என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள நம்பியூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 15). இவர் நம்பியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கோபியை அடுத்த எலத்தூர் செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு தினேஷ்குமார் சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவர் வாய்க்காலில் மூழ்கியதுடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள், கடத்தூர் போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவரின் உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையே இருட்டிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று கோபியை அடுத்த வெட்டையம்பாறை என்ற இடத்தில் தினேஷ்குமார் உடல் மிதந்தது. உடனே கடத்தூர் போலீசார் அங்கு சென்று தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). ஸ்கிரீன் பட்டறை உரிமையாளர். இவருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோனிகா (21) என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. மோனிகாவின் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் ஒருமுறை கூட மோனிகாவை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மோனிகா சம்பவத்தன்று கார்த்தியின் பட்டறையில் இருந்த ரசாயன மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோனிகா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    அரச்சலூர் அருகே குடிபோதையில் வந்ததை தட்டி கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து மெயின் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மோகன சங்கர் (29) தீனதயாளன் (27) என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் தீனதயாளனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு எண்ணெய் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு தீனதயாளன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை சங்கர் உனக்குப் பெண் பார்ப்பதில் நிறைய செலவாகிறது. இப்படி இருக்கும்போது நீ குடித்துவிட்டு வீண்செலவு செய்கிறாயே என்று கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன் தந்தை சங்கரை கீழே தள்ளி நெஞ்சுப்பகுதியில் எட்டி உதைத்தார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தீனதயாளனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து அணைத்தனர்.
    தாளவாடி:

    தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.

    இங்கு தாளவாடி, ஜூர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லை கும்பாரகுண்டி வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணிமுதல் காட்டு தீ பற்றியது. தகவல் அறிந்த வனதுறையினர் சுமார் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதியில் நடந்து சென்று தீ யை அணைத்தனர்.

    அதே போல் ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது சம்பவயிடத்திக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைத்தனர்.


    உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட மூலவாய்க்கால் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெருந்துறை காஞ்சிக்கோயில் பகுதியை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.

    விசாரணையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் சிமெண்ட் கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணம் என்பதும், அதை சத்தியமங்கலத்தில் செயல்படும் தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    நம்பியூர் அருகே பட்டறையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் காமராஜ் நகர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    விக்னேஷ் பட்டறையில் 2 மோட்டார்சைக்கிளை பழுது நீக்கி வைத்து விட்டு சோதனை ஓட்டத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது அளுக்குளி பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற தேவா (23), விக்னேஷ் பழுது நீக்கி வைத்திருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு சென்றுள்ளார்.

    திரும்பி வந்த விக்னேஷ் இதுபற்றி அறிந்து, நண்பர்களுடன் துரத்தி சென்று தேவாவை பிடித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி தேவாவை கைது செய்தனர்.
    கொடுமுடி அருகே கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கொடுமுடி:

    கரூர் தான்தோன்றி மலை தெற்கு வீதியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 61). இவருடைய மனைவி சரோஜா. மகள்கள் சத்யா, பூர்ணிமா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    வைரமுத்து கரூரில் ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் பண்டிகை பலகார சீட்டும் நடத்தி வந்துள்ளார்.

    பலகார சீட்டு மூலம் வரும் பணத்தை வட்டிக்கு விட்டும் தொழில் நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் வைரமுத்துவிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் அடைந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் இவருக்கு கடன் தொல்லையும் அதிகமானது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி வைரமுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரில் இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும், ஒரு அறையில் தூங்கச்சென்றுவிட்டார்.

    அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் இனி வாழ்ந்து என்ன பயன்? என்ற நினைத்த வைரமுத்து மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று முன்தினம் அதிகாலைதான் வைரமுத்து தூக்குப்போட்டுக்கொண்டது அவருடைய உறவினருக்கு தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர், உடனே கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொகுதி சீரமைப்பிற்குப்பின் 2011-ல் உதயமான ஈரோடு கிழக்கு தொகுதி குறித்து ஓர் பார்வை...
    ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். துணிகளுக்கு சாயமிடுதல், ப்ளிச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500&க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

    இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி

    இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியான ரகங்களில் மிகக்குறைந்த விலையில் ஜவுளிகள் கிடைப்பதால் ஈரோடு மற்றும் பள்ளிப்பாளையம், சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்வார்கள்.

