என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு செங்கோடம்பள்ளம் யாழ்நகரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பெண்கள் கோலமிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
    ஈரோடு:

    குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

    சென்னையில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நூதன முறையில் வீடுகள் முன்பு கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கோலம் போட்ட 6 மாணவிகளை போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

    மாணவிகள் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஈரோடு, செங்கோடம்பள்ளம், யாழ் நகர் பகுதியில் உள்ள 4 வீடுகள் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு “ வேண்டாம் குடியுரிமை சட்ட திருத்தம்” “நோ சி.ஏ.ஏ நோ என்.ஆர்.சி” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவித்த தி.மு.க இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார் என்ற பெண் கூறும்போது, “குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாங்கள் கோலம் போட்டு வாசகங்கள் எழுதி உள்ளோம். சென்னையில் இது போன்று கோலம் போட்ட பெண்கள் 6 பேரை கைது செய்துள்ள நடவடிக்கைக்கு நான் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். கருத்துக் கூறுவது எங்களது உரிமை. எங்கள் உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது” என்றார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் ராஜாஜி புரத்தல் உள்ள வீடுகளின் முன்பும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து பெண்கள் கோலம் வரைந்தனர்.
    ஈரோடு புறநகர் மாவட்ட பா.ம.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் வட்டம் குருவரெட்டியூர் பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சி கொள்கைகளுக்கு முரண்பாடாக கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

    இதனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஒப்புதலுடன் கிருஷ்ணமூர்த்தியை இன்று முதல் பா.ம.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

    எனவே பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான தொடர்புகள் வைத்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குடும்ப தகராறு காரணமாக நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பழனி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஒடுவான்குறிச்சி ஆகும்.

    பொன்னுசாமியின் மகள் ஜோதிமணி (வயது35). இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும் 1 மகனும் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஜோதிமணி நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவர்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் ஜோதிமணி கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர் மாதேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த நர்சு ஜோதிமணி தனது சேலையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்த ஜோதிமணி உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முயன்றபோது அவர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

    மேலும் ஜோதிமணி சாவில் மர்மம் உள்ளது. இது பற்றி விசாரித்து அவரது கணவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கூறி ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சாலைமறியல் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தனர். ஆனால் உறவினர்கள் ஜோதிமணியின் கணவரை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று கூறினர்.

    இதையொட்டி ஜோதிமணியின் கணவர் மாதேஸ்வரனை மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம் அருகே புங்கார் பஞ்சாயத்து பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. 2-ம் கட்ட தேர்தலையொட்டி வாக்குசாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம் யூனியன் சுஜ்ஜில்குட்டை ஊராட்சி புங்கார் பஞ்சாயத்தில் 1-வது வார்டில் புங்கார் பகுதியில் 228 ஓட்டுகளும் பக்கத்தில் உள்ள நம்பிபுரத்தில் 17 ஓட்டுகளும் உள்ளன.

    இதில் புங்கார் பஞ்சாயத்து பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். தங்கள் பகுதி மக்களுக்கு பட்டா கேட்டு பலமுறை முறையிட்டு உள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி இன்று நடந்த தேர்தலில் யாரும் ஓட்டு போடவில்லை.

    அதே சமயம் பக்கத்து ஊர் பகுதியான நம்பிபுரத்தில் உள்ள 17 ஓட்டுகளில் 7 ஓட்டுகள் மட்டும் போடப்பட்டன. இந்த 7 ஓட்டு போட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    ஈரோட்டில் தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவகி (வயது 35). இவர்களது மகன் ரோகன்.

    ரோகன் வீட்டு அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபி நந்தன் என்ற சிறுவனுடன் ரோகன் விளையாடினார். இவர்கள் விளையாடி கொண்டிந்த போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.

    இது குறித்து ரோகனின் அம்மா தேவகி அபிநந்தனின் சித்தப்பா செந்தில்குமார் (35). என்பவரிடம் முறையிட்டார். அப்போது தேவகி மற்றும் செந்தில்குமாருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் செந்தில்குமார் தேவகியை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தேவகியை வெட்டினார்.

    இதில் தேவகி உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த தேவகியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தேவகியை தாக்கிய செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    காவலன் செயலி மூலம் பெண்கள் அச்சமின்றி தனியாக சென்று வரலாம் என்று கல்லூரி விழாவில் போலீசார் விளக்கி கூறினர்.

