என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். மேலும் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் அந்தியூர் எண்ணமங்கலத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 1-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந்தேதி மூதாட்டி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 519 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 261 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்று கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை. அதே நேரம் ஈரோடு மாவட்ட எல்லைகளான தாளவாடி, பர்கூர், கடம்பூர், பவானி, கொடுமுடி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் முட்டை பண்ணை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு பண்ணைகளை முழுமையாக சுகாதாரமாக பேணவும், தடுப்பூசிகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. 

    இதுபோல் மாவட்ட நிர்வாகத்துடன், சுகாதார பணிகள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
    பெருந்துறையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 985 பேருக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
    சென்னிமலை:

    பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் 473 மாணவர்கள் மற்றும் 512 மாணவிகள் என மொத்தம் 985 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ரூ.38.90 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரா.முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 985 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிச்சந்திரன், அவைத்தலைவர் சந்திரசேகரன், சி.எம்.எஸ் துணை தலைவர் ஜெகதீஸ், மாவட்ட கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றிய குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈ.எம்.ஆர்.மூர்த்தி, அருள்ஜோதி செல்வராஜ், துளசிமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ், பழனிச்சாமி, அப்புசாமி, முன்னாள் தலைவர் பெரியசாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் விழாவில் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற https://tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

    எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 31-12-2020 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் நேரடியாக படித்துக்கொண்டிருக்க கூடாது. விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்கக்கூடாது.

    விண்ணப்பதாரர் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகைபெற தகுதி அற்றவர்கள் ஆவர். விண்ணப்ப படிவங்களை https://tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப்புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் அளிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 95.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,925 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் கோவை, மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,925 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 500 கன அடி என மொத்தம் 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணை 36.60 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 12.64 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை 30.28 அடியாகவும் உள்ளது.

    இதில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நேற்று முதல் பாசனத்திற்காக 26 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கெட்டிசமுத்திரம் ஏரி, நம்பியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு 19-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 1039 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக பெரும்பள்ளம், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பவானிசாகர், பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக பெரும்பள்ளம் அணையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டேரிபள்ளம்-30, வரட்டுப்பள்ளம்-20.4, பவானிசாகர்-8, நம்பியூர்-6, கொடிவேரி-3, சத்தியமங்கலம்-2. மி.மீ. மழை பெய்துள்ளது.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடக எல்லையான மூடலி பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் பெரும்பாநல்லூர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது72), இவரது மனைவி அமராவதி(64), இவர்களது மகள் கோகிலா(45). இவர்களது உறவினர்கள் சந்திரன், சாந்தாமணி, சுகுணா, சுபிக்‌ஷா, செண்பகம், மோகன், ஜெயபாரதி, யசோதா, செந்தில்குமார், சந்தோஷ், ஜெயலட்சுமி, துளசி ஆகிய 15 பேரும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    வேனை கணக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார்.

    வேன் இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடக எல்லையான மூடலி பகுதியில் வந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலையோரம் உள்ள 15 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது விபத்து ஏற்பட்டதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து அலறினர்.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து சாம்ராஜ் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுப்பிரமணியம், அவரது மனைவி அமராவதி, இவர்களது மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    படுகாயம் அடைந்த அருண், சந்திரன், சாந்தாமணி, சுகுணா, சுபிக்‌ஷா, செண்பகம், மோகன், ஜெயபாரதி, யசோதா, செந்தில்குமார், சந்தோஷ், ஜெயலட்சுமி, துளசி ஆகிய 13 பேர் சாம்ராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.
    ஈரோடு:

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் மிக விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக கோவிஷூல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதைப்போல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்த கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    தமிழகத்தில் முதல் கட்டமாக கோவிஷூல்டு தடுப்பூசி டாக்டர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் என 6 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்தது. ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள சுகாதார மையம் என 5 இடங்களில் நாளை (அதாவது இன்று) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஒத்திகையின் போது பயனாளிகளை அடையாளம் காணுதல், அவர்கள் பற்றிய தரவுகளை கோ-வின் தளத்தில் பதிவு செய்தல், அடையாளம் காணப்பட்டவர்கள் ஒத்திகை நடைபெற்ற இடத்துக்கு வரவழைக்கப்படுதல் என எல்லா பணிகளும் நேர்த்தியாக நடத்தப்பட உள்ளன.