    2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டப்பேரவை தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.

    தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றுள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி. சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் கே.எஸ். தென்னரசும் வெற்றிபெற்றனர்.

    1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம், பெரிய அக்ரஹாரம், பெரியவலசு, சம்பத்நகர் போன்றவை முக்கிய பகுதிகளாக உள்ளது. மேலும் ஈரோடு பஸ் நிலையம் ரெயில் நிலையம் இந்த தொகுதியின் தனி அடையாளமாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 987, மூன்றாம் பாலினம் 15 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், வேட்டுவக-வுண்டர், முதலியார், நாடார், தேவர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 30 சதவீதம் என பலர் உள்ளனர்.

    கோரிக்கைகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்படும் சாய மற்றும் தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை அளித்து வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் உள்பட பல பிரச்சனைகள் உள்ளது.
    மகளிர் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    சத்தியமங்கலத்தை தன்னுடன் இணைத்துள்ள பவானிசாகர் தொகுதி கண்ணோட்டம்....
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில், தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை உள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை நம்பி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுந்தருளிய புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அனைத்து வனவிலங்குகள் வாழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை, மாமன்னர் திப்பு சுல்தான் வாழ்ந்த இடங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் இருப்பிடங்கள் என பல்வேறு சிறப்புகளை தாங்கியது பவானிசாகர் தொகுதி.

    2011-ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்ததை, தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒன்றுபட்ட பவானிசாகர் (தனி) தொகுதியாக மாறியது.
    சத்தியமங்கலம் தொகுதியாக இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் கருத்திருமன் ஒரு முறை வெற்றியும் இரண்டாவது முறை திமுகவிடம் தோல்வியும் அடைந்தார்.

    பவானிசாகர் தொகுதி

    தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,59,118. இதில் ஆண்கள் 1,26,775, பெண்கள் 1,32,355, மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் உள்ளனர்.

    தொகுதியில் லிங்காயத்து, பழங்குடியினர், வெள்ளாளக்கவுண்டர்கள், வேட்டுவகவுண்டர்கள், வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

    கோரிக்கைகள்

    கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி இன மக்களுக்கு மலையாளி சான்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 35 ஆண்டு காலமாக உள்ளது. ஆனால் இதுவரை இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், அவர்களது சான்றிதழ்களில் இதர வகுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடன்கள், தள்ளுபடி போன்ற ஏராளமான சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போவதாக கூறுகின்றனர்.

    தாளவாடி மலைப்பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தாளவாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து வந்தனர். ஆனால் மருத்துவர் பற்றாக்குறையின் காரணமாக இறந்தவர்களின் உடல்களை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அல்லது 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

    தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 பஞ்சாயத்துகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் யாரும் பணியாற்றுவதில்லை. மலைவாழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மக்களுடைய வாழ்வாதாரம் என்பது வனத்திற்குள் சென்று இலவசமாக சிறுவன மகசூலில் ஈடுபடுவது, நெல்லிக்காய், கடுக்காய், சீமார்புல் சேகரித்து அதனை தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

    அதனை நீண்ட காலமாக வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். மாடு மேய்க்க கூடாது, ஆடு மேய்க்க கூடாது, சிறுவன மகசூல் சேகரிக்கக் கூடாது என தொடர்ந்து மலைவாழ் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். காலம் காலமாக வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் சென்று வந்த மலைவாழ் மக்களை தடுக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக உள்ளதால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீர், உணவின்றி தவித்து போகின்றனர்.

