என் மலர்tooltip icon

    ஈரோடு

    அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சரோனா (வயது 35). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இடையன்கோடு பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருடைய மகன் அனூப் (36) என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அனூப் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திவ்யா சரோனாவின் திருமணத்தின் போது 117 பவுன் நகை, ரூ.32 லட்சத்தை அவரது பெற்றோர் சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அனூப், மனைவியிடம் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் டாக்டர் அனூப்புக்கும், வேறொரு பெண் டாக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், திவ்யா சரோனாவுக்கு வழங்கப்பட்ட 117 பவுன் நகை மற்றும் ரூ.32 லட்சத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் டாக்டர் திவ்யா சரோனா ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    பின்னர் இது தொடர்பாக ஈரோடு கூடுதல் மகளிர் விரைவு கோர்ட் உத்தரவின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதால் டாக்டர் திவ்யா சரோனா தரப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டர் திவ்யா சரோனாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலாவதி, டாக்டர் அனூப் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    அதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டர் அனூப்பை போலீசார் நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் அனூப் தனக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் தனக்கு ஆக்சிஜன் பொருத்த வேண்டும் என்றும் கூறினார்.

    பின்னர் சிறிது நேரத்தில் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் எனவே அதற்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் மருத்துமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தனர். இருந்தாலும் அவர் தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் அவர் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்தனர். அதன் பின்னர் டாக்டர் அனூப்புக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே முன் விரோத தகராறில் டெய்லர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. முன்னாள் கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50). டெய்லர். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    தி.மு.க. வார்டு செயலாளராக இருந்த வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்து விட்டார். இதனால் வடிவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தம்பி என்கிற ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு நாகராஜபுரம் பகுதியில் உள்ள தலவுமலை விநாயகர் கோவிலில் வடிவேல் மற்றும் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் வடிவேலுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது திடீரென அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே கிடந்த கல்லால் வடிவேலை சரமாரியாக தாக்கி உள்ளார்.

    இதில் வடிவேல் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வீட்டிற்கு சென்று வடிவேல் இரவு படுத்து தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது வடிவேல் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வடிவேலின் குடும்பத்தினர் அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டரில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக இந்த ஆண்டு 209 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம் 1 கோடியே 80 லட்சத்து 41 ஆயிரத்து 698 பேருக்கு இலவச சேலையும், 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரத்து, 279 பேருக்கு வேட்டி உற்பத்தியாகிறது. ஒரு வேட்டி மூன்றே முக்கால் மீட்டர், ஒரு சேலை ஐந்தரை மீட்டர் என்ற நீளத்தில் உற்பத்தியாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திற்கு 1.32 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 48 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் 6 ஆயிரத்து 974 விசைத்தறிகள் மூலம் 69 லட்சத்து 74 ஆயிரத்து 170 வேட்டிகள், 8,320 விசைத்தறிகள் மூலம் 62 லட்சத்து 39 ஆயிரத்து 673 இலவச சேலைகள் உற்பத்தி ஆகி வருகிறது.

    இதுவரை 80 சதவீத வேட்டி உற்பத்தி செய்யப்பட்டு அரசு வழிகாட்டுதல்படி பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேப்போல் இலவச சேலை உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்காக அந்தந்த சொசைட்டிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பெண்களை கவரும் வகையில் பார்டருடன் கூடிய காட்டன் மிக்ஸ்டு, பர்பிள் நிறம், ஆரஞ்சு, ரோஸ், பச்சை ஆகிய 4 நிறங்களில் சேலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    தினமும் உற்பத்தியாகும் சேலைகள் டேமேஜ் சரி பார்த்து மடித்து எண்ணிக்கைப்படி அரசு பட்டியல் வழங்கிய ஊர்களுக்கு அந்தந்த சொசைட்டி மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டரில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. மீதி உள்ள 20 சதவீத வேட்டி, சேலை தயாரிக்கும் பணியும் விரைந்து தயாரித்து இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வேட்டி சேலையும் தரமான முறையில் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    போர்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சென்னிமலை :

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை போர்வைகள் மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் போர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்தியாவின் 60 சதவீத போர்வை தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத் தறியில் உற்பத்தியாகும் போர்வைகள் தான் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும் அடைப்புதறி என்று சொல்லக்கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர்.