    தடுப்பூசி போடும் பணியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும், பிற அம்சங்களும் கூட அடையாளம் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 908 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 33 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 13 ஆயிரத்து 483 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். 280 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 145 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
    பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகும், அம்மா குறிப்பிட்டதுபோல எனக்கு பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடிவாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள்.

    வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

    நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 1 மருத்துவர், 1 செவிலியர், உதவியாளர் இருப்பார்கள். ஏழை எளியோர்களுக்கு தேவையான சிகிச்சை இங்கு அளிக்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்படுவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாடை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம்.

    2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்களுக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். இதற்காகதான் இந்த அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடை சட்டமாக இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    மேலும் 11 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாக 130 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்று கொள்ளும். இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி உள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. 1850 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரூ.62 கோடியில் தரம் உயர்த்தி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது. தற்போது 2-வது கட்டமாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாநகர் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.52 கோடி மதிப்பில் ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

    ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டமான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 98 சதவீதம் நடைபெற்று முடிந்து விட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நானே இங்கு வந்து நேரடியாக குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பேன்.

    இந்த திட்டம் மூலம் 90 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கிடைக்கும். இவ்வாறாக பல திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால் அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்ட ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

    கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மா அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது.

    ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1 கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.

    இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் 1 விருது கூட பெற முடியவில்லை.

    சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது.

    நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

    தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது.

    மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும்.

    இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்று தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அங்கு இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

    மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சியை அடுத்த வெண்டிபாளையம் பகுதியில் பெண் பிணம் மிதப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், ‘நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தொண்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல். இவருடைய தாய் மணி (வயது 58). கடந்த 2-ந் தேதி மணிக்கும், செங்கோட்டு வேலுவின் மனைவிக்கும் தண்ணீர் பிடிப்பதில் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் மணி ஆத்திரம் அடைந்து மருமகளிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    நீண்ட நேரமாகியும் மணி வீடு திரும்பாததால், அவரை பல இடங்களிலும் செங்கோட்டுவேல் தேடினார். ஆனால் மணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் மணியை கண்டுபிடித்து தருமாறு திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

    இதற்கிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற மணி, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், அவருடைய உடல் வெண்டிபாளையம் ஆற்றின் கரை பகுதியில் ஒதுங்கியதும்,’ தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    ஈரோடு:

    பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    அவர்கள் இதுவரை வாய்தா வாங்கி தப்பித்து வருகின்றனர். இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது இவர்கள் பற்றி தெரியவரும்.

    குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.முக. ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை வரும் தேர்தலிலும் நமது அரசு ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை பவானியில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

    நான் இங்கு தான் படித்தேன். பவானி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம்வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். இந்த பவானி நகரம் முழுவதும் சிறுவயதிலே நன்கு தெரிந்த பகுதி. பவானி தொகுதி முழுவதும் எனக்கு நன்றாக தெரியும்.

    இந்த பகுதியில் தான் எனது ஊர் இருக்கிறது. ஆக பவானி தொகுதியையும் எடப்பாடி தொகுதியையும் இடையில் பிரிப்பது காவிரி ஆறு ஒன்றுதான். எனவே நன்கு அறிமுகமான ஈரோடு பவானி தொகுதியிலேயே முதன் முதலாக பேசுவதில் எல்லா வல்ல இறைவன் எனக்கு கொடுத்த பாக்கியமாக கருதுகிறேன்.

    இவ்வளவு திரளாக எழுச்சி மிகு பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அதும் இந்த பகுதியில் படித்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றுசொன்னால் அது எந்தளவுக்கு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

    ஆகவே இன்றைக்கு முதல்-அமைச்சர் என்பது ஒரு பணி. இங்கு வருகை தந்து அமர்ந்திருக்கிறீர்களே அத்தனை பேரையும் தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக நான் பார்க்கிறேன். எனவே நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுகின்ற பணிதான் எனது பணி. ஆகவே உங்கள் பகுதியில் வாழ்ந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்களுடைய எண்ணங்களை முழுமையாக தெரிந்தவர் இந்த தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு பதவி வகித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

    ஆகவே நமது பகுதியில் என்ன பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நன்கு உணர்ந்திருக்கிறேன். இன்று வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி நம்முடைய பவானி சட்டமன்ற தொகுதி.