    பவானிசாகர் தொகுதி

    அரசு நிர்ணயித்த 16 டன் எடை அளவு கொண்ட வாகனங்களில் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தும் வடவள்ளி மற்றும் ஆசனூர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள வாகன எடை சோதனை நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்ற காரணத்தினால்தான் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றது எனவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம், பவானிசாகர் தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பூ, தமிழகம் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டுமின்றி துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சத்தியமங்கலம் மல்லிகை பூவுக்கு என தனி மவுசு இருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மல்லிகை பூவுக்கு என அரசின் சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நகர பகுதியில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் போன்ற சில அடிப்படை வசதிகள் மட்டுமே நடைபெற்றிருக்கும் நிலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.
    கடந்த இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள பவானி தொகுதி ஒரு பார்வை....
    பவானி சட்டமன்ற தொகுதியில் பவானி, அமுதநதி, காவிரி ஆகிய 3 நதிகளும் கூடும் பவானி கூடுதுறை அமைந்துள்ளது. தென்னகத்தின் திருவேணி சங்ககம் என்று அழைக்கப்படும் இந்த கூடுதுறை தென்னகத்தின் மிகப்பெரிய பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு புனித நீராடி சங்கமேஸ்வரரை ஆண்டுதோறும் பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.

    பவானி தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 531. இதில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 232 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 291 பேர். மூன்றாம் பாலினத்தினர் 9 பேர் உள்ளனர்.

    பவானி தொகுதி

    தொகுதியில் பவானி நகரம், பவானி நகராட்சி, சங்கபாளையம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம், ஆப்பக்கூடல், ஜம்பை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப் பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், கடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், ஆகிய சிறிய கிராமங்கள் தொகுதியில் அடங்கி உள்ளன.

    பவானி தொகுதி

    இங்கு வன்னியர்கள் பெருமான்மையாக உள்ளனர், இவர்களுக்கு அடுத்தபடியாக கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார், நாயுடு, ரெட்டியார், ஆதிதிராவிடர் என பல்வேறு சமுகத்தினர் கணிசமாக உள்ளனர்.

    பவானி தொகுதி

    இத்துடன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். இவர்களில் வன்னியர் மற்றும் முதலியார் தலா 30 சதவீதம் பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.

    தேசிய விடுதலைக்கு பிறகு பவானி தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது. அதன்பிறகு இதுவரை 15 தடவை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பா.ம.க. த.மா.கா. தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள்

    பவானி ஜமக்காளம் புகழ்பெற்றதாகும். இது தொடர்பான வர்த்தகங்களும் அதிகமாக உள்ளன. இதே போல விவசாயமும் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. ஜமக்காளம் தொழில் தொடர்பாக இன்னும் கூட தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் ஜமக்காளம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் விற்பனைக்கு அனுப்ப பட்டு வருகின்றன. மேலும் பரிகார தலமான பவானி கூடுதுறையில் பக்தர்கள் வசதிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்றும் இந்த தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    பவானியில் அரசு ஆஸ்பத்திரி போதிய வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    பவானி தொகுதி

    நகரின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும் அவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

    நெசவாளர்கள், விவசாயிகள் நிறைந்த இந்த தொகுதி மக்கள் தங்கள் உற்பத்திசெய்யும் ஜமக்காளம், மற்றும் விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளை கொண்டு வர 24 மணி நேரமும் கூடுதல் பஸ்வசதி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர். 
    மேலும் கோவை-சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள இந்த தொகுதியில்தான் லட்சுமி நகர் பைபாஸ் பகுதி வருகிறது. அங்கு இரவு நேரத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    பவானி தொகுதி இதுவரை
    பவானி தொகுதி இதுவரை

