search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6-வது நாளாக ஓய்வில் உள்ள விசைத்தறிகள்.
    X
    6-வது நாளாக ஓய்வில் உள்ள விசைத்தறிகள்.

    6-வது நாளாக நீடிக்கும் விசைத்தறியாளர்கள் போராட்டம்

    விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி பெட்ஷீட்கள், மற்றும் வீட்டு உபயோக துணி உற்பத்திகளில் சிறந்து விளங்குகிறது. இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்தியாவின் 60 சதவீத பெட்ஷீட் தேவைகளை சென்னிமலை பகுதியில் விசைத்தறிகளில் உற்பத்தியாகும் பெட்ஷீட்கள் தான் பூர்த்தி செய்கிறது.

    இங்கு சொந்தமாக விசைத்தறி வைத்து உற்பத்தி செய்யும் முதலாளிகளும், அடைப்புதறி என்று சொல்ல கூடிய தறி உரிமையாளர்களும் உள்ளனர். அடைப்பு தறி விசைத்தறி உரிமையாளர்கள் பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் நூல் பெற்று கூலிக்கு பெட்ஷீட்களை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.

    இதில் 2-க்கு 17 நூல் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் ஜக்காடு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்து விட்டனர்.

    ஆனால் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து 10-ம் நெம்பர் கலர் நூல் உற்பத்தி செய்து அதில் இருந்து 10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

    பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு கூலி மிக குறைவாக கொடுப்பதால் மிகவும் தொழில் நசிந்து வருகிறது. அதனால் தற்போது வழங்கும் கூலியில் 20 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து கடந்த 5 நாட்களாக அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6-வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது.

    அடைப்பு விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    10-ம் நெம்பர் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக தற்போது 2 க்கு 17 நூல் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 3 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    6 நாட்களாக போராட்டம் தொடந்து வரும் சூழ்நிலையில், ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று சென்னிமலை பகுதியில் செயல்பட கூடிய பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனமான பூம்புகார் டெக்ஸ், ஆந்திரா டெக்ஸ், அஜாம் டெக்ஸ், மேகலா டெக்ஸ், சேகர் டெக்ஸ், நந்தி டெக்ஸ், ஆகிய 6 ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், அடைப்புதறி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் பெட்ஷீட் தேவை அதிகரித்துள்ள நிலையில் விசைத்தறிகள் போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×