என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னிமலை:

    கீழ்பவானி பிரதான கால்வாய், காலிங்கராயன் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய்களை நவீனப்படுத்தும் வகையில் நபார்டு வங்கி மூலம் ரூ.933 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் மட்டும் ரூ.740 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் கோவை வந்த பிரதமர் மோடி கீழ்பவானி பாசன திட்ட விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் வறட்சியும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி சென்னிமலையில் கடந்த 12-ந் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி நேற்று சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முருங்கத்தொழுவு ஊராட்சி தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களை கையில் ஏந்தி "அமைக்காதே அமைக்காதே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காதே" "வெட்டாதே வெட்டாதே வாய்க்கால் பகுதியில் உள்ள மரங்களை வெட்டாதே" என கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை), திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திட்டம்பாளையத்திலும், 2-ந் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் உள்ள வாய்க்கால் பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடர் போராட்டங்களை நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தில் 200 கி.மீ நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் கடும் எதிர்ப்பால் ஏற்கனவே கடந்த 2013 ம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த திட்டம் தற்போது மீண்டும் செயல்வடிவம் பெற்றுள்ளது.

    இதனை கண்டித்து இன்று முதல் போராட்டங்களை தீவிரபடுத்த விவசாயிகள் திட்டமிட்டு தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இன்று காலை சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, தலவுமலை அருகில்கீழ் பவானி வாய்க்கால் கரையில் ஆண்கள், பெண்கள், என 500- க்கும் மேற்பட்டோர் திரண்டு இந்த திட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போரட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபட்டு, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் பல லட்சம் ஏக்கர் விவசாயமும் பாதிப்படையும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

    மேலும், கான்கிரீட் தளம் அமைப்பதை கைவிட்டு மற்ற பராமரிப்பு பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தினர்.

    விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாகவும், கீழ்பவானி திட்டத்தில் மறைமுக பாசன பகுதிகள் பாலைவனமாவதுடன், கரைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இயற்கைக்கு முரணாகவும், கசிவு நீர் திட்டங்களுக்கு எதிராகவும் உள்ள இந்த பணிகளை அனுமதிக்க மாட்டோம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி முருங்கத்தொழுவு ரவி தெரிவித்தார்.
    தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    ஈரோடு:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

    இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புழுங்கல் அரிசியை தெலுங்கானா மாநிலம் கரிம் நகர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 21 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1,300 டன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட அரிசி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் மொடக்குறிச்சி பஞ்சலிங்கபுரம் அருகே ஆரியன் காட்டுப்புதூர் என்ற இடத்தில் ெரயில்வே நுழைவு பாலம் உள்ளது. அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக்கொண்டு வரும் லாாிகள் நுழைவு பாலத்தில் மாட்டிக்கொள்வதால் பாலத்துக்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி சிமெண்டு் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரி ஆரியன் காட்டுப்புதூர் நுழைவு வாயிலை கடந்தபோது இரும்பு தடுப்பு கம்பிக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் லாாியை மேற்கொண்டு டிரைவரால் இயக்க முடியவில்லை.

    லாரி நடுரோட்டிலேயே நின்றதால் இருபுறமும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். வரிசையில் நின்ற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டார்கள். பின்னர் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைத்து லாரியை வெளியே கொண்டு வந்தார்கள். இந்த பணி முடியும்போது மாலை 6 மணி ஆகிவிட்டது. இதனால் ஈரோடு கரூர் மெயின்ரோட்டில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை யூனியனில் குடுமிடிப்பிடி சண்டை போட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தலைவராக தங்கமணி, (38) என்பவரும், துணை தலைவராக சத்தியபிரியா (32) என்பவரும் இருந்து வருகின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் குடிநீர் வழங்குவதில் சத்திய பிரியா கணவர் சுப்பிரமணி குளறுபடிகள் செய்வதாகவும் அதனால் ஊருக்கு சரியாக குடிநீர் வழங்க முடியவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள், மற்றும் சிலருடன் தலைவர் தங்கமணி நேரில் துணை தலைவர் சத்தியபிரியா வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய் சண்டை ஏற்பட்டு குடுமிபிடி சண்டையாக மாறியது.

    இது குறித்து தலைவர் தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் துணை தலைவர் சத்தியபிரியா மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி ஆகிய இருவர் மீதும் 294 பி, 341, 323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடத்து கொள்ளுதல், காயப்படுத்துதல், கொலை மிரட்டல், ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதே போல் துணை தலைவர் சத்திய பிரியா கொடுத்த புகாரின் பேரில், தலைவர் தங்கமணி, அவரின் கொளுந்தனார் சசிக்குமார், சசிக்குமார் மனைவி பவிதா ஆகிய மூன்று பேர் மீதும் 294,323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குடுமிபிடி சண்டை குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

    மதுரையை சேர்ந்த வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர் தனது தாயுடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காட்டூரில் குடியிருந்து வந்தார். சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் அந்தியூர் அருகே உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பிரபாகரன் பிணமாக கிடந்தார். உடனே இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
    ஈரோடு:

    தாளவாடி, சூசைபுரம், கல்மண்டிபுரம், எரகனள்ளி, தலமலை, திம்பம், ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஒடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.

