என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலி

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிவகாசியை சேர்ந்த அபினேஷ் (19), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தருண் (17) ஆகியோர் மூன்றாம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தனர்.

    அபினேஷ் தனியாக அறை எடுத்து கல்லூரிக்குச் சென்று வந்தார். மாணவர் தருண் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஈரோடு பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் மீண்டும் அவர்கள் பெருந்துறை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை அபினேஷ் ஓட்டி சென்றார். தருண் பின்னால் அமர்ந்து இருந்தார். இரவு 10 மணி அளவில் இவர்கள் திண்டல் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் அபினேஷ் உடல் நசுங்கி பலியானார். தருண் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஈரோடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த தருணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தருணும் சிறிது நேரத்தில் பலியானார்.

    விபத்தில் பலியான 2 கல்லூரி மாணவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×