என் மலர்tooltip icon

    ஈரோடு

    அவினாசியை அடுத்த வெங்கக்கல்பாளையம் அருகே கடந்த மாதம் 27-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
    அவினாசி:

    அவினாசியை அடுத்த வெங்கக்கல்பாளையம் அருகே கடந்த மாதம் 27-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்று இரவு 8 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை முன்பு நின்று மதுக்கடையை மூட வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் ஒரு தரப்பினர் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது. நாங்கள் இங்கிருந்து 5. கி.மீ தூரம் சென்று மது அருந்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. உள்ளூரில் மதுக்கடை வேண்டும் என்று மதுக்கடைக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். இரு தரப்பினர் கருத்துவேறுபாடு காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் உங்களது கோரிக்கையை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி டாஸ்மாக் கடையை மூடினார்கள். இருப்பினும் அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இரவு வரை பொதுமக்கள் அங்கேயே காத்திருத்தனர்.
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்ற ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் தினமும் யானைகள் தண்ணீருக்காக இந்த ரோட்டை கடந்து சென்று வருகிறது. நேற்று ஒற்றை காட்டு யானை ஒன்று நடுரோட்டில் அங்கும் இங்குமாய் சுற்றி கொண்டிருந்தது.

    இதையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டதும் தூரமாகவே வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து நகர்ந்து வன பகுதிக்குள் சென்றது.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானையை கண்டால் தூரமாக நின்று கொள்ள வேண்டும். யானையின் அருகே செல்ல வேண்டாம். யானைகள் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்போது அருகே சென்றால் மிதித்து விடும் என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாக பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் குடிகொண்டு வடக்கு திசை பார்த்து செல்லியாண்டியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி ஆகிய 3 புண்ணிய நதிகள் இணையும் கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் வட திசையில் 18 பட்டி கிராமங்களின் அதி தேவதையாக செல்லியாண்டியம்மன் உள்ளார்.

    இந்த கோவிலின் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுடன் திருவிழா தொடங்கியது. செல்லியாண்டியம்மன் கோவிலுடன் வகையறா கோவில்களான மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களிலும் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி பூஜைகள் நடந்தன. பிப்ரவரி 23-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 24-ந் தேதி கொடிஏற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் விட்டு வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் செல்லியாண்டியம்மனுக்கு பக்தர்கள் நீராட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் கருவறையில் உள்ள செல்லியாண்டியம்மனுக்கு பெண்கள் புனித நீர், பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் நீராட்டு செய்தனர். இதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் இரவு முதலே காத்திருந்து வழிபாடு செய்தனர்.

    செல்லியாண்டியம்மன் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியாகும். பவானி மேட்டூர் ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து கோவில் பூசாரிகள், முக்கிய நிர்வாகிகள், பக்தர்கள் நேற்று காலை எல்லை மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மை அழைத்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட குதிரைக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது குதிரை துளுக்கியது. அதைத்தொடர்ந்து பூசாரி பாலகிருஷ்ணன் படைக்கலன்களை சுமந்து கொண்டு செல்லியாண்டியம்மன் கோவில் நோக்கி புறப்பட்டார். குதிரை, பூங்கரகம் ஆகியவற்றுடன் படைக்கல ஊர்வலம் தொடங்கியது.

    அப்போது பவானி எல்லையம்மன் கோவில் முதல் செல்லியாண்டியம்மன் கோவில்வரை பக்தர்கள் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் கிடந்த புழுதியில் தண்ணீர் சேர்ந்ததால் உருவான சேற்றை எடுத்து ஆண் பக்தர்கள் தங்கள் உடலில் பூசிக்கொண்டனர். அதிக வெயில் இருந்ததால் சாலையில் தண்ணீர் விடப்பட்டது. இந்த தண்ணீர் மண்ணில் கலந்து சேறாக மாறியது. இதனை உடல் முழுக்க பூசி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

    ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உடலில் சேறு பூசி நேர்ச்சை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இதுபோல் பக்தர்கள் பலரும் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். கடவுள் வேடங்கள், ராட்சத வேடங்கள், பேய் வேடங்கள் போட்டு வந்தனர். உடல் முழுவதும் கரி, வண்ண பெயிண்டுகள், அலுமினிய வண்ண பெயிண்ட்டுகள் பூசியும் பலரும் நடமாடினார்கள்.

    சாலையோரங்களிலும், வீடுகள் மற்றும் கடைகளின் மாடிகளில் இருந்த பக்தர்கள் குதிரை மற்றும் படைக்கலன் எடுத்து வந்தவர், பூங்கரகம் எடுத்தவரின் பாதங்களுக்கு பூஜை செய்து வணங்கினார்கள். சாமிக்கு தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து வழிபட்டனர். மேலும் நேர்ச்சையாக உப்பு-மிளகு, காய்கறி, இனிப்பு உள்பட பல்வேறு பொருட்களை வீசினார்கள். இந்த பொருட்களுடன் சில்லரை காசுகளையும் வைத்து வீசினார்கள். சில்லரை காசுகள் மற்றும் பொருட்களை இளைஞர்கள், சிறுவர்கள் போட்டி போட்டு சேகரித்தனர்.

    தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் மூலம் பக்தர்களுக்கு மோர், கூழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த ஊர்வலம் மாலையில் கோவிலை வந்து சேர்ந்தது. இதற்கிடையே பொங்கல் விழாவையும் பொதுமக்கள் கொண்டாடினார்கள். மாவிளக்கு பூஜையும் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலையில் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 7-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி வீடு கிரகபிரவேசத்துக்கு மா இலை பறித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சவுந்தர்யா என்ற மகளும், கோபாலகிருஷ்ணன் (27) என்ற மகனும் உள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கோபால கிருஷ்ணன் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

    வீடு கிரக பிரவேசத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்களை அழைத்திருந்தார்.

