என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). இவர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்காவிற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் நாச்சியப்பா வீதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது, அருகில் நின்று கொண்டு இருந்த 2 பேர் பெருமாளின் மேல் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே சக பயணிகள் துரத்திச்சென்று அந்த 2 பேரையும் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள், கோவை மாவட்டம் கணேசபுரம் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் (38), சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    சத்தியமங்கலம்-கோவை மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரிசல் துறை என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரி டிரைவரிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

    மேலும் பணத்துக்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தனர். அவர் கருவூலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று லாரி டிரைவரிடம் தெரிவித்தார்.

    சத்தியமங்கலம்-கோவை மெயின் ரோடு பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது மினி ஆட்டோவை ஓட்டி வந்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் ரு. 81 ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் விசாரித்த போது தான் ஆடு வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. காரை திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரபு (45) என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் விசாரித்த போது பேக்கரி கடை நடத்தி வந்ததும் பேக்கரி கடையில் வசூலான பணத்தை எடுத்து வந்தபோது அதிகாரிகள் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. இவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ. சைபுதீனிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம் தொப்பம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதகாரிகள் நேற்று இரவு வாகன சோதனை நடத்திகொண்டு இருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது காரில் வந்த நவீன்சந்திரா என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 29ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்துக்கு ஆவணங்கள் கேட்டனர்.

    ஆனால் அவர்எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
    ஈரோடு:

    பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.

    கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

    இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.

    ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை பற்றியும், தான் கட்சிக்காக உழைத்தது பற்றியும் எடுத்து கூறினார். மேலும் கட்சி தான் முக்கியம் என்றார். மேலும் என் செயல்பாட்டில் என்ன குறைகளை கண்டது கட்சி தலைமை. ஏன் எனக்கு 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றார். எனக்கு சீட் தரவில்லை என்றாலும் வருத்தம் இல்லை என்றார். அப்போது தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் ஆதரவாளர்கள் கண் கலங்கினர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

    ஆதரவாளர்களின் வலியுறுத்தல் காரணமாகவும் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து உள்ளதாலும் பெருந்துறை தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதால் சுயேட்சையாக போட்டியிட போவதாக தோப்பு வெங்கடாச்சலம் அறிவித்தார்.

    இதையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதற்காக தொகுதி முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட்டு தங்களது பலத்தை தலைமைக்கு காட்ட வேண்டும் என்று ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாம் தான் முதலில் அறிவித்தோம் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
    ஈரோடு:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட திருநகர்காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். 

    அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஏழைகள் இல்லாத நிலை உருவாகி விட்டதா? தாய் மொழியை காப்பாற்றி விட்டார்களா? ்நாங்கள் தாய் மொழியை மீட்க குரல் கொடுப்போம்.

    இந்த தலைமுறையினரின் வாழ்க்கை மலர நாங்கள் வந்து இருக்கிறோம். நாளைய சரித்திரத்தை மாற்ற வாய்ப்பு கொடுங்கள். நான் தற்போது திரும்பி பார்க்கும்போது பெரிய தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் உள்ளது. இதே நிலை தற்போதைய குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது.

    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாம் தான் முதலில் அறிவித்தோம். அதை இப்போது புதிதாக கண்டுபிடித்ததுபோல் மற்றவர்கள் ரூ.1,000, ரூ.1,500 என்று ஏலம் விடுகிறார்கள். நல்ல திட்டத்தை ஏற்று கொள்வது சிறந்தது தான். நான் நேர்மையை நல்லது என்று கூறுகிறேன். அதையும் அவர்கள் ஏற்று கொள்வார்களா?

    மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகளை நாங்கள் மூடுவோம். மது குடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தொடங்குவோம்.

    நான் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் என்றேன். அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேர் என்று கூறுகிறார்கள். நான் அதற்கான திட்டம் வைத்து உள்ளேன். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்.

    வீடுக்கு ஒரு கணினி கொடுப்பேன் என்று கூறுகிறேன். அது இலவசம் அல்ல. உங்களுக்கான முதலீடு அது. அரசுக்கும், மக்களுக்குமான பாலம். நான் முதல்-அமைச்சர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன்பின்னர் நீங்கள் நேரடியாக என்னோடு பேசலாம். இடைத்தரகர்கள் யாருமின்றி உங்கள் திட்டங்கள் உங்களை வந்து சேரும்.

    இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
    வாழைத்தார் விலை சற்று உயர்ந்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நொய்யல்:

    நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்பட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இப்பகுதிகளில் நன்கு விளைந்த வாழைத்தார்கள் கூலிஆட்கள் மூலம் வெட்டப்பட்டு உள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கும், அருகில் பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும், லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ-350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று உயர்ந்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
    ஈரோடு:

    பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பவானி செங்காடு 2-வது வீதியை சேர்ந்த செந்தில் (வயது 46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்ற வழக்கில் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (44) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில், சத்தியமூர்த்தி ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின்பேரில் செந்தில், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்கடர் உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
    ஈரோட்டில் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல்காலனி பாரதி தியேட்டர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கோபால் (வயது 27). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரோகித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த வாரம் கார்த்திகா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மக்கள் நீதி மய்யத்தின் கட்சி வேட்பாளர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    ஈரோடு:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி வேட்பாளர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் இருந்து இன்று மதியம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியிலும், மொடக்குறிச்சி தொகுதியிலும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர், ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி 2-ம் நம்பர் பஸ் நிறுத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    இதைத்தொடர்ந்து, நாளை மதியம் ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    முன்னதாக அவர் இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் சித்தோடு கங்காபுறத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு வந்து இறங்கி அதன் பிறகு பிரசாரம் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹெலிகாப்டர் வந்து இறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கார் மூலமாக கோவையில் இருந்து வருகிறார்.
    அதிமுக- திமுக நேருக்குநேர் மோதும் அந்தியூர் தொகுதி ஓர் பார்வை.
    அந்தியூர் தொகுதியில் புகழ்பெற்ற அந்தியூர் சந்தை அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் மாட்டு சந்தை தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்றதாகும். இதேபோல் இங்கு மட்டுமே குதிரை சந்தை நடைபெறுகிறது.
    திப்புசுல்தான் காலத்தில் திப்புசுல்தான் தன் படைகளுக்கு தேவையான குதிரைகளை வாங்குவதற்காக இந்த சந்தை அமைக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது.

    அந்தியூர் தொகுதி

    அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில், பத்ரகாளியம்மன் கோவில்கள் உள்ளது. வெற்றிலை விவசாயம், கால்நடை வளர்ப்பு, விசைத்தறிகள், பட்டுவகைகள், செங்கல் சூளை, வாடகை கார், லாரி மோட்டார் தொழில்களும் சிறப்பாக இந்த தொகுதியில் நடந்து வருகிறது.

    இந்த தொகுதியில் புஞ்சை துறையம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சை புளியம்பட்டி, பொலக்காளி பாளையம், கடுக்கம் பாளையம் மற்றும் சுதராபுரம், பர்கூர், கொமராயனூர், புதூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம்,சங்கர பாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம் பாளையம், பிரம்மதேசம், பச்சாம் பாளையம், கெட்டி சமுத்திரம், மாத்தூர், வெள்ளித் திருப்பூர், வேம்பத்தி, மூங்கில் பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள் உள்ளன. 

    அந்தியூர் தொகுதி

    மேலும் வாணிப்புத்தூர், கூகலூர், பி. மேட்டுப்பாளையம், அந்தியூர்ஆகிய பேரூராட்சிகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 712 பேரும், பெண் வாக்காளர்கள்1 லட்சத்து 11 ஆயிரத்து 215 பேரும், இதர வாக்காளர்கள் 18 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 945 வாக்காளர்கள் உள்ளனர்.

    அந்தியூர் தொகுதியில் கவுண்டர் சமூகம் மற்றும் வேட்டுவகவுண்டர்கள், வன்னியர்கள் மற்றும் அருந்ததியர்கள் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். மேலும் செட்டியார், முதலியார், மலைவாழ் மக்கள் உள்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் கனிசமான அளவில் வசித்து வருகிறார்கள்.

    அந்தியூர் தொகுதி

    அந்தியூர் பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. குறிப்பாக பர்கூர் மலை பகுதிகளான ஈரட்டி, மின் தாங்கி, எப்பதான் பாளையம், கல்வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்ப பாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள்.

    இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் உயர் படிப்பு, மற்றும் அரசு வேலை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களுக்கு மலையாளி பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதோடு தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாக்காளர் அடையாளஅட்டை, ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகளை ஒப்படைக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    இந்த தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை தோனிமடுவு திட்டம் ஆகும். சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியதண்டா வனப்பகுதியில் தோனிமடுவு பள்ளம் ஓடுகிறது. இப்பள்ளத்தில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வருகிறது.

    அந்தியூர் தொகுதி

    தோனிமடுவுபள்ளத்தின் குறுக்கே அணை கட்டினால் சேலம் மாவட்டம் கொளத்துர், ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி ஆகிய தாலுகாவில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும். இந்த திட்டம் தொடர்பாக முதன் முதலில்1971&ம் ஆண்டு ஆய் வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இன்னமும் இத்திட்டம் நிறைவேறாமல் உள்ளது.

    இந்த திட்டத்தை 3வழிகளில் நிறைவேற்ற முடியும் என கண்டறியப்பட்டது. அதாவது வாய்க்கால் வெட்டி கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள 67 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகளில் நீரை நிரப்புதல் அல்லது குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது. இந்த 2 திட்டங்களும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றால் தோனிமடுவு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி தண்ணீரை பள்ளம் வெட்டி குண்டம் பள்ளத்தோடு இணைத்து அதில் இருந்து அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வரமுடியும். 3 வழிகளில் இந்த திட்டத்தை முடிக்கும் வாய்ப்புகள் இருந்தும் இன்னும்நிறைவேற்றப்படாதது இந்ததொகுதி மக்கள் நீண்ட கவலையாகஇருந்து வருகிறது.

    அந்தியூர் தொகுதி

    இதே போல் வரட்டுப் பள்ளம் அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்தியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். அந்தியூர் பகுதியை மையமாக கொண்டு பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தரவேண்டும். மேட்டூர் வலது கரை வாய்க்கால் திட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்தியூர் பகுதியில் மின்மயானம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

    அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு, திங்கட்கிழமைகளில் நடை பெறுகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை கால்நடை சந்தைகளும், திங்கட்கிழமை மளிகை மற்றும் காய்கறி சந்தையும் நடந்து வருகிறது 8.50 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த சந்தையில் தற்சமயம் தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அமைக்க 4.50 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மிதியுள்ள 4 ஏக்கரில் சந்தை நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் இந்த சந்தை செயல்படும் இடத்தை பஸ் நிலையமாக மாற்றவும்,சந்தைக்குவேறு இடமும்தேர்வு செய்யப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம்தற்காலிகமாக கைவிடப்பட்டது. எனவே புகழ்பெற்ற இந்த அந்தியூர் சந்தை இங்கேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர் தொகுதி
    அந்தியூர் தொகுதி

    இந்தமுறை அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதிமுக சார்பில் கே.எஸ்.சண்முகவேல் களம் காண்கிறார். திமுக சார்பில் 2016-ல் தோல்வியடைந்த எ.ஜி. வெங்கடாசலம் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார்.
    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஈரோடு திண்டல் மலையில் இருந்து பெருந்துறை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பெருந்துறையில் இருந்து வேப்பம்பாளையம் பிரிவு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் வேப்பம்பாளையம் பிரிவு ரோட்டை கடக்க முயன்ற போது எதிரில் வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்களில் இருந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் உயிரிழந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெகாப்கான் (வயது 30) என்பதும், படுகாயம் அடைந்தது அவருடைய தம்பி அதாப்கான் (27) என்பதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அதிமுகவும், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் மோதும் பெருந்துறை தொகுதி கண்ணோட்டம்.
    பெருந்துறை தொகுதியில் விவசாயம், மோட்டார் வாகன தொழில், போர்வெல் லாரி தொழில், கல்குவாரி ஆகியவை பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. பெருந்துறை வாரச்சந்தை தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது.

    பெருந்துறை அருகே தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சிப்காட் வளாகம் அமைந்து உள்ளது. இங்கு கியாஸ் நிரப்பும் பிளாண்ட், பிஸ்கட் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    பெருந்துறை தொகுதி

    கீழ்பவானி, எல்.பி.பி. வாய்க்காலின் பெரும்பகுதி பெருந்துறை தொகுதியில் உள்ள காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், பள்ளப்பாளைம், நசியனூர் ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ளது. இதனால் இங்கு கரும்பு, மஞ்சள், நெல், வாழை ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன.

    புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன் பாளையம்,குமார கவுண்டன்பாளையம், குறிச்சி, நெட்டிச்சி பாளையம், செட்டிக்குட்டை, வளையபாளையம், கணபதி பாளையம், தோரணவாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம் பாளையம், திங்களூர், பாடியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தாம்பாளையம், பெரியவிளாமலை, சின்ன விளாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன் பாளையம், நிமிட்டி பாளையம்,, ஊஞ்சபாளையம், கரண்டி பாளையம், பாப்பம் பாளையம், சின்ன வீரசங்கிலி, பெரிய வீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம் வேலம் பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு,

    பெருந்துறை தொகுதி

    வட்டலாபதி, வெள்ளியம்பதி, கண்டக்கம் பாளையம், விருமாண்டம் பாளையம், முத்தம் பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கய பாளையம், வடமுக காங்கய பாளையம்,செங்காளி பாளையம், கவுத்தம் பாளையம், எருமைக்காரம் பாளையம்,கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்டன் பாளையம், முகாசி பல்லகவுண்டன் பாளையம், மாரப்ப நாயக்கன் பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுபுதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப் பாளையம், புஞ்சை தளவாய்ப் பாளையம்,

    ரெட்டிப்பாளையம், அக்ரகார பெரிய பாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன் பாளையம், அக்ரகார கத்தாங்கண்ணி, இச்சி பாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம் பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள் அடங்கியுள்ளன.

    மேலும் பெத்தம்பாளையம், பள்ளபாளையம், காஞ்சிக்கோவில், கருமாண்டி செல்லிப் பாளையம், நல்லம்பட்டி, குன்னத்தூர், விஜயபுரி, பெருந்துறை, ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சிகள் அடங்கியுள்ளன.

    பெருந்துறை தொகுதி

    பெருந்துறை தொகுதியில 1 லட்சத்து 10 ஆயிரத்து 325 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 67 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 6 ஆயிரத்து 742 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வேட்டுவகவுண்டர்கள், பட்டியல் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்பட பலர் நிறைந்து உள்ளனர்.

    இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், இந்திய பொதுவுடமை கட்சி 4 முறையும், சங்கத சோசலிச கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    பெருந்துறை தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தொகுதியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 5 பொறியியல் கல்லூரி, ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைந்து உள்ளது.

    அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெருந்துறை தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணியும் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்த நிலையில் இனிமேல் பெருந்துறை தொகுதிக்கு குடிநீர் பஞ்சம் என்ற நிலை வருங்காலத்தில்இருக்காது.

    பெருந்துறை தொகுதி

    பெருந்துறையில் அனைத்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி மற்றும் சாலை வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையில் அமைந்துள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    தற்பொழுது இந்த பெருந்துறை தொகுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம், புதைவழி மின் பாதை, கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், காவல் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாக்கடை வசதி செய்து நடை மேடை அமைக்கும் பணி போன்ற திட்டங்கள் நடந்து வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இரண்டு முறை வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாசலத்திற்கு வாய்ப்பு வழங்காமல் அதிமுக எஸ்.ஜெயக்குமாருக்கு சீட் கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் கே.கே.சி. பாலு களம் இறங்குகிறார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    பெருந்துறை தொகுதி
    பெருந்துறை தொகுதி

    1957- என்.கே.பழனிசாமி (இந்திய பொதுவுடமை கட்சி)
    1962- என்.நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் (காங்கிரசு)
    1967- எசு.பாலசுப்பிரமணியம் சங்கத சோசலிச கட்சி
    1971- என்.கே.பழனிசாமி (இந்திய பொதுவுடமை கட்சி)
    1977- எ.பொன்னுசாமி (அ.தி.மு.க.)
    1980- டி.கே.நல்லப்பன் (இந்திய பொதுவுடமை கட்சி)
    1984- எ. பொன்னுசாமி (அ.தி.மு.க.)
    1989- வி.என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.(ஜெ))
    1991- வி.என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
    1996- என்.பெரியசாமி (இந்திய பொதுவுடமை கட்சி)
    2001- கே.எசு.பழனிசாமி (அ.தி.மு.க.)
    2006- பொன்னுதுரை (அ.தி.மு.க.)
    2011- என்.டி.தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
    2016- என்.டி.தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
    ×