search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மேற்கு தொகுதி
    X
    ஈரோடு மேற்கு தொகுதி

    அதிமுக- திமுக நேரடி போட்டி: மீண்டும் கே.வி. ராமலிங்கம்- முத்துசாமி மோதும் ஈரோடு மேற்கு தொகுதி கண்ணோட்டம்

    இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள கே.வி. ராமலிங்கம் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து கடந்த முறை தோல்வியடந்த சு.முத்துசாமி போட்டியிடுகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி ஈரோடு மேற்கு தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளது. தொகுதி வாக்காளர்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவு தொழிலை 50 சதவீதம் பேரும் சார்ந்துள்ளனர்.

    பெருந்துறை வட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள் அடங்கியுள்ளன.

    ஈரோடு மேற்கு தொகுதி
    அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்- திமுக வேட்பாளர் முத்துசாமி

    ஈரோடு வட்டத்தில் கரைஎல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல்திண்டல், கீழ்திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மேட்டுக்கடை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர்புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் போன்ற கிராமங்களும் அடங்கியுள்ளன.

    ஈரோடு மேற்கு தொகுதியில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுத சாமி கோவில் உள்ளது. ஈரோடு மேற்கு தொகுதியில் அதிகளவில் கல்லூரிகள் உள்ளன. ஈரோடு மேற்கு தொகுதியில் ஈரோடு மாநகர் பகுதி, நசியனூர், சித்தோடு, சென்னிமலை போன்ற ஊர்களின் சில பகுதிகள் அடங்கி உள்ளது இந்த தொகுதியின் தனி சிறப்பாகும். 

    ஈரோடு மேற்கு தொகுதி

    ஈரோட்டின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இந்த தொகுதியில்தான் உள்ளது. 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் வெளிநாடுகளில் இருந்து 109 அரிய வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பிலிக்கன் பறவைகள் அதிகளவில் வருவது தனி சிறப்பாகும்.

    2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு மேற்கு தொகுதி உருவானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி ஆகும். இங்கு ஆண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 913 பேரும், பெண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 373 பேரும், மூன்றாம் பாலினம் 30 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 357 வாக்காளர்கள் உள்ளனர்.

    2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.வி. இராமலிங்கம் வெற்றிபெற்றார். 2011-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தற்போதைய த.மா.கா. மாநில இளைஞரணி தலைவராக உள்ள எம்.யுவராஜா, 2016-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் கே.வி. இராமலிங்கத்திடம் தோல்வியடைந்தனர். 

    ஈரோடு மேற்கு தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், முதலியார், வேட்டுவ கவுண்டர்கள், வன்னியர்கள், பட்டியல் வகுப்பினர், நாடார், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் கனிசமாக உள்ளனர்.

    கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்

    மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

    ஈரோடு மேற்கு தொகுதி

    ழுமையாக நிறைவேற்றப்படாத நிறைவு பெறாத சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் போன்றவை வாக்காளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்பட வேண்டும். சாய, தோல் கழிவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோடு&சத்தி சாலையில் சித்தோடு முதல் ஈரோடு பேருந்து நிலையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

    விசைத்தறி தொழிலின் முக்கிய பிரச்னையான நூல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் போன்றவை இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×