என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    கோபி தொகுதி
    X
    கோபி தொகுதி

    கல்வி அமைச்சரை ஏழு முறை சட்டசபை உறுப்பினராக்கிய கோபி தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக சார்பில் செங்கோட்டையனை ஏழு முறை சட்டசபை உறுப்பினராக்கிய கோபி தொகுதி கண்ணோட்டம்....
    நெல், கரும்பு, வாழை என பணப்பயிர்கள் விளைவதால் கோபிசெட்டிபாளையம் வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, கீழ் பவானி வாய்க்காலின் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    கோபி தொகுதியில் சுற்றுலா தலமான கொடிவேரி அணை, குண்டேரிபள்ளம் அணை, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சமலை பவளமலை முருகன் கோவில் ஆகியவை உள்ளன.

    கோபி தொகுதி

    கோபிசெட்டிபாளையம் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 502 . இதில் ஆண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 945 பேர். பெண்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 551 பேர். மூன்றாம் பாலினத்தினர் 6 பேர் உள்ளனர்.

    கோபி தொகுதி

    கோபி செட்டி பாளையம் தொகுதியில் கோபிநகராட்சி, பெரிய கொடிவேரி, லக்கம்பட்டி, காசி பாளையம், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர் போன்ற பேரூராட்சிகளும், புள்ளப்ப நாயக்கன்பாளையம், அரக்கன் கோட்டை, கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம் பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன் பாளையம், கடத்தூர், சுண்டக்காம் பாளையம், கூடக்கரை, ஆண்டி பாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தாழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம் பாளையம், வேம்மாண்டாம் பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோவில், காட செல்லி பாளையம், சின்னாரி பாளையம், சாந்தி பாளையம், அவலம் பாளையம் பாரியூர், வெள்ளாள பாளையம், நஞ்சை கோபி, குள்ளம் பாளையம் நாதி பாளையம், மொடச்சூர், நாகதேவன் பாளையம்மற்றும் நிச்சாம் பாளையம் கிராமங்கள் உள்ளன.

    கோபி தொகுதி

    இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள், வேட்டுவக்கவுண்டர்கள், நாடார்கள், பெரும்பான்மையாக உள்ளனர். இது தவிர ஆதிதிராவிடர் சமூகத்தினரும் கணிசமாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் கணிசமாக உள்ளனர். கோபி சட்டமன்றத்திற்குபட்ட கோபி ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளும், 4 பேரூராட்சிகளும் கோபி நகராட்சியும் உள்ளன.

    கோபி தொகுதியில் இதுவரை 15 சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும், 9 முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் செங்கோட்டையன் மட்டும் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோபி தொகுதி

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலையே செய்து வருகிறார்கள். நகராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கரட்டூர் பகுதியில் 1.89 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 டன் குப்பைகள் சேகரமாகிறது.

    இந்த குப்பை கிடங்கு பிரச்சனையை தீர்க்கவும், தமிழக அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியது. இயந்திரங்கள் மூலம் ஓரளவு குப்பைகளை உரமாகத் தயாரித்து விவசாயிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கியது.

    ஆரம்பத்தில் இங்கு குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் பேக்டரிக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் சிமெண்ட் கம்பெனி நிர்வாகமும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்க மறுத்ததால், தொடந்து பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவை தவிர கோபிசெட்டிபாளையம் நகரில் கீரிப்பள்ளம் ஓடை தீராத பிரச்சனையாக உள்ளது. மொடச்சூர் பகுதியில் துவங்கும் இந்த கீரிப்பள்ளம் ஓடை ஆரம்ப காலத்தில் நல்ல தெளிவான நீர்மட்டுமே அதில் சென்றது. ஆனால், காலப்போக்கில் கோபி நகரின் சாக்கடை கழிவுகள் அதில் சேர்ந்து தற்போது அசுத்த நீர் ஓடையாகவும், கழிவுநீர் ஓடையாகவும் மாறி உள்ளது.

    இதனால் தற்போது கீரிப்பள்ளம் ஓடையின் கழிவுநீர் பதி என்ற இடத்தில் தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது. இதனால், வாய்க்கால் தண்ணீர் அசுத்தம் அடைகிறது. மேலும், கீரிப்பள்ளம் ஓடை தண்ணீர் வாய்க்காலில் நேரடியாக கலப்பதற்கு பதில் ஓடை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விட்டால் விவசாய விளை நிலங்கள் பாதிப்படைவது தவிர்க்கப்படும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது கீரிப்பள்ள ஓடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஈரோடு முதல் கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரை 4 வழிசாலை அமைக்கும் பணிகள் ஆய்வுப்பணி செய்த நிலையிலேயே உள்ளது. 4 வழி சாலை அமைக்க வேண்டும். மற்றும் கோபி செட்டிபாளையம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. 
    இவை தவிர கோபி தொகுதியில் பட்டு வளர்ப்பு தொழில் நடைபெற்று வந்தது.

    கோபி தொகுதி

    தற்போது அதற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும், பட்டுகூடுகளை விற்பனை செய்ய அருகில் மையம் இல்லாத காரணத்தினாலும் பல விவசாயிகள் பட்டுகூடு உற்பத்தி செய்யும் தொழிலை கைவிட்டு விட்டனர். மேலும், கோபி செட்டி பாளையம் தொகுதியைப் பொறுத்த வரை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களே பிரதான தொழிலாக உள்ளது.

    தற்போது திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கோபி, நம்பியூர் பகுதிகளில் இடங்களை வாங்கி இங்கேயே ரெடிமேட் ஆடைகள் என்று அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க தேவையான பல்வேறு வகையான தையல் இயந்திரங்களை வாங்கி போட்டு, தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து ரெடிமேட் ஆடைகளை வாடிக்கையாளர்களின் விருபத்திற்கு ஏற்ப தயாரித்து, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

    தற்போது கோபி அருகே தாழ்குனி என்ற இடத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்க ஒரு டெக்ஸ்டைல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் போது 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மேலும், பயிற்சி பெற்ற ரெடிமேட் ஆயத்தஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள்.

    தேர்தல் வெற்றி

    கோபி தொகுதி இதுவரை
    கோபி தொகுதி இதுவரை

    1952- நல்லாகவுண்டர் (காங்கிரஸ்)
    1957- பி.ஜி.கருதிருமண் (காங்கிரஸ்)
    1962- முத்துவேலப்பகவுண்டர் (காங்கிரஸ்)
    1967- கே.எம்.ராமசாமிகவுண்டர் (சுதந்திரா)
    1971- பழனியப்பன் (தி.மு.க.)
    1977- ராமசாமி (அ.தி.மு.க.)
    1980- கே.ஏ.செங்கோட்டையன்(அ.தி.மு.க.)
    1984- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1989- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1991- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    1996- ஜி.பி.வெங்கிடு (தி.மு.க.)
    2001- ரமணீதரன் (அ.தி.மு.க.)
    2006- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.) 
    2011- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    2016- கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
    Next Story
    ×