search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2,152 பேருக்கு அபராதம் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 152 பேருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கலெக்டர் கதிரவன் மாவட்டம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகிறார். மேலும் சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் தினந்தோறும் முக கவசம் அணியாமல் வெளியேவரும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 152 பேருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×