search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி
    X
    ஈரோடு கிழக்கு தொகுதி

    ஈரோடு கிழக்கு தொகுதி கண்ணோட்டம்

    தொகுதி சீரமைப்பிற்குப்பின் 2011-ல் உதயமான ஈரோடு கிழக்கு தொகுதி குறித்து ஓர் பார்வை...
    ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். துணிகளுக்கு சாயமிடுதல், ப்ளிச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500&க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

    இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி

    இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியான ரகங்களில் மிகக்குறைந்த விலையில் ஜவுளிகள் கிடைப்பதால் ஈரோடு மற்றும் பள்ளிப்பாளையம், சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்வார்கள்.

    2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டப்பேரவை தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.

    தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றுள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி. சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் கே.எஸ். தென்னரசும் வெற்றிபெற்றனர்.

    1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம், பெரிய அக்ரஹாரம், பெரியவலசு, சம்பத்நகர் போன்றவை முக்கிய பகுதிகளாக உள்ளது. மேலும் ஈரோடு பஸ் நிலையம் ரெயில் நிலையம் இந்த தொகுதியின் தனி அடையாளமாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 987, மூன்றாம் பாலினம் 15 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், வேட்டுவக-வுண்டர், முதலியார், நாடார், தேவர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 30 சதவீதம் என பலர் உள்ளனர்.

    கோரிக்கைகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்படும் சாய மற்றும் தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை அளித்து வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் உள்பட பல பிரச்சனைகள் உள்ளது.
    மகளிர் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×