    இதேபேல் ஈரோடு மாவட்டத்தின் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானிசாகர் -27.8, ஈரோடு -25, பவானி -18, அம்மாபேட்டை -17.2, தாளவாடி -17, கொடுமுடி -15.8, கவுந்தப்பாடி -13.4, மொடக்குறிச்சி -10, எலந்தகுட்டைமேடு -7.2, சத்தியமங்கலம் -7, வரட்டுப்பள்ளம் -5, கோபி -5, சென்னிமலை -3, கொடிவேரி -1. மாவட்டத்தில் மொத்தம் 172.4 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
    ஈரோட்டில் இன்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    ஈரோடு:

    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் பங்களாப்புதூர் அடுத்து புஞ்சை துரையம் பாளையத்தில் உள்ள சத்தியமங்கலம்-அத்தாணி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்தது.

    இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் விழா நடைபெறும் இடம் முழுவதும் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை பெற்று கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது அங்கு இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். பெண்கள் ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். முன்னதாக மு.க.ஸ்டாலின் வந்ததும் ஸ்டாலின் தான் வாராரு என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

    இந்த பிரசார கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்று மேடையில் அமைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டார். மனு கொடுத்த அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.

    பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் இருந்து சில மனுக்களை எடுத்து மனு கொடுத்தவர்களை பேச அழைத்தார். அப்போது அவர்களது கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களின் கோரிக்கை 100 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று பேசினார்.

    பின்னர் மனுக்கள் போடப்பட்ட பெட்டியை பொதுமக்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பூட்டி சீல் வைத்தார்.
    ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் தற்போது ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு வரவில்லை. தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளரி பயிரிடப்பட்டு உள்ளது. இவைகள் இன்னும் விளைச்சலுக்கு வரவில்லை. தற்போது மணப்பாறை பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு கிலோ வெள்ளரி பிஞ்சு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிக்க தொடங்கினால் வெள்ளரி பிஞ்சுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது’ என்றார்.
    மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு விற்பனை முடிந்ததும் டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு உள்ளே இருந்து வரவு, செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 4 பேர் மது குடிக்க வந்தனர்.

    பின்னர் அவர்கள் 4 பேரும் மதுபானம் வேண்டும் என்று ராஜனிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர், ‘கடை நேரம் முடிந்துவிட்டது. எனவே மதுபானம் தர முடியாது,’ என கூறினார்.

    இதனால் 4 பேரும் ஆத்திரம் அடைந்து ராஜனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கண் மற்றும் தலையில் ராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை தாக்கிய 4 பேரையும் வலைவீசி ேதடி வந்தனர்.

    இந்த நிலையில் லக்காபுரத்தில் இருந்து ஆனைக்கல்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் பதுங்கி இருப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர்கள் லக்காபுரம் நொச்சிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான அன்பரசன் (38), அந்த நிறுவனத்தின் ஊழியரான ஈரோடு ரயில்வே காலனி மோளக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் (33), லட்சுமி நகர் ரணியன் வீதியை சேர்ந்த நந்தகுமார் (30), ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமார வீதியை சேர்ந்த தயாளன் (32) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளரான ராஜனை தாக்கியதும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குளித்தலை:

    பணப்பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக்கோரி கட்டளை, தென்கரை பாசன விவசாயிகள் சங்கத்தினர் குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 9-ந் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அதிகாரிகள், தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என்றும், கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஒரு வாரத்திற்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    அதிகாரிகள் கூறியபடி, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை கண்டித்தும் உடனடியாக கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரியும் குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் உள்ளே நேற்று மாலை விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள் வருகிற 23-ந் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என‌ கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
    சத்தியமங்கலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி விற்ற 6 பேரை கைது செய்தனர்.











    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சத்தியில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வடக்கு பேட்டை, சத்யா ரோடு, அத்தாணி ரோடு, திப்புசுல்தான் ரோடு ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்ற கோவையை சேர்ந்த செல்வன் (வயது 45), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த சச்சிதானந்தம் (35), அருண் (36), அஜித் (22), நூர்முகமது (31), சாத்தான்குலத்தை சேர்ந்த கவுதம் (22) ஆகிய 6 பேரை கைது செய்தார்கள். 

    அவர்களிடம் இருந்து லாட்டாரி விற்ற பணம் 25 ஆயிரத்து 400-யும், அவர்கள் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தார்கள்.
    ×