என் மலர்
ஈரோடு









ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கப்பணம் இருந்தது.
மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து சண்முகசுந்தரத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி என்றும் வசூலான பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பெருந்துறை அருகே உள்ள கம்புளியம்பட்டி அடுத்த தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32).
இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து இருந்தார்.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கோவிந்தராஜிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் உ.பி. மாநிலத்தில் இருந்து அரவிந்த்குமார் பேசுகிறேன். நீங்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து உள்ளீர்கள். பதிவு கட்டணமாக ரூ.3250 கட்ட வேண்டும் என கூறினார்.
இதையடுத்து கோவிந்தராஜ் அவரது வங்கி கணக்குக்கு ஆன்-லைன் மூலம் பணம் அனுப்பினார். தொடர்ந்து கோவிந்தராஜிடம் அடிக்கடி தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணம் அனுப்ப வேண்டும் என கூறினர். இதை நம்பி வேலைக்காக அடிக்கடி ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தம் இதுவரை ரூ. 12 லட்சத்து 22 ஆயிரம் பணம் செலுத்தினார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவருக்கு போன் செய்தார். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கோவிந்தராஜ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
அதில் ஆன்-லைனில் வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்தி உள்ளேன். ஆனால் அவர்கள் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறி உள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் காசி பாளையம் பகுதியில் இரவு 1.30 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வேனில் வந்த திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்பவரிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் நெல், வாழைக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால் பணத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் ஒப்படைத்தனர். பணத்துக்கான ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு வியாபாரி முத்தமிழ் செல்வனிடம் கூறி அனுப்பி வைத்தனர்.
இதே போல் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் தன்ராஜ், அவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் 2 பேரும் மேட்டூரில் இருந்து பவானிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டி பாளையம் பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் சங்கர் (46). விசைத்தறி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அதே பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது திருவிழாவுக்கு வரி போடுவது குறித்து சங்கருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (42), மோகன்ராஜ் (48), ஆகியோருக்கும் இடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அங்கு இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு வெளியே சென்று விட்டு சங்கர் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை முருகன், மோகன்ராஜ் ஆகியோர் வழிமறித்து முன்விரோதம் காரணமாக தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர், சங்கரை கடுமையாக தாக்கினர்.
இதனால் வலி தாங்க முடியாமல் சங்கர் மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் மயங்கி கிடந்த சங்கரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து கோபி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகன், மோகன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 4 ரோடு தொப்பம் பாளையம் என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் என்பவர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பணத்துக்கான ஆவணங்கள் கேட்டனர். அதற்கு சிவசங்கர் தான் வளர்த்த கோழிகளை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்து விட்டு பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனாலும் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.






