என் மலர்tooltip icon

    ஈரோடு

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    ஈரோடு:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் சித்தோட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.4¼ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது முக கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களிலும், முக்கிய சாலையான பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, திருநகர்காலனி, கருங்கல்பாளையம், பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் மூலமாக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அப்போது முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் முக கவசம் அணியாத 1,600 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், முக கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறையை கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் 20 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் குடிநீர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 54-வது வார்டு குந்தவை வீதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக புதிதாக வழங்கப்பட்ட இணைப்பில் சில வீடுகளுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் மூலமாக அவ்வபோது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி சார்பில் குந்தவை வீதியில் டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் கொண்டு செல்லப்பட்ட டிராக்டரை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய குடிநீர் இணைப்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் வினியோகத்துக்காக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய குழாயின் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதில் சில வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக வாகனங்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வேலைக்கு செல்பவர்கள் குடிநீர் பிடிக்க முடிவதில்லை. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தண்ணீரை சுமந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    கோபியில் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். சக்திவேல் கோபியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள வெள்ளாளபாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த சக்திவேலுக்கு விஜயா (32) என்ற மனைவி உள்ளார்.
    பெருந்துறை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. இவர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கூடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்தப்புகாரில் அவர், ‘அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவரின் மகன் பிரவீன்குமார் (வயது 24) எனது மகளை கடத்தி சென்றுவிட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் ஆகியோர், பிரவீன் குமாரையும், மாணவியையும் வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த பிரவீன்குமார், மாணவியுடன் நேற்று மதியம் பெருந்துறை போலீசில் தஞ்சமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாகவும், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

    மேலும் மைனர் பெண்ணை கடத்தி சென்றதால் பிரவீன்குமார் மீது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச்செயல்களுக்கான தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

    பின்னர் பிரவீன்குமார் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    சத்தியமங்கலம், அந்தியூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 2பேரிடம் இருந்து ரூ.6லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தன பிரனேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.5லட்சத்து 50 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வேனில் வந்தவர் திண்டுக்கல் மாவட்டம் மலையான் மல்லியை சேர்ந்த சின்னசாமி (22) என்பதும், மங்களூரில் கோழிகளை விற்றுவிட்டு அதற்கான பணத்தை உரிய ஆவணமின்றி அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர், உதவி அலுவலர் ரவி சங்கர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் அருகே உள்ள தோப்பூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிதாஸ் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.91 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் அந்தியூர் குப்பாண்டபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அருண்குமார் (வயது 40) என்பதும், வியாபாரியான அவர் சர்க்கரை வாங்குவதற்காக சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டிக்கு உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் இருந்தனர்.
    அதிமுக தொடர்ந்து நல்லதே செய்து கொண்டு இருக்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி.
    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை சேகரித்தார்.

    முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், சலுகைகளும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து உள்ளது. இதனால் மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மீண்டும் ஈரோட்டுக்கு வந்து, மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் நல்லது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டு இருக்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி.

    தமிழகத்தில் தேர்தலுக்கு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அ.தி.மு.க. நீடிக்கும். 2-வது அணியாக எதிர்கட்சியாக தான் தி.மு.க. விளங்கும். பிற கட்சிகள் அதே நிலையிலேயே நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    பவானிசாகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் பிரசாரம் செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதால் பயந்து போய் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறார்கள். பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.

    இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார்.
    பவானி அருகே வாய்க்காலில் குதித்த தொழிலாளி தலையில் அடிபட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    சேலம் மாவட்டம் வெள்ளக்கல்பட்டி அருகே உள்ள பாப்பான் ஏரித்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் இனாயத் (வயது 52). இவருடைய மனைவி நஸ்ரின் (45) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இனாயத் மனைவியை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகரில் தங்கிக்கொண்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இனாயத் அந்த பகுதியில் செல்லும் கோணவாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது கரையில் இருந்து அவர் வாய்க்காலுக்குள் குதித்தார். தண்ணீர் குறைவாக சென்றதால், வாய்க்காலின் கான்கிரீட் தளத்தில் தலை மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மயக்கமடைந்த நிலையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    அருகே குளித்துக்கொண்டு இருந்தவர்கள் இதைப்பார்த்து, உடனே அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது.
    கவுந்தப்பாடி:

    ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது. ஆனால் அதை தற்போதைய இளம்பெண்கள் முறியடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ஒரு பெண் திகழ்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக் கவுண்டனூரை சேர்ந்தவர் ராசா. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 29). இவருக்கும், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதையறிந்த திருநாவுக்கரசு அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். மேலும் மனைவி ராஜேஸ்வரியையும் விண்ணப்பிக்க சொன்னார். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்த இருவரும் அதற்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார்கள்.

    இந்தநிலையில் திருநாவுக்கரசுக்கும், ராஜேஸ்வரிக்கும் கவுந்தப்பாடியிலேயே கேங்மேன் வேலை கிடைத்தது.

    வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி, மின்கம்பத்தில் வீட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, மின்கம்பத்தில் ‘விறுவிறு' என ஏறி மின் இணைப்பை சரி செய்கிறார். இதேபோல் மின்மாற்றியில் ஏறியும் வேலை பார்க்கிறார்.

    இந்த காட்சிகளை காணும் பொதுமக்கள் வியந்துபோய் அண்ணாந்து பார்க்கிறார்கள். ‘அட பொண்ணு என்னமா கம்பத்துல ஏறி பீஸ்போடுது' என்று பாராட்டுகிறார்கள்.

    இதுகுறித்து ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவள். ஏற்கனவே தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து போடுவேன்.

    இதையறிந்த என் கணவர் தான் கேங்மேன் வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கம் கொடுத்தார். அதன் காரணமாகவே நான் பயமின்றி வேலை செய்கிறேன். கவுந்தப்பாடி நகர்ப்புறத்தில் பீஸ் போனால் தகவல் தருவார்கள். நான் அங்கு சென்று சரி செய்வேன். இதேபோல் நான் பணி செய்யும் இடத்திலும், என் குடும்பத்திலும் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள் அதுவும் காரணம். முயற்சி இருந்தால் போதும். பெண்கள் எந்த வேலையும் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது என்று கோபியில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    கடத்தூர்:

    கோபி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.மணிமாறன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று கோபி பஸ்நிலையத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று பலர் காத்துக் கொண்டு உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் டெல்லியில் அடகு வைத்து விட்டார். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் தேர்தலாக இது அமைந்துள்ளது.

    10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு என்ன செய்துள்ளது.?, சுயநிதிகுழுக்கள் கூட சரியாக செயல்படவில்லை. பெண்களின் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸ் அதிகாரி அவமானப் படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. பெண்கள் தண்ணீருக்கும், ரேஷன் கடைகளிலும் காத்துக் கிடக்கிறார்கள். தமிழ்நாட்டில் 23 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தற்போது காலியாக உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தொழில் முதலீடுகள் அதிகம் கொண்டு வரப்படும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைக்கப்படும். நகர்புற பெண்களுக்கு அரசு பஸ்களில் கட்டணம் கிடையாது. காசு கேட்டால் ஸ்டாலினிடம் கேளுங்கள் எனக் கூட சொல்லலாம். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

    இந்த ஆட்சியில் எல்லாவற்றிற்கும் கமிஷன். கொரோனாவில் கூட கமிஷன் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ன செய்துள்ளார்?. குழப்பமான ஒரு துறை என்றால், அது கல்வித்துறை தான். காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என்ற நிலை உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ள எதையும் இதுவரை நிறைவேற்றியதில்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டையும், சுயமரியாதையையும் மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 152 பேருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கலெக்டர் கதிரவன் மாவட்டம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகிறார். மேலும் சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் தினந்தோறும் முக கவசம் அணியாமல் வெளியேவரும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 152 பேருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
    ×