (10), பாபு, தர்ஷினி, முனியப்பன் (39), மணி (44), ஆகாஷ் (12), ஏழுமலை (32), கேசவன் (28), வெங்கடேஷ் (43) உள்பட 19 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக 5 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #SathyamangalamAccident
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வானில் இருந்து பூமியே நோக்கி வந்த நெருப்பு பந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய-விடிய சாரல் மழை பெய்தது.

    சத்தியமங்கலத்தில் நேற்று இரவு முதல் விடிய பரவலாக பெய்த மழை இன்று காலை 9 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    சத்தியமங்கலம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது வீட்டு மாடியில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். மழையும் தூறிக் கொண்டிருந்தது.

    திடீரென வானை பார்த்த அவருக்கு ஆச்சரியம் அளித்தது. வானின் உச்சியில் இருந்து தரையை நோக்கி சிறிய பந்து வடிவில் நெருப்பு பந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

    உடனே அந்த நெருப்பு பந்தை தனது செல்போனில் படம் எடுத்தார். இவரைப்போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இந்த நெருப்பு பந்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அது எங்கே நமது பகுதியில் விழுந்து விடுமோ.. எனவும் பயந்தனர்.

    ஆனால் அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியான திம்பம் மலை காட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் கேட்டபோது, “நெருப்பு பந்து பூமியை நோக்கி விழுந்ததாக சத்தியமங்கலம் பகுதியில் பலர் பார்த்து உள்ளனர். அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விழுந்ததாகவும் கூறினர். அப்படி வனப்பகுதியில் விழுந்திருக்கலாம். இதனால் வனப்பகுதியில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. மழை வேறு பெய்து வருகிறது. பூமியில் விழுந்து அணைந்திருக்கலாம்” என்று கூறினர்.

    இந்த நெருப்பு பந்து சம்பவம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டலில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    திண்டல்:

    ஈரோடு மேல்திண்டலை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50). தறிப்பட்டறை தொழிலாளி.

    இவரது மனைவி ஈஸ்வரி (45). 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு மகள் திண்டலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    ஈஸ்வரி அந்த பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று இரவு மாதேஸ்வரன் வேலைக்கு சென்றுவிட்டார்.

    வீட்டில் ஈஸ்வரியும், இளைய மகளும் இருந்தனர். அவர்கள் இரவு தூங்க சென்றனர். தினமும் அதிகாலை 5 மணிக்கே ஈஸ்வரி எழுந்து வேலைக்கு சென்று விடுவார்.

    ஆனால் இன்று காலை 7 மணி வரையும் வீடு திறக்கப்படவில்லை. ஈஸ்வரியின் நடமாட்டமும் இல்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    வீட்டின் கதவை தட்டினர். அப்போதுதான் இளைய மகள் எழுந்துள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது ஈஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்தார்.

    அந்த நிலையில் தாயை கண்ட மகள் அதிர்ச்சி அடைந்தார். அவர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.

    ஈஸ்வரியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து வடிந்த ரத்தம் உறைந்து காணப்பட்டது. ஈஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    ஈஸ்வரியும், அவரது இளைய மகள் மட்டுமே நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். எனவே ஈஸ்வரி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

    ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    தற்கொலைக்கு முயன்ற ஈஸ்வரி அந்த பகுதியில் அனைவரிடமும் நன்கு சகஜமாக பேசி பழகக்கூடியவராம். அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    லக்காபுரத்தில் செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் சங்கர்(வயது 32). அரச்சலூர் அடுத்த பூ மாண்டன் வலசு 60 வேலாம்பாளையத்தை சேர்ந்தவர்.

    இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து உள்ளனர்.

    பிறகு கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த துணிகர சம்பவம் லக்காபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரனை நடத்தி, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் வசிப்பவர் ஜீவராஜ், இவரது மகள் தமிழ் செல்வி(வயது 18).

    தமிழ்செல்வி ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி மாணவி தமிழ் செல்வி கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிகொண்டு, வெளியே சென்றார், ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், மாணவியை காணவில்லை.

    இது தொடர்பாக மாணவின் தந்தை ஜீவராஜ் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இது குறித்து விசாரனை நடத்தி மாணவியை தேடி வருகிறார்.

    மாயமான மாணவி அவராக எங்கும் சென்று விட்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    புயல் எச்சரிக்கை ஏற்பாட்டை அனைத்து தலைவர்களும் பாராட்டியதால் அரசு மெத்தனமாக இருந்து விட்டது என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் வருவதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறப்பாக இயங்கிய தமிழக அரசு, புயலுக்கு பின் நடக்கின்ற நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு எந்திரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் இப்போதைய அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதை எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சிகளும் பாராட்ட தான் செய்தார்கள்.

    தமிழக அரசிடமிருந்து எவ்வளவு முதற்கட்ட உடனடி இழப்பீடு வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்காததே அரசு செயல்பாடுகளின் சுணக்கத்தை எடுத்துரைக்கிறது. பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்க வேண்டும்.

    இதுவரை மத்திய அரசின் சார்பில் சேதங்களை மதிப்பிட பார்வையாளர்கள் குழுவை நியமித்ததாக கூட அறிவிப்பு இல்லை. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. தமிழக அரசின் சார்பில் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.


    தேவையான நிதியை உடனடியாக ஒதுக்காமல் அமைச்சர்களும், முதலமைச்சரும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வெறுப்பையும், கோபத்தையும் தமிழக அரசு சம்பாதித்து கொண்டிருக்கிறது.

    உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை என்றால் வி‌ஷக் காயச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகம், கஜா புயலால் அழிவை சந்தித்திருக்கின்ற பகுதிகள் எதிர்பாராத அளவிற்கு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

    தென்னை, மக்கா சோளம், கண்வலி விதை போன்ற அனைத்து விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரைமட்டமாயிருக்கிறது. அதை பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த இழப்பீடு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் விவசாயிகளின் வேதனையின் அளவு அதிகரித்திருக்கிறது.

    அனைத்து கட்சி தலைவர்களும் முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ... என்ற சந்தேகம் எழுகிறது. விழித்தெழுங்கள் கடமையை செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    வெள்ளித்திருப்பூர் அருகே சுற்றுலா சென்றவர்களின் கார் டயர் திடீரென வெடித்ததில் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    பெங்களூருவை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவரும் இவரது நண்பர்கள் 4 பேரும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல விரும்பினர்.

    இதற்காக பெங்களூருவில் இருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர். வினோத் காரை ஒட்டினர்.

    நேற்று மாலை அவர்கள் வந்த கார் வெள்ளித்திருப் பூரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கெம்மியம்பட்டி அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் ஓடியது. சிறிது நேரத்தில் கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணித்த வினோத் உள்பட 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×