    அடைப்பு தறி, விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு போர்வைகளை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். இங்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் போர்வைகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் போர்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ரூ.2 கோடி போர்வை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சென்னிமலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஜக்காடு போர்வை ஒன்றுக்கு ரூ.4 கூலி உயர்வும், 10-ம் நெம்பர் நூலை பயன்படுத்தி தயாராகும் போர்வை ஒன்றுக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றாற் போல் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது.

    இதனை அடுத்து 7 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் சென்னிமலை பகுதியில் வழக்கம்போல் விசைத்தறிகள் இயங்கும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து இன்று வழக்கம் போல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியது.இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ஈரோட்டில் நடைபயிற்சி சென்ற ஜவுளிக்கடை அதிபர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்ததும் விடுவிக்கப்பட்டார்
    ஈரோடு: 

    ஈரோடு கருங்கல் பாளையம், குயிலாந் தோப்பு, மரப்பாலம் 3-வது வீதியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவசுப்பிரமணியம் (57). இவர் ஈரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி காலையில் சிவசுப்பிர மணியம் ஈரோடு வ.உ.சி மைதானத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் சிவசுப்பிரமணியத்தை வழிமறித்து வலுக்கட்டாயமாக அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

    காரிலேயே பல்வேறு இடங்களுக்கு சுற்றிய அக்கும்பல் ரூ.15 லட்சம் பணம் கேட்டு சிவசுப்ரமணியத்தை மிரட்டி உள்ளனர்.  
    பணத்தை கொடுக்காவிட்டால் கொன்று ஆற்றில் வீசிவிடுவோம் என்று மிரட்டியதையடுத்து சிவசுப்பிரமணியம் தனது நண்பர் கண்ணன் என்பவரை தொடர்பு கொண்டு தான் கடத்தப்பட்ட விபரத்தை கூறியதோடு, ரூ.15 லட்சத்தை தயார் செய்து அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே கொண்டு வரும்படி கேட்டுள்ளார்.

    இதையடுத்து கண்ணன் பணத்தை தயார் செய்து கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சென்று  அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கடத்தல் கும்பல் பெருந்துறை பஸ் நிலையம் அருகில் சிவசுப்பிரமணியத்தை விடுவித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்த சிவசுப்பிரமணியம் பயம் காரணமாக கடத்தல் குறித்து போலீசில் புகார் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த கடத்தல் கும்பல் மீண்டும் நேற்று சிவசுப்பிரமணயத்தை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டதாக கூறப்படுகின்றது. 

    இதையடுத்து சிவசுப்பிரமணியம் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் கடத்தப்பட்ட விவரங்கள் குறித்து புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். 

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், தர்மராஜ், ராஜன், பிரபு மற்றும் 3 பேர் என தெரியவந்தது. 

    மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த  7 பேர்  தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மளிகை வியாபாி வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள சவுண்டப்பூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 66). இவர் அந்த பகுதியில் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மளிகை கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு உங்கள் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே கடையில் சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.

    இதையடுத்து அவர்கள் மளிகை கடையில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது பீரோவில் சோதனை செய்து அதில் இருந்த துணிகளை களைத்து பார்த்தனர். ஆனால் அங்கும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த 2 பேர் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் சரஸ்வதியின் மகள் தேவகி தாய் வீட்டுக்கு வந்து தான் கொடுத்து வைத்திருந்த  4 பவுன் மதிப்புள்ள தங்க நாணயங்களை தருமாறு கேட்டார். இதையடுத்து சரஸ்வதி பீரோவை திறந்து பார்த்தார்.

