என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர், ஈரோடு, பவானி, அந்தியூர் ஆகிய இடங்களில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
நசியனூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் கஜானாவை காலி செய்து, 6 லட்சம் கோடி கடனில் தள்ளாட வைத்துள்ளனர். அ.தி.மு.க.வினர் பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். ஆடு,மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல், வாக்குகளை வாங்க அமைச்சர்கள் ரூ.300 கோடி வரை செலவு செய்கிறார்கள். மற்ற தொகுதிகளில் ரூ.50 கோடிக்கு குறைவில்லாமல் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மக்களின் வரிப்பணம் உங்களிடம் வருவதால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத்தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்கினை மாற்றிப் போடுவார்கள். மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்.
தமிழன துரோக கூட்டணியை ஓட, ஓட விரட்டுவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இலவு காத்த கிளியாய் தி.மு.க.வினர் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள். ஏற்கனவே இந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து வைத்து இருப்பதால், தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடி விடுவார்கள். தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்.
அ.ம.மு.க ஆட்சிக்கு வந்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் தடுக்கப்படும். காவிரி பாயும் பகுதியின் இரு கரைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்படாது. நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொதுசுத்திகரிப்பு ஆலையம் அமைக்கப்படும். வருங்கால சந்ததியைப் பாதிக்கும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நெசவாளர்களுக்கான நூல்விலையை அரசு நிர்ணயிக்கும். தமிழகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அந்தியூரில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி அதிகம் இருக்கக்கூடிய பகுதியாக இருப்பதனால் இந்த பகுதியில் இருப்பவரையே சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அத்துறையில் இந்த பகுதிக்கு வளர்ச்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அந்தியூர் பகுதிக்கு முக்கிய தேவைகள் எதையும் செய்து கொடுக்கப்பட வில்லை.
மேலும் கடந்த ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரினார்களோ இல்லையோ தமிழக அரசின் கஜானாவை தூர்வாரி சென்று விட்டார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்களை வெற்றிபெற செய்தால் அந்தியூர் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்றி தரப்படும். அந்தியூர் பகுதிக்கு மின்சார மயானம் கொண்டுவரப்படும். இரவு 10 மணிக்கு மேல் அந்தியூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கோபிசெட்டிபாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பிரசாரம் செய்யாமல் தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு புறப்பட்டு சென்றார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியில் நேற்று மாலை திராவிட கழக தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திராவிட கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் என்பவர் தி.மு.க.வை ஏன் ஆதரிக்கவேண்டும் என்ற புத்தகத்தை கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் வெற்றிவேலுவுடன் தகராறு செய்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கல் வெற்றிவேல் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் வெற்றிவேலை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நம்பியூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டதை கைவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியை சேர்ந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பழனிச்சாமி, விக்னேஷ், கார்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோபி 2-வது மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வருவதுபோல் மேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. கோபி, புதுப்பாளையம், கச்சேரி மேடு, சத்தி ரோடு, மொடச்சூர் ரோடு, பாரியூர் ரோடு, பச்சமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த புழுதி காற்று வீசியது.இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பச்சமலை கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டு பறந்தது.
கோபி பகுதியில் புழுதி காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதே போல் கோபியை அடுத்த சிங்கிரிபாளையம் பகுதியில் பலத்த காற்று வீசியது. அந்த பகுதியில் சுந்தரம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டிருந்தார். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்தன.
இதேபோல் சத்திய மங்கலம், கணக்கம் பாளையம், டி.என்.பாளையம், பாரியூர், மோதூர், அரக்கன் கோட்டை, பவானி சாகர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் செவ்வாழை, நேந்திரம் ஆகிய ரகங்களை சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தனர். இந்த வாழைகள் அனைத்தும் வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் அவை அனைத்தும் முறிந்து சேதமானது. இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெட்டுவதற்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பலத்த சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானது. மரங்கள் அனைத்தும் நன்கு விளைந்து வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுத்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சூறாவளி காற்றின் காரணமாக சத்தியமங்கலம் அத்தாணி மெயின் ரோட்டில் நால் ரோடு பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தன.
சென்னிமலை:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா பாப்பினி பச்சபா பாளையம் வாழைதோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் மஞ்சு (17).
இவர் இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் என்ற பகுதியில் நடக்கும் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக தனது தாத்தா பொன்னுசாமி (60) என்பவருடன் மொபட்டில் சென்றார்.
இவர்கள் 2 பேரும் இன்று காலை சுமார் 8 மணியளவில் சென்னிமலை தெற்கு ராஜவீதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென இவர்கள் மீது மோதி விபத்தானது.
இதில் இளம்பெண் மஞ்சு மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரது தாத்தா பொன்னுசாமியின் 2 கால்களும் துண்டாகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
இதுப்பற்றி தெரிய வந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தில் பலியான இளம்பெண் மஞ்சுவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் டிப்பர் லாரியை ஓட்டி வந்த பவானி ஜம்பை வைரமங்கலம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் குமார் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அந்த பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய லேத் பட்டறைக்கு நேற்று முன்தினம் மதியம் ஆண் மற்றும் பெண் என 2 பேர் வந்து உள்ளனர். அப்போது யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த 2 பேரும் திடீெரன பட்டறைக்குள் புகுந்து 2 எந்திரங்களை தூக்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றனர். அப்போது அங்கு பட்டறையில் வேலைக்கு பார்க்கும் தொழிலாளி ஒருவர் தற்செயலாக வந்து உள்ளார். பட்டறைக்குள் புகுந்து எந்திரங்களை 2 பேர் தூக்கி கொண்டு சென்றதை கண்டதும் திருடன், திருடன், என சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 43), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பரமேஸ்வரி (35) என்பதும், அவர்கள் 2 பேரும் மகேந்திரனின் லேத் பட்டறையில் வேலை பார்த்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து நின்றுவிட்டதும், நேற்று முன்தினம் பட்டறைக்கு வந்த அவர்கள் அங்கிருந்த 2 எந்திரங்களை திருடியதும்,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் பரமேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது72). நெசவாளர். இவரது மனைவி ரத்னா (70). இவர்களுக்கு 3 மகள்கள் பிறந்தனர். அவர்கள் 3 பேரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.
இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தங்களை கவனிக்க ஆளில்லை என்ற கவலையிலும் இருந்து வந்தனர். இன்று நீண்ட நேரமாகியும் கிருஷ்ணராஜ் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் பதில் எதுவும் வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது கிருஷ்ணராஜ், ரத்னா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வயது முதிர்வு காரணமாகவும், தங்களை கவனிக்க ஆளில்லை என்ற கவலையிலும் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
கொடிவேரி அணைக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
அவர்கள் கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு அங்கே தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிடுவார்கள். மேலும் அங்கு விற்கப்படும் மீன்களையும் சுவைத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொடிவேரி அணையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் வரும் 2-ந் தேதி வரை 10 நாட்கள் அணை மூடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் அணையில் குளிக்கவும், பரிசலில் சுற்றி பார்க்கவும் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






