என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி
    X
    விசைத்தறி

    7 நாள் போராட்டம் வாபஸ்- விசைத்தறிகள் இன்று முதல் மீண்டும் ஓட தொடங்கியது

    போர்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சென்னிமலை :

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை போர்வைகள் மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் போர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்தியாவின் 60 சதவீத போர்வை தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத் தறியில் உற்பத்தியாகும் போர்வைகள் தான் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும் அடைப்புதறி என்று சொல்லக்கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர்.

    அடைப்பு தறி, விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு போர்வைகளை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். இங்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் போர்வைகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் போர்வைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ரூ.2 கோடி போர்வை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சென்னிமலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஜக்காடு போர்வை ஒன்றுக்கு ரூ.4 கூலி உயர்வும், 10-ம் நெம்பர் நூலை பயன்படுத்தி தயாராகும் போர்வை ஒன்றுக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றாற் போல் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது.

    இதனை அடுத்து 7 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் சென்னிமலை பகுதியில் வழக்கம்போல் விசைத்தறிகள் இயங்கும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து இன்று வழக்கம் போல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியது.இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    Next Story
    ×