    சித்தோடு:

    சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் காவலன் செயலி குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    கல்லூரி தாளாளர் டி.ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் டி.பாலகுமார் முன்னிலை வகித்தார். சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு காவலன் செயலி குறித்து விளக்கி கூறினர். முன்னதாக பேராசிரியை அனிதா வரவேற்றார்.

    காவலன் செயலியை தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பெண்களின் அவசர காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் போலீசார் மற்றும் உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ள உதவும்.

    செயலியால் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பாக இருக்க முடியும். பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் தனியாக அச்சமின்றி சென்று வர முடியும். இந்த செயலியை அவசர கால உதவிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.

    முடிவில் கல்லூரி முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார். துணை முதல்வர் செந்தில்குமார், பேராசிரியை பியூலா, சுவர்ணபிரியா மற்றும் பேராசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
    ஈரோடு:

    தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என பிளாஸ்டிக் விற்பனை கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜித் வீதி, சுல்தான் பேட்டை, மணிக்கண்டு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது.

    இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தர விட்டார் அதன்படி மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி தலைமையில் அதிகாரிகள் கடைவீதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தன. மேலும் 5 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த தொடர்பாக ஒரு கடைக்கு 25 ஆயிரம் வீதம் ரூ 1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கோபி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது 75). ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

    இவர் இன்று காலையில் பால் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றார். வேலுமணி நகர் பிரிவு ஈரோடு - சத்தி ரோட்டை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஏசுராஜன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு பகுதியில் 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு 110-22 கிவோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ. டவுன் மின் பாதையில் உயர் அழுத்த மின் புதை வடம் கம்பிகளை மின் கம்பங்கள் மேல் பொருத்தும் பணி நடக்கிறது.

    இதையொட்டி வரும் 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு நேதாஜி ரோடு, ஆர்.கே.வி. ரோடு, ராமசாமி வீதி, வெங்கடாச்சலம் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு, சொக்க நாத வீதி, ஜின்னா வீதி, அக்ராகாரம் வீதி.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணை மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையில் இருந்து 13.8.2019 முதல் 27.12.2019 வரை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் மொத்தம் 9,605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களின் பாசன பகுதிகளுக்கு 2019-2020-ம் ஆண்டின் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் காலத்தை நீட்டிப்பு செய்ய கோரிக்கை விடப்பட்டது.

    இதையடுத்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களின் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் காலம் இன்று முதல் 15.1.2019 வரை 19 நாட்களுக்கு நீடித்து வினாடிக்கு 600 கன அடி வீதம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் பவானி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சார்ந்த மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதிகள் 17,230 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரத்தில் புதுமண தம்பதிகள் மணகோலத்தில் வந்து வாக்களித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மாலை வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் அதாவது 4.45 மணிக்கு மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வலவு பகுதியை சேர்ந்த ரினோடிக்லுஸ் (வயது 28) அவரது மனைவி நிகிதா (23) ஆகியோர் மாலையும் கழுத்துமாக வேகமாக வந்தனர். பின்னர் மணமகன் ரினோடிக்லுஸ் வாக்கு பதிவு மையத்திற்கு சென்று வாக்கு பதிவினை பதிவு செய்தார்.

    பின்னர் ரினோடிக்லுஸ் இதுகுறித்து கூறும்போது,

    நான் பெருந்துறையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி நிகிதா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எங்கள் திருமணம் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ஒரு ஆலயத்தில் இன்று நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி  முடிந்ததும் உடனடியாக வாக்கு பதிவு செய்ய முடிவு செய்தேன். இதையடுத்து எனது மனைவியுடன் இங்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓட்டு என்பது எனது ஜனநாயக உரிமை. இதை எப்போதும் நான் விட்டுக் கொடுத்ததில்லை என்றார்.

    புதுமண தம்பதிகள் மாலை கழுத்துடன் வந்து ஓட்டு போட்டது அப்பகுதியில் நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
    படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி.பி.எம்.நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 92). இவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். எனினும் அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து அவருடைய பேரன் கார்த்திக் என்பவர் முத்துசாமியை தூக்கி படுக்கையில் (ஸ்ட்ரெச்சர்) வைத்து பச்சைமலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மாலை 4.30 மணி அளவில் அழைத்து வந்தார்.

    அங்கு அவர் படுக்கையில் படுத்தபடி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.
    ×