    வீடு கிரக பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிநீர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி அருகில் இருந்த மா மரத்தில் மா இலைகளை பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்அழுத்த மின்கம்பியில் அவரது கை மோதியது. இதில் மின்சாரம் தாக்கி கோபாலகிருஷ்ணன் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அப்போது சிலர் மேலே சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் கோபாலகிருஷ்ணன் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து மேல்நிலைத் தொட்டியில் இருந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுவீடு கிரக பிரவேசத்தன்று கோபாலகிருஷ்ணன் மின்சாரம் தாக்கி இறந்ததால் அவரது வீடே சோகத்தில் மூழ்கியது. ஒரே மகனை இழந்த துக்கத்தில் பெற்றோர் கதறி அழுதனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. இதுவரை 14 ஆயிரத்து 558 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். இதில் நேற்று 11 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 94 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 150 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
    ஈரோடு:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி போடும் முதியவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அப்படி இல்லை என்றால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்துவந்தனர். இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்ட 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 42 தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை பார்த்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் ½ மணி நேரம் கண்காணிப்பில் இருந்தனர்.

    24 அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், 42 தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூ லிக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    “தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பா.ஜ.க.வுக்கு நல்லது” என கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
    கடத்தூர்:

    கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் வந்தார். இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும். இதனால் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல திட்டங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. இதுவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

    இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரத்துக்கு பா.ஜ.க. என்னை பயன்படுத்தி கொண்டால் அவர்களுக்குத்தான் நல்லது. என்னை அழைப்பார்கள் என நான் நம்பிக்கையோடு உள்ளேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்வதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

    தி.மு.க.வினர் தவறான கருத்துகளை முன்வைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது இந்த தேர்தலில் எடுபடாது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனியாக நின்று தேர்தலை சந்தித்தால் கூட ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும்.

    சசிகலா வருகையால் இந்த தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட போவது இல்லை. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது கனவில் கூட நடக்காது. அவருக்கு இனி எந்த விதமான வாய்ப்பும் கிடையாது. மேலும், அவர் பொதுமக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பர்கூர், காளிமலை மலைவாழ் மக்கள் சாதி சான்று கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிக்க போவதாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மழை பகுதிகளான ஈரட்டி, மின் தாங்கி, எப்ப தான் பாளையம், கல் வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கபடவில்லை. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கூறியும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.

    இதை கண்டித்து மலைப் பகுதி மக்கள் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    இது நாள் வரை எங்களுக்கு என்ன ஜாதி என்றும் எந்தப் பட்டியலில் உள்ளோம் என்றும் தெரிய வில்லை. சாதி சான்று வழங் காததால் பல தலை முறை யாக எந்தவித கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன் னேற்றம் இல்லாமல் வாழ்ந்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது.

    மேலும் கோவை அரசு பதிவு இதழில் 1887-ல் பவானி தாலுகாவில் பர்கூர் மலை மற்றும் காளி மலையில் மலையாளி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சேர்வராயன் மலை மற்றும் கொல்லி மலையில் வசிக்கும் மலையாள இனத் தை சார்ந்தவர்கள் என்று தெளிவாக கூறப்பட் டுள்ளது.

    சேலம் மாவட்ட அரசு பதிவிதழில்1918-ல் பவானி தாலுகாவில் பாலமலை, பர்கூர் மலை மற்றும் காளி மலைப்பகுதியில் கொல்லி மலையை சார்ந்த மலையாளி இன மக்கள் வசிக்கிறார்கள் என்று தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.

    இதில் பாலமலையில் உள்ள மலையாளி இன மக்கள் மட்டும் மலையாளி பழங்குடியினஜாதிச் சான்று பெற்று வருகிறார்கள். பர்கூர் மலை மற்றும் காளி மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு ஜாதிச்சான்று கிடையாது.

    ஏற்கனவே மலையாளி இன மக்கள் உள்ள சேலம், திருச்சி, நாமக்கல், பெரம் பலூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, திருவண்ணா மலை ஆகிய மாவட்டத்தில் பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகிறது.அதே போன்று ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலையக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்து வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் எங்கள் ரேசன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோபிசெட்டிபாளையத்தில் வாகன சோதனையில் 131 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 131 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பறக்கும் படையினர் கார் மற்றும் மதுபாட்டிலை சிறுவலுர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் மதுபாட்டில்கள் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் இருந்து கோபி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சசிவர்ணம் (28) என்பவரை கைது செய்தனர்.

    கோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி. அவருடைய மகன் கதிரேசன் (வயது 23). அதே ஊரை சேர்ந்த கந்தன் மகன் சக்திவேல் (20). கதிரேசன் சக்திவேலுடன் பட்டம்பாளையம் என்ற இடத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கதிரேசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட சக்திவேல் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

    சாணார்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்து நடந்ததும் வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கதிரேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதிரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான கதிரேசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்று உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க இருந்த நிலையில் கதிரேசன் விபத்தில் இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அந்தியூர்:

    கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35). இவருக்கும், சுமதி (29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுமதி கணவருடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் சுமதி கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியான சுமதிக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    உடனே வீட்டில் இருந்த முத்துசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமதியை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சுமதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று, சுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடம்பூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    கடம்பூர் அருகே உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கடம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கடம்பூர் போலீசார் அணைக்கரை பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்

    அணைக்கரை அருகே உள்ள கிணத்துதொட்டியை சேர்ந்த மாதப்பன் (வயது 41) என்பதும், 1 கிலோ கஞ்சாவை பொட்டலமாக கட்டி விற்பனை செய்ய நின்றுகொண்டு இருந்ததும் தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து மாதப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தார்கள்.
    ×