என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரம்

    ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளையும், நாளை மறுநாளும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். விவசாயிகள், தொழில் முனைவோர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
    ஈரோடு:

    தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தங்களது பிரசாரத்தை தொடங்கி விட்டன. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கினார்.

    தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் அவர் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் இடையே கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, விவசாயிகளுடன் கலந்துரையாடல் என்று தன்னுடைய பிரசார வியூகத்தை முன்னெடுத்து வருகிறார்.

    இதற்கிடையே, நாளை (புதன்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். காலை 9 மணிக்கு பவானியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 10 மணிக்கு சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடும் எடப்பாடி பழனிசாமி, காலை 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம், பகல் 12 மணிக்கு வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    அத்தானி, கள்ளிப்பட்டி, நால்ரோடு, சத்தியமங்கலம், நல்லூர், பு.புளியம்பட்டி, காந்திநகர், நம்பியூர் ஆகிய இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம், தொடர்ந்து தொழில் முனைவோர், வக்கீல்கள், டாக்டர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    மாலை 4 மணிக்கு ஓடாநிலையில் பொதுக்கூட்டம், அரச்சலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல், பெருந்துறையில் கைத்தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
    Next Story
    ×