    ஆகவே வேளாண் பெருமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும். அது எங்களுடைய அரசு இன்று கவனமாக பார்த்து செயலாற்றி கொண்டிருக்கிறது.

    வேளாண் பெருமக்கள் என்று சொன்னால் அதற்கு நீர் தேவை. தண்ணீர் இருந்தால் தான் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும். வேளாண் பணிகள் இருந்தால் தான் விவசாய தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆக இரண்டையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகதான் எங்களுடைய அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து இன்றைக்கு நமது ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற பெரும்பாலான ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக இன்றைக்கு முழுக்க முழுக்க விவசாய பங்களிப்போடு அந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.

    பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள் எல்லாம் இன்றைக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்த நீர் முழுவதும் சேமித்து வைத்து இன்று குளம் நிரம்பி வழிவதை இன்றைக்கு பார்க்கிறோம்.

    இதனால் கோடை காலத்திலும் தேவையான நீர் கிடைக்கிறது. குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கிறது. ஆகவே வேளாண் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரை பெருக்குவதில் தமிழக அரசு இன்று முன்னுதாரணமாக திகழ்கிறது. அதேபோல் ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுதல், பவானிசாகரிலிருந்து காலிங்கராயன் வரை தடுப்பணை கட்ட நம்முடைய அரசு திட்டமிட்டுள்ளது. பவானிசாகரில் இருந்து உபரியாக வருகின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

    விவசாயிகளுக்கு தேவையான நீர் கொடுப்பது அரசின் நோக்கம். ஆகவே இன்றைக்கு வேளாண் பணி சிறக்க வேண்டும் என்றால் உணவு என்பது முக்கியம். அதேபோல் குடிநீர் என்பது முக்கியம். இரண்டும் ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியம். ஆகவே இந்த அரசு முதல் முன்னுரிமை கொடுத்து இன்று செயலாற்றி கொண்டிருக்கிறோம்.

    நீர் மேலாண்மை என்பது மிக மிக முக்கியம் அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அதேபோல நமது பவானி சட்டமன்ற தொகுதியின் பெரும்பாலான பணிகள் மேட்டூர் கிழக்கு கரை பாசன கால்வாய் மூலமாக பாசனம் பெறுகிறது.

    மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் சீரமைக்க எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பவானிசாகர் கால்வாயில் 940 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஸ்டாலின் மக்களை கூட்டி மக்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே இதைப்போன்று மக்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாயிற்று. மக்களை இதுபோன்று தொடர்ந்து அவர் ஏமாற்றி வருகிறார். தற்போது பெண்களை கூட்டி வாத்தியார் போன்று கூட்டம் நடத்தி வருகிறார். இதில் ஏதாவது பயனுள்ளது பேசி வருகிறாரா? இல்லை. அரசை பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் குறை கூறி வருகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து ஊழல் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டியது எங்களது பொறுப்பு. அவர் சொன்னது போன்ற டெண்டரே நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடைபெறும். எனவே அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

    1.86 லட்சம் கோடி மதிப்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். அப்போதைய அமைச்சராக இருந்த ராசா இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறி உள்ளது.

    கருணாநிதி சென்னைக்கு வரும்போது எவ்வளவு சொத்துடன் வந்தார். இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். கலைஞர் குடும்பத்தினருக்கு மட்டும் 58 சொத்துக்கள் உள்ளது. இது எப்படி வந்தது என்று மக்கள் நீங்களே சிந்தித்து பாருங்கள்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ன நினைத்தார்களோ அதை எனது தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை திறந்து வரலாறு படைத்துள்ளோம்.

    நமது ஈரோடு மாவட்டத்தில் 52 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது. இதில் 1 எம்.பி.பி.எஸ் டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளனர்.

    இதனால் கிராம மக்கள் எளிதாக சிகிச்சை பெற முடிகிறது. இந்த திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார்.

    அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 313 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    மேலும் 92 மாணவர்கள் பல் மருத்துவமனையில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நான் அரசு பள்ளியில் படித்ததால் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×