search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் தொகுதி
    X
    அந்தியூர் தொகுதி

    அந்தியூர் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக- திமுக நேருக்குநேர் மோதும் அந்தியூர் தொகுதி ஓர் பார்வை.
    அந்தியூர் தொகுதியில் புகழ்பெற்ற அந்தியூர் சந்தை அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் மாட்டு சந்தை தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்றதாகும். இதேபோல் இங்கு மட்டுமே குதிரை சந்தை நடைபெறுகிறது.
    திப்புசுல்தான் காலத்தில் திப்புசுல்தான் தன் படைகளுக்கு தேவையான குதிரைகளை வாங்குவதற்காக இந்த சந்தை அமைக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது.

    அந்தியூர் தொகுதி

    அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில், பத்ரகாளியம்மன் கோவில்கள் உள்ளது. வெற்றிலை விவசாயம், கால்நடை வளர்ப்பு, விசைத்தறிகள், பட்டுவகைகள், செங்கல் சூளை, வாடகை கார், லாரி மோட்டார் தொழில்களும் சிறப்பாக இந்த தொகுதியில் நடந்து வருகிறது.

    இந்த தொகுதியில் புஞ்சை துறையம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சை புளியம்பட்டி, பொலக்காளி பாளையம், கடுக்கம் பாளையம் மற்றும் சுதராபுரம், பர்கூர், கொமராயனூர், புதூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம்,சங்கர பாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம் பாளையம், பிரம்மதேசம், பச்சாம் பாளையம், கெட்டி சமுத்திரம், மாத்தூர், வெள்ளித் திருப்பூர், வேம்பத்தி, மூங்கில் பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள் உள்ளன. 

    அந்தியூர் தொகுதி

    மேலும் வாணிப்புத்தூர், கூகலூர், பி. மேட்டுப்பாளையம், அந்தியூர்ஆகிய பேரூராட்சிகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 712 பேரும், பெண் வாக்காளர்கள்1 லட்சத்து 11 ஆயிரத்து 215 பேரும், இதர வாக்காளர்கள் 18 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 945 வாக்காளர்கள் உள்ளனர்.

    அந்தியூர் தொகுதியில் கவுண்டர் சமூகம் மற்றும் வேட்டுவகவுண்டர்கள், வன்னியர்கள் மற்றும் அருந்ததியர்கள் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். மேலும் செட்டியார், முதலியார், மலைவாழ் மக்கள் உள்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் கனிசமான அளவில் வசித்து வருகிறார்கள்.

    அந்தியூர் தொகுதி

    அந்தியூர் பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. குறிப்பாக பர்கூர் மலை பகுதிகளான ஈரட்டி, மின் தாங்கி, எப்பதான் பாளையம், கல்வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்ப பாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள்.

    இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் உயர் படிப்பு, மற்றும் அரசு வேலை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களுக்கு மலையாளி பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதோடு தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாக்காளர் அடையாளஅட்டை, ஆதார் அடையாள அட்டை, ரேசன் கார்டுகளை ஒப்படைக்கப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    இந்த தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை தோனிமடுவு திட்டம் ஆகும். சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியதண்டா வனப்பகுதியில் தோனிமடுவு பள்ளம் ஓடுகிறது. இப்பள்ளத்தில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வருகிறது.

    அந்தியூர் தொகுதி

    தோனிமடுவுபள்ளத்தின் குறுக்கே அணை கட்டினால் சேலம் மாவட்டம் கொளத்துர், ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி ஆகிய தாலுகாவில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும். இந்த திட்டம் தொடர்பாக முதன் முதலில்1971&ம் ஆண்டு ஆய் வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இன்னமும் இத்திட்டம் நிறைவேறாமல் உள்ளது.

    இந்த திட்டத்தை 3வழிகளில் நிறைவேற்ற முடியும் என கண்டறியப்பட்டது. அதாவது வாய்க்கால் வெட்டி கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள 67 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகளில் நீரை நிரப்புதல் அல்லது குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது. இந்த 2 திட்டங்களும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றால் தோனிமடுவு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி தண்ணீரை பள்ளம் வெட்டி குண்டம் பள்ளத்தோடு இணைத்து அதில் இருந்து அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வரமுடியும். 3 வழிகளில் இந்த திட்டத்தை முடிக்கும் வாய்ப்புகள் இருந்தும் இன்னும்நிறைவேற்றப்படாதது இந்ததொகுதி மக்கள் நீண்ட கவலையாகஇருந்து வருகிறது.

    அந்தியூர் தொகுதி

    இதே போல் வரட்டுப் பள்ளம் அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்தியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். அந்தியூர் பகுதியை மையமாக கொண்டு பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தரவேண்டும். மேட்டூர் வலது கரை வாய்க்கால் திட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்தியூர் பகுதியில் மின்மயானம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

    அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு, திங்கட்கிழமைகளில் நடை பெறுகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை கால்நடை சந்தைகளும், திங்கட்கிழமை மளிகை மற்றும் காய்கறி சந்தையும் நடந்து வருகிறது 8.50 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த சந்தையில் தற்சமயம் தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அமைக்க 4.50 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மிதியுள்ள 4 ஏக்கரில் சந்தை நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் இந்த சந்தை செயல்படும் இடத்தை பஸ் நிலையமாக மாற்றவும்,சந்தைக்குவேறு இடமும்தேர்வு செய்யப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம்தற்காலிகமாக கைவிடப்பட்டது. எனவே புகழ்பெற்ற இந்த அந்தியூர் சந்தை இங்கேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர் தொகுதி
    அந்தியூர் தொகுதி

    இந்தமுறை அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதிமுக சார்பில் கே.எஸ்.சண்முகவேல் களம் காண்கிறார். திமுக சார்பில் 2016-ல் தோல்வியடைந்த எ.ஜி. வெங்கடாசலம் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×