    1952 பி.கே.நல்லசாமி (காங்கிரஸ்)
    1957 ஜி.ஜி.குருமுர்த்தி (காங்கிரஸ்)
    1962 என்.கே. ரங்கநாயகி (காங்கிரஸ்)
    1967 ஏ,எம்.ராஜா (தி.மு.க.)
    1971 ஏ. எம்.ராஜா (தி.மு.க.)
    1977எம். ஆர்.சவுந்தரராஜன் (அதிமுக)
    1980 பி.ஜி.நாராயணன்(அதிமுக)
    1984 பி.ஜி.நாராயணன் (அதிமுக)
    1989 -ஜ. ஜ. குருமுர்த்தி (சுயேச்சை)
    1991- எஸ். முத்துசாமி (அதிமுக)
    1996 -பாலசுப்பிரமணியன் (த.மா.கா)
    2001 கே.சி. கருப்பணன் (அதிமுக)
    2006 கே.வி.ராமநாதன் (பாமக)
    2011 பி.ஜி.நாராயணன் (அதிமுக)
    2016 கே.சி.கருப்பணன் (அதிமுக)
    அதிமுக சார்பில் செங்கோட்டையனை ஏழு முறை சட்டசபை உறுப்பினராக்கிய கோபி தொகுதி கண்ணோட்டம்....
    நெல், கரும்பு, வாழை என பணப்பயிர்கள் விளைவதால் கோபிசெட்டிபாளையம் வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, கீழ் பவானி வாய்க்காலின் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    கோபி தொகுதியில் சுற்றுலா தலமான கொடிவேரி அணை, குண்டேரிபள்ளம் அணை, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சமலை பவளமலை முருகன் கோவில் ஆகியவை உள்ளன.

    கோபி தொகுதி

    கோபிசெட்டிபாளையம் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 502 . இதில் ஆண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 945 பேர். பெண்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 551 பேர். மூன்றாம் பாலினத்தினர் 6 பேர் உள்ளனர்.

    கோபி தொகுதி

    கோபி செட்டி பாளையம் தொகுதியில் கோபிநகராட்சி, பெரிய கொடிவேரி, லக்கம்பட்டி, காசி பாளையம், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர் போன்ற பேரூராட்சிகளும், புள்ளப்ப நாயக்கன்பாளையம், அரக்கன் கோட்டை, கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம் பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன் பாளையம், கடத்தூர், சுண்டக்காம் பாளையம், கூடக்கரை, ஆண்டி பாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தாழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம் பாளையம், வேம்மாண்டாம் பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோவில், காட செல்லி பாளையம், சின்னாரி பாளையம், சாந்தி பாளையம், அவலம் பாளையம் பாரியூர், வெள்ளாள பாளையம், நஞ்சை கோபி, குள்ளம் பாளையம் நாதி பாளையம், மொடச்சூர், நாகதேவன் பாளையம்மற்றும் நிச்சாம் பாளையம் கிராமங்கள் உள்ளன.

    கோபி தொகுதி

    இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள், வேட்டுவக்கவுண்டர்கள், நாடார்கள், பெரும்பான்மையாக உள்ளனர். இது தவிர ஆதிதிராவிடர் சமூகத்தினரும் கணிசமாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் கணிசமாக உள்ளனர். கோபி சட்டமன்றத்திற்குபட்ட கோபி ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளும், 4 பேரூராட்சிகளும் கோபி நகராட்சியும் உள்ளன.

    கோபி தொகுதியில் இதுவரை 15 சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும், 9 முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் செங்கோட்டையன் மட்டும் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோபி தொகுதி

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலையே செய்து வருகிறார்கள். நகராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கரட்டூர் பகுதியில் 1.89 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 டன் குப்பைகள் சேகரமாகிறது.

    இந்த குப்பை கிடங்கு பிரச்சனையை தீர்க்கவும், தமிழக அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியது. இயந்திரங்கள் மூலம் ஓரளவு குப்பைகளை உரமாகத் தயாரித்து விவசாயிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கியது.

