என் மலர்
ஈரோடு
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வந்தது.
இதன் காரணமாக பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து 104 அடியில் இருந்து வந்தது. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103.95 அடியாக குறைந்தது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணை 103 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு 409 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 20 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் துணிபைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
இதையொட்டி பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் வீடுகளிலும் மேலும் பலர் குழுவாக சேர்ந்து பைகளை தயாரித்து வருகின்றனர்.
பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பைகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு காளைமாடு சிலை அருகே மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் நுழைவு வாயில் அருகே டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு டிரான்ஸ்பாரம் அமைந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் சார்பில் மின் வாரியத்திடமும், மாநகராட்சியிடமும் மனு அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று வழக்கம் போல் டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி அருகே டிரான்ஸ்பாரம் அமைந்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ டிரான்ஸ்பாரம் வைக்க வேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கை குறித்து உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (59). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் செயல்படும் ஒரு நூல் மில்லில் பங்குதாரராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவினாசியில் உள்ள நூல் மில் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தியாகராஜனை பங்குதாரர்கள் அழைத்து உள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு மில்லில் இருந்து தியாகராஜன் காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு என்ற பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் தனது காரை நிறுத்தி விட்டு திடீரென வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மில்லுக்கு சென்ற தியாகராஜன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது போன் எடுக்கவில்லை. இதையடுத்து மில்லுக்கும் போன் செய்து கேட்டுள்ளனர். அப்போது தியாகராஜன் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் இன்று காலை சிறுவலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தியாகராஜன் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி காசிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஸ்வேகா (வயது 17) என்ற மகளும், 7-வது படிக்கும் அச்சுதன் என்ற மகனும் உள்ளனர்.
ஸ்வேதா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து உள்ளார். மேலும் தனது 14-வது வயது முதல் டெக்ஸ் டெரிட்ரி குளோபல் என்ற நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிறுவனம் கிராமப்புறம் அல்லது தொலை தூர நகரங்களை சேர்ந்த மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஸ்வேகா அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஸ்வேகா கூறுகையில், ‘ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்தேன். பிளஸ்-1 சேரும் முன்பே இந்த அமைப்பில் சேர்ந்தேன். ஆன்லைனில் உலகளாவிய தேர்வு நடைபெற்றது. இதில் நான் சிறப்பிடம் பெற்றதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது’ என்றார். கிராமப்புறத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றதற்காக அவரது உறவினர்களும், கிராம மக்களும் ஸ்வேகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஆனந்தவள்ளி. இவர் சம்பவத்தன்று தனது பணியை முடித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு மொபட்டில் சென்றார்.
அப்போது பவானி காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் மேல் மூதாட்டி ஒருவர் ஏறி தற்கொலை செய்து கொள்வதற்காக காவிரி ஆற்றில் குதிக்க முயன்றார்.
இதைப்பார்த்து பெண் காவலர் ஆனந்தவள்ளி தனது மொபட்டை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.
தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் பெண் போலீஸ் ஆனந்தவள்ளி விசாரித்தார். அப்போது அந்த மூதாட்டி தனது பெயர் செல்லம்மாள் (76) என்றும் பவானி அருகே உள்ள வரதநல்லூர் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்ததாகவும், கணவர் தன்னை விட்டுச் சென்று விட்டார். மேலும் குழந்தைகள் யாரும் இல்லாததால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என கூறினார்.
இதையடுத்து பெண் போலீஸ் ஆனந்தவள்ளி மூதாட்டி செல்லம்மாளை குமாரபாளையத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்து சென்று சேர்த்து விட்டார். மேலும் அங்கிருந்த மூதாட்டிகளுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளை செய்தார். பெண் போலீசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு கிராமடை சாந்தான்கருக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சொந்தமாக நூல் குடோன் வைத்துள்ளார். குடோனின் மேல் பகுதியில் கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் குடோன் செயல்பட்டு வருகிறது.
துண்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கண்ணனின் நூல் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் குடோனில் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் கண்ணன் வீட்டில் தீ பரவவில்லை.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 69 இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஈரோட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு இந்த சோதனை நடந்து வருகிறது.
இதேபோல் வில்லரசம்பட்டியில் உள்ள செந்தில்நாதன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திண்டல் சத்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் உறவினர் ஒருவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 குழுவாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தங்கமணியின் உறவினர்கள் வீட்டில் மீண்டும் சோதனை நடந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தயிர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (45). விவசாயி. இவரது மனைவி ஷோபனா (41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஷோபனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் வேலுசாமி வீட்டில் இருந்த அரிவாளால் அவரை தலை மற்றும் வலது கை ஆகிய இடங்களில் வெட்டினார்.
இதில் ஷோபனாவின் கை விரல் துண்டானது. மேலும் அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
இதைபார்த்த வேலுசாமி வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஷோபனாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேலுசாமியை தேடி வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம்-பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆறு பாலம் உள்ளது.
இங்கு 2 பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம். மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சமீபகாலமாக காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் கருங்கல்பாளையம் காவிரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அந்த பெண் காவிரி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார்.
அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தனபால் (42), அவரது மனைவி வடிவரசி (36) ஆகியோர் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை தங்களது பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி (36) என்றும் இவரது கணவர் சங்கர் என்றும் தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக சுமதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சுமதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சுமதி கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமதியை காப்பாற்றிய தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினர்.
ஈரோடு:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வகை தொற்று சாதாரண தொற்றை விட வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த வகை தொற்று உலகில் 90 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இந்தியாவிலும் காலெடுத்து வைத்து பல்வேறு மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பானது 100 பேரை தாண்டிவிட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதனிடையே பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இதுவரை 183 பேர் ஈரோடு வந்துள்ளனர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 65 பேருக்கு ஒரு வார காலம் முடிவடைந்ததால் அவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. பரிசோதனை செய்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் 2-வது கட்ட பரிசோதனைக்கு முன்னர் வெளியே நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 65 பேருக்கு ஒருவாரம் முடிவடைந்ததால் அவர்களுக்கு மீண்டும் 2-வது கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 எபர்களில் ஒருவர் சிங்கப்பூரில் இருந்தும், மற்றொருவர் ஸ்பெயின் நாட்டில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருவருக்கும் ஒகைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அவர்களது சளி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு முதல் கட்ட பரிசோதனை முடிந்து, அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அடுத்த கட்ட பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






