search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை காலம்"

    • ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
    • பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

    வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலாம்பாளையம், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அறுவடைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் லேசாக சாரல் மழை பெய்தது.

    • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சி:

    கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

    அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


    ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

    • திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.
    • சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை தஞ்சையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இதேப்போல் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொள்ளிடம் புத்தூர், தைக்கால், ஆச்சாள்புரம், புதுப்பட்டினம், சந்தபடுகை, திட்டுபடுகை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இதேப்போல் நாகை மாவட்டம் நாகூர், பணக்குடி, மஞ்சக்கொல்லை, புத்தூர், சிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை மழை பெய்து குளிர்வித்தது.

    தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்ததோடு வெப்பம் ஒரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும்கோடை குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் இன்றி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை விதைப்புகள் கருகி வந்ததால் வேதனையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.89 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம் -குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரும்பள்ளம் அணை, குண்டேரி அணை, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 9 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர்.
    • கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    வீட்டிற்குள் இருந்தாலும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. மின்விசிறி ஓடினாலும் அதனையும் தாண்டி வீட்டிற்குள் வெப்பம் நிலவி வந்தது.

    கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்காவது நிழல் கிடைத்தால் சற்று நேரம் அங்கு நின்று இழைப்பாறி சென்று வருகின்றனர்.

    வழக்கமாக கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்து மே முதல் வாரம் ஆகியும் இதுவரை மழையே பெய்யவில்லை.

    கடுமையான வெப்பமே நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர். பல்வேறு இடங்களில் வழிபாடுகள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எனவும் நடத்தப்பட்டது.

    கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் மாநகர பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக சூறைக்காற்று வீசியது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவை மாநகர பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், உக்கடம், காந்தி பார்க் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இரவிலும், இன்று காலையும் குளிர்ச்சியான காற்றும் வீசியது.

    கோவையில் இன்று காலையும் வெயில் குறைந்து மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

    இந்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளதால் மழையை எதிர்பார்த்து கோவை மக்கள் காத்திருக்கின்றனர்.

    • மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம்.
    • மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப்பரப்பு நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாட்டில் வேலூர், சேலம், திருத்தணி, திருவண்ணாமலை , திருச்சி, அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள மலைப் பகுதிகளையும், சமுதாயக் காடுகளையும் பசுமைப் பகுதிகளாக மாற்றி, அவற்றில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.

    அதன் மூலம், மலையோர நகரங்களின் வெப்பத்தை குறைக்க முடியும். சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களில் காடுகளை வளர்க்க முடியாது என்றாலும் கூட, அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படும் போது ஒதுக்கப்படும் திறந்தவெளி பரப்புக்கான நிலங்களில் மியாவாக்கி முறையில் நகர்ப்புற அடர்வனங்களை உருவாக்கலாம்.

    தமிழ்நாட்டில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகளை வீச வேண்டும். மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும்.

    இந்த உன்னத நிலையை அடைவதற்காக அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம்.

    மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம். அதன் மூலம், நடப்பு பத்தாண்டில் இல்லா விட்டாலும், அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமையின்றி இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
    • மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார்.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபல ஆன்-லைன் உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில் தங்களுக்கு வந்த ஆர்டர்கள் குறித்து கூறி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்களும், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80 ஆயிரம் ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார். இது இந்திய அளவில் ஒருவர் இதுவரை மிகவும் அதிகமாக ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.

    • கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில், மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரள மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் நாளை (7-ந் தேதி) வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கோடை மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் சற்று தணிந்தது. எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் குறுமலை ஆறு, பாரப்பட்டி ஆறு, கிழவிப்பட்டி ஓடை, உழுவி ஆறு, கொட்டை ஆறு, உப்பு மண்ணம் பள்ளம் உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கி இருக்கும் மருத்துவ குணமிக்க மூலிகைகள் தண்ணீருடன் கலந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை முற்றிலுமாக இழந்து விட்டன. இதனால் பஞ்சலிங்க அருவி தண்ணீர் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது.

    இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். ஆனாலும் அருவிக்கு சென்று பார்வையிட்டு திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து வனப்பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    கோவிலுக்கு வந்து விட்டு திரும்பி செல்கின்ற பக்தர்கள் குறைவான நீர் இருப்பு உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம். அதை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் சேதம் அடைந்த கம்பி வேலியை சீரமைத்தும், கோடைகாலம் முடியும் வரையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது.
    • காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் அனல் வீசும் வெப்ப காற்றினால் பொதுமக்கள் வெளியே தலை காட்ட அஞ்சிய நிலையில் நேற்று இரவு சுமார்7.30 மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது. அப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் காட்டுப்புத்தூர், சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, மற்றும் காட்டுப்புத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், ஏலரசி, கற்பூரவள்ளி, உள்பட பல்லாயிரக் கணக்கான வாழையை பயிரிட்டு வந்தனர். இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×