search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தில் 200 கி.மீ நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் கடும் எதிர்ப்பால் ஏற்கனவே கடந்த 2013 ம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த திட்டம் தற்போது மீண்டும் செயல்வடிவம் பெற்றுள்ளது.

    இதனை கண்டித்து இன்று முதல் போராட்டங்களை தீவிரபடுத்த விவசாயிகள் திட்டமிட்டு தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இன்று காலை சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, தலவுமலை அருகில்கீழ் பவானி வாய்க்கால் கரையில் ஆண்கள், பெண்கள், என 500- க்கும் மேற்பட்டோர் திரண்டு இந்த திட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போரட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபட்டு, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் பல லட்சம் ஏக்கர் விவசாயமும் பாதிப்படையும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

    மேலும், கான்கிரீட் தளம் அமைப்பதை கைவிட்டு மற்ற பராமரிப்பு பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தினர்.

    விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாகவும், கீழ்பவானி திட்டத்தில் மறைமுக பாசன பகுதிகள் பாலைவனமாவதுடன், கரைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இயற்கைக்கு முரணாகவும், கசிவு நீர் திட்டங்களுக்கு எதிராகவும் உள்ள இந்த பணிகளை அனுமதிக்க மாட்டோம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி முருங்கத்தொழுவு ரவி தெரிவித்தார்.
    Next Story
    ×