search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி
    X
    வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி

    தமிழக-கர்நாடக எல்லையில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடக எல்லையான மூடலி பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் பெரும்பாநல்லூர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது72), இவரது மனைவி அமராவதி(64), இவர்களது மகள் கோகிலா(45). இவர்களது உறவினர்கள் சந்திரன், சாந்தாமணி, சுகுணா, சுபிக்‌ஷா, செண்பகம், மோகன், ஜெயபாரதி, யசோதா, செந்தில்குமார், சந்தோஷ், ஜெயலட்சுமி, துளசி ஆகிய 15 பேரும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    வேனை கணக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார்.

    வேன் இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடக எல்லையான மூடலி பகுதியில் வந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலையோரம் உள்ள 15 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது விபத்து ஏற்பட்டதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து அலறினர்.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து சாம்ராஜ் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுப்பிரமணியம், அவரது மனைவி அமராவதி, இவர்களது மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    படுகாயம் அடைந்த அருண், சந்திரன், சாந்தாமணி, சுகுணா, சுபிக்‌ஷா, செண்பகம், மோகன், ஜெயபாரதி, யசோதா, செந்தில்குமார், சந்தோஷ், ஜெயலட்சுமி, துளசி ஆகிய 13 பேர் சாம்ராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×