    ஆரம்பத்தில் இங்கு குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் பேக்டரிக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் சிமெண்ட் கம்பெனி நிர்வாகமும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்க மறுத்ததால், தொடந்து பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவை தவிர கோபிசெட்டிபாளையம் நகரில் கீரிப்பள்ளம் ஓடை தீராத பிரச்சனையாக உள்ளது. மொடச்சூர் பகுதியில் துவங்கும் இந்த கீரிப்பள்ளம் ஓடை ஆரம்ப காலத்தில் நல்ல தெளிவான நீர்மட்டுமே அதில் சென்றது. ஆனால், காலப்போக்கில் கோபி நகரின் சாக்கடை கழிவுகள் அதில் சேர்ந்து தற்போது அசுத்த நீர் ஓடையாகவும், கழிவுநீர் ஓடையாகவும் மாறி உள்ளது.

    இதனால் தற்போது கீரிப்பள்ளம் ஓடையின் கழிவுநீர் பதி என்ற இடத்தில் தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது. இதனால், வாய்க்கால் தண்ணீர் அசுத்தம் அடைகிறது. மேலும், கீரிப்பள்ளம் ஓடை தண்ணீர் வாய்க்காலில் நேரடியாக கலப்பதற்கு பதில் ஓடை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விட்டால் விவசாய விளை நிலங்கள் பாதிப்படைவது தவிர்க்கப்படும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது கீரிப்பள்ள ஓடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஈரோடு முதல் கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரை 4 வழிசாலை அமைக்கும் பணிகள் ஆய்வுப்பணி செய்த நிலையிலேயே உள்ளது. 4 வழி சாலை அமைக்க வேண்டும். மற்றும் கோபி செட்டிபாளையம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. 
    இவை தவிர கோபி தொகுதியில் பட்டு வளர்ப்பு தொழில் நடைபெற்று வந்தது.

    கோபி தொகுதி

    தற்போது அதற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும், பட்டுகூடுகளை விற்பனை செய்ய அருகில் மையம் இல்லாத காரணத்தினாலும் பல விவசாயிகள் பட்டுகூடு உற்பத்தி செய்யும் தொழிலை கைவிட்டு விட்டனர். மேலும், கோபி செட்டி பாளையம் தொகுதியைப் பொறுத்த வரை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களே பிரதான தொழிலாக உள்ளது.

    தற்போது திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கோபி, நம்பியூர் பகுதிகளில் இடங்களை வாங்கி இங்கேயே ரெடிமேட் ஆடைகள் என்று அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க தேவையான பல்வேறு வகையான தையல் இயந்திரங்களை வாங்கி போட்டு, தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து ரெடிமேட் ஆடைகளை வாடிக்கையாளர்களின் விருபத்திற்கு ஏற்ப தயாரித்து, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

    தற்போது கோபி அருகே தாழ்குனி என்ற இடத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்க ஒரு டெக்ஸ்டைல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் போது 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மேலும், பயிற்சி பெற்ற ரெடிமேட் ஆயத்தஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள்.

    தேர்தல் வெற்றி

    கோபி தொகுதி இதுவரை
    கோபி தொகுதி இதுவரை

    1952- நல்லாகவுண்டர் (காங்கிரஸ்)
    1957- பி.ஜி.கருதிருமண் (காங்கிரஸ்)
    1962- முத்துவேலப்பகவுண்டர் (காங்கிரஸ்)
    1967- கே.எம்.ராமசாமிகவுண்டர் (சுதந்திரா)
    1971- பழனியப்பன் (தி.மு.க.)
    1977- ராமசாமி (அ.தி.மு.க.)
    1980- கே.ஏ.செங்கோட்டையன்(அ.தி.மு.க.)
    1984- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1989- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1991- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1996- ஜி.பி.வெங்கிடு (தி.மு.க.)
    2001- ரமணீதரன் (அ.தி.மு.க.)
    2006- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.) 
    2011- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    2016- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் பறக்கும்படை சோதனையில் நிதிநிறுவன அதிபரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    நம்பியூர்:

    தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரொக்கமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ரவுண்டானா பகுதியில் இரவு 12.45 மணியளவில் டி.என். பாளையம் வேளாண் அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டனர். ஆனால் காரை ஓட்டி வந்த நம்பியூர் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (36) என்பவர் தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கான பணம் தான் என்று கூறினார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் காட்டவில்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று தெரிவித்தனர்.
    ×