    அப்போது அதில் வைத்து இருந்த 4 தங்க நாணயங்கள் மாயமானதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் மற்ற இடங்களில் தேடி பார்த்தும் தங்க நாணயங்கள் கிடைக்கவில்லை. வீட்டில் சோதனை செய்ய வந்த 2 மர்ம நபர்கள் தங்க நாணயங்களை திருடி சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

    இதுகுறித்து சரஸ்வதி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் 2 பேர் எங்கள் மளிகை கடைக்கு வந்தனர். அவர்கள் தங்களை அதிகாரிகள் என கூறி கொண்டு சோதனை செய்ய வேண்டும் என கூறி வீடு மற்றும் மளிகை கடையில் சோதனை செய்து விட்டு சென்றனர். இந்த நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நாணயங்கள் காணவில்லை.

    எனவே அவர்கள் அந்த தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்று இருக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்க நாணயங்களை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் கூத்தம்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லூர் கிராமத்தின் அருகே உள்ள வனத்தில் 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பரப்பில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் பல அரிய தொல்லியல் சின்னங்கள் பரவி கிடக்கின்றன.

    பர்கூர், கடம்பூர் தாளவாடி, கேர்மேளம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வரலாற்றிற்கு முந்தைய கால சின்னங்கள், பாறை ஓவியங்கள், தொன்மைத் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. அதிலும் குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் பொதுயுகம் ஐந்து, 6-ம் நூற்றாண்டு எழுத்தமைவு கொண்ட நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கூத்தம்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லூர் கிராமத்தின் அருகே உள்ள வனத்தில் 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாக்கை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சித்தலிங்கன், சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் நெல்லூர், கடம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடுகல் 86 செ.மீ உயரமும் 75 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. அக்கல்வெட்டின் எழுத்துக்கள் முழுமையாக படித்தறியக் கூடிய வகையில் இல்லை. எனினும் சில வார்த்தைகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய அளவில் உள்ளன. ஊர் பகுதியில் நடைபெற்ற கால்நடை கவர்தல் பூசலில் அவற்றை மீட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

    வீரன் தனது வலது கையில் குறுவாள் கொண்டு, இடது கையில் வில்லம்பு ஏந்திய நிலையில் பகைவர்களை தீரத்துடன் எதிர்கொள்ளும் காட்சி சிற்பமைப்பில் உள்ளது. இந்த வகையான சிற்பமைப்பு தமிழகத்திற்கே உரிய அமைப்பாகும். குறிப்பாக பல்லவர் கால நடுகல் சிற்ப விவரிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை அதிகமாக காணலாம்.

    இதுகுறித்து யாக்கை தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பகுதியானாலும் நடுகல் மரபில் பண்பாட்டு கலப்பு இல்லாமல் காணப்படுவதும் தமிழ் எழுத்து வடிவத்தை பின்பற்றி இருப்பதும், நடுகல் சிற்பங்கள் வடிக்கும் தொழிற்முறை கலைஞர்கள் பல்லவர் நாட்டிலிருந்து சென்றவராக இருக்கலாம் என்றும் கருத தோன்றுகிறது.

    மேற்கண்ட நடுகல் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே நடுகற்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் 12-ம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவையாக காணப்படுகின்றன.

    ஈரோடு மாவட்டத்தின் வனப்பகுதிகளாக இன்று நாம் அறியப்படும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் தடயங்கள் அனைத்தும் காலங்காலமாக மக்கள் புழக்கத்தில் இந்த பகுதிகள் இருந்துள்ளதை காட்டுகின்றன.

    மேலும் பர்கூர், தாமரைகரை, ஈரெட்டி மலை வழியாக இன்று நடைமுறையில் இருக்கும் வழிப்பாதையில் 1,500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே முக்கிய வணிகப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றுள்ளது என்பதை வலுப்படுத்தும் சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக மஞ்சப்பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளி ட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு கொரோனா தாக்கம் காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு என்ற பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகரித்தது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 20 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப் பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

    இதையொட்டி பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக மஞ்சப்பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளி ட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் வீடுகளிலும் மேலும் பலர் குழுவாக சேர்ந்து பைகளை தயாரித்து வருகின்றனர்.

    பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்து உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பைகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து மஞ்சள் பை தயாரிக்கும் ஆர்டர் பெற்றிருக்கும் நாகராஜ் என்பவர் கூறும் போது:-

    தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளது. இந்த மஞ்சள் பையை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 80 லட்சம் மஞ்சள் பைகள் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்து உள்ளது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. 20 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பைகள் கனமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மஞ்சள் பைகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்கள் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிவகாசியை சேர்ந்த அபினேஷ் (19), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தருண் (17) ஆகியோர் மூன்றாம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தனர்.

    அபினேஷ் தனியாக அறை எடுத்து கல்லூரிக்குச் சென்று வந்தார். மாணவர் தருண் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஈரோடு பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் மீண்டும் அவர்கள் பெருந்துறை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை அபினேஷ் ஓட்டி சென்றார். தருண் பின்னால் அமர்ந்து இருந்தார். இரவு 10 மணி அளவில் இவர்கள் திண்டல் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் அபினேஷ் உடல் நசுங்கி பலியானார். தருண் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஈரோடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த தருணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தருணும் சிறிது நேரத்தில் பலியானார்.

    விபத்தில் பலியான 2 கல்லூரி மாணவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
    விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி பெட்ஷீட்கள், மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்திகளில் சிறந்து விளங்குகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்தியாவின் 60 சதவீத பெட்ஷீட் தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத்தறிகளில் உற்பத்தியாகும் பெட்ஷீட்கள் தான் பூர்த்தி செய்கிறது.

    இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும், அடைப்புதறி என்று சொல்ல கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர். அடைப்பு தறி விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு பெட்ஷீட்களை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.

    இதில் 2-க்கு 17 நூல் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் ஜக்காடு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்து விட்டனர்.

    ஆனால் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து 10-ம் நெம்பர் கலர் நூல் உற்பத்தி செய்து அதில் இருந்து 10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

    பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு கூலி மிக குறைவாக கொடுப்பதால் மிகவும் தொழில் நசிந்து வருகிறது. அதனால் தற்போது வழங்கும் கூலியில் 20 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து கடந்த 5 நாட்களாக அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6-வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது.

    அடைப்பு விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக தற்போது 2 க்கு 17 நூல் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 3 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    6 நாட்களாக போராட்டம் தொடந்து வரும் சூழ்நிலையில், ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று சென்னிமலை பகுதியில் செயல்பட கூடிய பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனமான பூம்புகார் டெக்ஸ், ஆந்திரா டெக்ஸ், அஜாம் டெக்ஸ், மேகலா டெக்ஸ், சேகர் டெக்ஸ், நந்தி டெக்ஸ், ஆகிய 6 ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் பெட்ஷீட் தேவை அதிகரித்துள்ள நிலையில் விசைத்தறிகள் போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் எலிக்கு வைத்த கூண்டில் அரிய வகை மரநாய் சிக்கியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து ஊருக்குள் சென்று விவசாயிகள் பயிரிட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் சவுந்தராஜன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.

    மேலும் இவரது நெல் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்து வந்தது. எலிகள் வயல் வெளியில் புகுந்து நெற்பயிர்களைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் எலிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற எலியை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தார். அந்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியது ஏராளமான மக்கள் மரநாயை பார்த்தனர். இதுகுறித்து சவுந்தரராஜன் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் மரநாய் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 
    ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டுமான பொருட்கள் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் 4 கடைகள் வரிசையாக உள்ளன.

    இந்த கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் பொருட்கள், குளியலறை-கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து கரும்புகை வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். மேலும், ஈரோடு டவுன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். இந்த பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    ×