search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Concrete floor"

    • பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும்.
    • கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராம ஊராட்சி வரை உள்ளகீழ்பவானி பாசன கால்வாயில் ரூ.900 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் கான்கிரீட் தளம் அமைத்தால் கால்வாயின் இருபுறமும் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, பறவைகள் அழிந்து விடும். விவசாய பணிகளில் தொய்வு ஏற்படும்.

    எனவே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை எண் 276-ஐ உடனடியாக ரத்து செய்ய கோரியும், கால்வாயை முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்பவானி பாசன கடைமடை பகுதியான முத்தூர் - மங்கலப்பட்டி, பூமாண்டன்வலசு கிராமங்களில் விவசாயிகள் பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஏராளமான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    • பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும்.
    • பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும்.

    காங்கயம் :

    கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் - முத்தூர் சாலையில் உள்ள லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வெள்ளியம்பாளையம் குழந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்பவானி பெயரல்ல- எங்கள் உயிர், கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் தோல்வி கண்ட கான்கிரீட் திட்டத்தை கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புகுத்த கூடாது, கீழ்பவானி பாசன மண் கால்வாய் மழைநீர் அறுவடை திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்ட திட்டம் ஆகும்.

    இதனால் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இந்த திட்டங்கள் பாழ் பட்டு போகும். மேலும் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.

    மேலும் பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும். இதன்படி பழைய பாசனங்களுக்கு 8 டி.எம்.சி.தண்ணீரும், கீழ்பவானி பாசனத்திற்கு 28 டி.எம்.சி. தண்ணீரும் என ஒரே விகிதாச்சார அடிப்படையில் நீர் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். மேலும் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்தாலும், கூடினாலும் இதே விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கோடை சாகுபடி மற்றும் குறுவை பருவத்திற்கும் தண்ணீர் திறக்க கூடாது. நஞ்சை சம்பா சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.
    • கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன. மண்ணாலான இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு 70 ஆண்டுகளாகின்றன.எனவே வாய்க்கால் கரைகள் பலவீனமடைந்து அதிக நீர் வீணாவதாக கூறி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் சீரமைப்பு திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டனர்.

    மண்ணாலான வாய்க்காலில் கான்கிரீட் கரை, தளம் அமைக்காவிட்டால் வாய்க்காலின் தன்மை கேள்விக்குறியாகும் என பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினர் , ஒரு பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் கான்கிரீட் தளம், கரை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காது. கான்கிரீட் தளம் கரைக்காக மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் என கூறுகின்றனர்.

    முழு அளவில் நீர் திறந்தும் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. அடிக்கடி கரைகள் உடைப்பு எடுப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை எனக்கூறி, கான்கிரீட் திட்டப்பணியை துவங்க நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையுடன் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்காக அ.தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யாவிட்டால், வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து கோவை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் முத்துச்சாமியிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.விவசாயிகள் கூறுகையில், மண் கரையை மண்ணாகவே உயர்த்துவதில், எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை காக்க தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து முதல்வர் அரசு தலைமை செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.

    ×