search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    ஈரோட்டில் குடிநீர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    ஈரோட்டில் குடிநீர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 54-வது வார்டு குந்தவை வீதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக புதிதாக வழங்கப்பட்ட இணைப்பில் சில வீடுகளுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் மூலமாக அவ்வபோது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி சார்பில் குந்தவை வீதியில் டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் கொண்டு செல்லப்பட்ட டிராக்டரை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய குடிநீர் இணைப்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் வினியோகத்துக்காக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய குழாயின் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதில் சில வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக வாகனங்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வேலைக்கு செல்பவர்கள் குடிநீர் பிடிக்க முடிவதில்லை. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தண்ணீரை சுமந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×