search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் பாராளுமன்ற தேர்தலை  புறக்கணிப்போம் - விவசாயிகள் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் - விவசாயிகள் அறிவிப்பு

    • கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.
    • கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன. மண்ணாலான இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு 70 ஆண்டுகளாகின்றன.எனவே வாய்க்கால் கரைகள் பலவீனமடைந்து அதிக நீர் வீணாவதாக கூறி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் சீரமைப்பு திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டனர்.

    மண்ணாலான வாய்க்காலில் கான்கிரீட் கரை, தளம் அமைக்காவிட்டால் வாய்க்காலின் தன்மை கேள்விக்குறியாகும் என பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினர் , ஒரு பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் கான்கிரீட் தளம், கரை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காது. கான்கிரீட் தளம் கரைக்காக மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் என கூறுகின்றனர்.

    முழு அளவில் நீர் திறந்தும் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. அடிக்கடி கரைகள் உடைப்பு எடுப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை எனக்கூறி, கான்கிரீட் திட்டப்பணியை துவங்க நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையுடன் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்காக அ.தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யாவிட்டால், வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து கோவை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் முத்துச்சாமியிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.விவசாயிகள் கூறுகையில், மண் கரையை மண்ணாகவே உயர்த்துவதில், எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை காக்க தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து முதல்வர் அரசு தலைமை செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.

    Next Story
    ×