search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் கனிமொழி எம்.பி. பேசிய போது எடுத்த படம்.
    X
    கோபியில் கனிமொழி எம்.பி. பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது - கோபியில் கனிமொழி எம்.பி. பேச்சு

    தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது என்று கோபியில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    கடத்தூர்:

    கோபி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.மணிமாறன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று கோபி பஸ்நிலையத்தில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று பலர் காத்துக் கொண்டு உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் டெல்லியில் அடகு வைத்து விட்டார். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் தேர்தலாக இது அமைந்துள்ளது.

    10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு என்ன செய்துள்ளது.?, சுயநிதிகுழுக்கள் கூட சரியாக செயல்படவில்லை. பெண்களின் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸ் அதிகாரி அவமானப் படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. பெண்கள் தண்ணீருக்கும், ரேஷன் கடைகளிலும் காத்துக் கிடக்கிறார்கள். தமிழ்நாட்டில் 23 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தற்போது காலியாக உள்ள 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தொழில் முதலீடுகள் அதிகம் கொண்டு வரப்படும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைக்கப்படும். நகர்புற பெண்களுக்கு அரசு பஸ்களில் கட்டணம் கிடையாது. காசு கேட்டால் ஸ்டாலினிடம் கேளுங்கள் எனக் கூட சொல்லலாம். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

    இந்த ஆட்சியில் எல்லாவற்றிற்கும் கமிஷன். கொரோனாவில் கூட கமிஷன் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ன செய்துள்ளார்?. குழப்பமான ஒரு துறை என்றால், அது கல்வித்துறை தான். காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என்ற நிலை உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ள எதையும் இதுவரை நிறைவேற்றியதில்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டையும், சுயமரியாதையையும் மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×