என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் குடிநீர் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியின் 2-ம் மண்டல அலுவலகம் பெரியசேமூரில் செயல்பட்டு வருகிறது. ஈரோடு ஈ.பி.பி.நகரை சேர்ந்த, பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்யும் முரளி (வயது 38) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

    அவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநகராட்சி வரி வசூல் செய்யும் அலுவலராக பணியாற்றி வந்த ராசாம்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரை (43), முரளியிடம் குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முரளி இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முரளியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பினர். பின்னர், முரளி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் அலுவலகத்தில் இருந்த செல்லத்துரையிடம் பணத்தை கொடுத்துள்ளார்.

    இதனை வாங்கி செல்லத்துரை பாக்கெட்டில் வைக்கும்போது, அங்கே சாதாரண உடையில் மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து செல்லத்துரையை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதில் உயர் அதிகாரிகளுக்கும், கீழ் நிலை பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    ஈரோட்டில் நாளை நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஜவுளி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இதனால் இதை நம்பி உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் சரவணன் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாகவே பஞ்சு விலை அதிகபட்சமாக 10 சதவீதம் கூட உயரவில்லை. ஆனால் நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

    அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தி விற்கமுடியவில்லை. 40-ம் நம்பர் வார்ப் நூல் ஒரு கோன் கடந்த மாதம் ரூ.195 ஆக இருந்தது தற்போது ரூ.235 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    குறிப்பிட்ட ரக நூல் அதிகமாக உற்பத்தி செய்வதுடன் அவற்றை அதிகமாக ஏற்றுமதியும் செய்கின்றனர். பிற ரக நூலை தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்து செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நூல் விலை உயர்த்தப்பட வேண்டும்.

    இதை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை ஒருநாள் ஈரோடு மாவட்டம் ஜவுளி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன் போன்றவை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில் 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளையும், நாளை மறுநாளும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். விவசாயிகள், தொழில் முனைவோர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
    ஈரோடு:

    தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தங்களது பிரசாரத்தை தொடங்கி விட்டன. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கினார்.

    தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் அவர் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் இடையே கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, விவசாயிகளுடன் கலந்துரையாடல் என்று தன்னுடைய பிரசார வியூகத்தை முன்னெடுத்து வருகிறார்.

    இதற்கிடையே, நாளை (புதன்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். காலை 9 மணிக்கு பவானியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 10 மணிக்கு சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடும் எடப்பாடி பழனிசாமி, காலை 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம், பகல் 12 மணிக்கு வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    அத்தானி, கள்ளிப்பட்டி, நால்ரோடு, சத்தியமங்கலம், நல்லூர், பு.புளியம்பட்டி, காந்திநகர், நம்பியூர் ஆகிய இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம், தொடர்ந்து தொழில் முனைவோர், வக்கீல்கள், டாக்டர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    மாலை 4 மணிக்கு ஓடாநிலையில் பொதுக்கூட்டம், அரச்சலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல், பெருந்துறையில் கைத்தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
    தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று முதல், இந்த வாரம் இறுதி வரை கருத்துக்கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கருத்துகளை அறிந்தபின்பு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் எப்போது அறிவித்தாலும், பள்ளிகளைத் திறக்கத் தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக, பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக் கேட்பு இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நடைபெறும்.

    பள்ளி தொடங்குவதற்கு முன்பே சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. சுகாதாரத்துறை அறிவுரைக்கு ஏற்ப மாணவர்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் வகுப்பறைகள் சரி செய்து வைக்கப்பட்டுள்ளது.

    "பள்ளிகள் திறந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

    அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் வருகின்றபோதுதான் கழிப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும். தற்போது குறைந்த அளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதல்வர் முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறார்.

    பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 318 பேர் குரூப்-1 தேர்வை எழுதினார்கள்.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப்-1-ல் அடங்கிய துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    இந்த தேர்வுக்காக ஈரோடு நகரில் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் வேறு எங்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இந்த தேர்வில் 19 கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 8 ஆயிரத்து 13 பேருக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 695 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது, கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வு மையத்தின் முன்புறத்தில் வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

    ஈரோடு செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ‘தேர்வு எழுத வந்த அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தேர்வர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது’ என்றார்.
    ஈரோட்டில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் மாரி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். அவற்றை அறுவடை செய்து தோட்டத்தில் கொட்டி குவித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு காவலுக்காக தோட்டம் அருகே இருந்த குடிசையில் அவர் படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை மாரி படுத்திருந்த குடிசையை காலால் எட்டி உதைத்து துவம்சம் செய்தது. அப்போது உள்ளே படுத்திருந்த மாரி எழுந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை துதிக்கையால் அவரை பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதனால் அலறி துடித்த மாரி உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.

    சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்டத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயிகள் அங்கு ஓடிவந்தார்கள். அதற்குள் அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து விவசாயிகள் கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் கடம்பூர் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று மாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை ஆனது.
    பெருந்துறை:

    பெருந்துறை வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு கோபி, கள்ளிப்பட்டி, கொளப்பலூர், அத்தாணி, பங்களாப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஒரு லட்சம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரம் தேங்காய் ஒன்று ரூ.18 முதல் ரூ.20 வரையும், 2-ம் தரம் தேங்காய் ஒன்று ரூ.16 முதல் ரூ.18 வரையும், 3-ம் தரம் தேங்காய் ஒன்று ரூ.14 முதல் ரூ.16 வரையும் விற்பனை ஆனது.

    தேங்காய்கள் மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தேங்காய்களை சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர் மற்றும் ஊத்துக்குளி, சென்னிமலை, காங்கேயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளது பெரியபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (வயது 50), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சோளப்பயிர் பயிரிட்டுள்ளார்.

    கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் சோளப்பயிர் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து மாரி இரவு நேரத்தில் தோட்டத்தில் வனவிலங்குகளை விரட்ட தங்கி வந்தார்.

    நேற்று இரவும் வழக்கம் போல் வனவிலங்குகளை விரட்ட மாரி தனது தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள குடிசையில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் ஒற்றைகாட்டுயானை திடீரென சோளக்காட்டில் புகுந்தது. பின்னர் சத்தம் இல்லாமல் சென்ற யானை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைப்பகுதிக்கு போய் நின்றது.

    இதை பார்த்த விவசாயி மாரி அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் யானை அவரை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இது பற்றி இன்று காலை தெரிய வந்ததும், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை தாக்கி பலியான மாரிக்கு ரத்னாபாய் என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும், சுசீலா என்ற மகளும் உள்ளனர்.
    சீனாபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 50-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விற்பனைக்காக வந்திருந்தன.

    நேற்றைய சந்தையில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

    சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மாடுகள் மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை, வெள்ளோடு, காஞ்சிக்கோவில், திங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.

    மேலும் நம்பியூர் ஒன்றியம், தாழ்குனி ஊராட்சியை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு, அரசின் விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை வாங்குவதற்காக ஈரோடு கால்நடை துறை டாக்டர்கள் நேற்று சீனாபுரம் மாட்டுச்சந்தைக்கு வந்திருந்தனர்.

    அங்கு, பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்குவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அவர்கள் விலைபேசி பிடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மொடக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே உள்ள பூனாச்சி புதுவலவு காலனியை சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் அரவிந்த் (வயது 16). 8-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் மேற்கொண்டு படிக்கவில்லை. இதனால் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் நண்பர்களுடன் எழுமாத்தூர் பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு அவர் குளிக்க சென்று உள்ளாார்.

    குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு அரவிந்த் சென்றுவிட்டார். இதில் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி இறந்த அரவிந்தனின் உடலை மீட்டனர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி பேரூராட்சி ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூரை அடுத்த காளியூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 44). இவர்,கே.என்.பாளையம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்தார்.

    காளியூர் பகுதியில் நேற்று காலை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மின்மாற்றியில் பியூஸ் போடுவதற்காக நாகராஜ் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த நாகராஜுக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
    சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் ஒரு தனியார் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்பவர் உறவினர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    பிகாஸ்திகா மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் செல்போனில் ப்ரீபையர் கேம் விளையாடினார்.

    அப்போது வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காததால் பிகாஸ்திகா வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.

    இரவு 7 மணியளவில் மீண்டும் கீழே இறங்கினார். அப்போது தவறி விழுந்த போது ஆஸ்பெட்டாஸ் கூரை வலுவிழந்து உடைந்தது. இதில் பிகாஸ்திகாவுக்கு தலை, கை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×